துபாயில் இருந்து தங்கம் கடத்தப்பட இருப்பதாகக் கிடைத்த உளவுத் தகவலின் அடிப்படையில், இரண்டு தங்கக் கடத்தல் சம்பவங்கள் திங்கட்கிழமையன்று கண்டறியப்பட்டன. முதல் வழக்கில், சிவகங்கையை சேர்ந்த சையத் முகமது புகாரி (51) என்பவர், பிளை துபாய் விமானத்தின் மூலம் துபாயில் இருந்து சென்னை வந்திறங்கியவுடன் வெளியே செல்லும் வழியில் இடைமறிக்கப்பட்டார். விசாரணையின் போது மலக்குடலில் தங்க பசையை கடத்தி வந்திருப்பதை ஒத்துக் கொண்டார். மேலும் சோதனையிட்ட போது, இரண்டு பொட்டலங்களில் தங்க பசை அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது. ரூ 25.5 லட்சம் மதிப்புள்ள 484 கிராம் தங்கம் அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டார்.
இரண்டாவது வழக்கில், ராமநாதபுரத்தை சேர்ந்த சையத் அலி (39) என்பவர், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தின் மூலம் துபாயில் இருந்து சென்னை வந்திறங்கியவுடன் வெளியே செல்லும் வழியில் இடைமறிக்கப்பட்டார்.
விசாரணையின் போது மலக்குடலில் தங்க பசையை கடத்தி வந்திருப்பதை ஒத்துக் கொண்டார். மேலும் சோதனையிட்ட போது, நான்கு பொட்டலங்களில் தங்க பசை அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது. ரூ 18.9 லட்சம் மதிப்புள்ள 358 கிராம் தங்கம் அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது.
சுங்க சட்டம் 1962-இன் கீழ், ரூ 44.4 லட்சம் மதிப்புடைய, 842 கிராம்கள் எடையுடைய 24 கேரட் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. ஒருவர் கைது செய்யப்பட்டார்.