சென்னை விமான நிலையத்தில் ரூ.1 கோடி மதிப்பிலான 2.21 கிலோ தங்கம் மற்றும் ரூ.14.32 லட்சம் மதிப்பிலான யூரோ கரன்சி பறிமுதல் –
சென்னை விமான நிலையத்திலிருந்து திங்கட்கிழமை காலையில் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் துபாய் செல்லவிருந்த சென்னையைச் சேர்ந்த முகமது ஹகீம் மற்றும் பீர் முகைதீன் ஆகிய இருவரை, அண்ணா சர்வதேச விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் இடைமறித்து சோதனை செய்தனர்.
அப்போது அவர்கள் வைத்திருந்த கைப்பையில் ரூ.14.32 லட்சம் மதிப்பிலான 17,850 யூரோ கரன்சிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததைக் கண்டுபிடித்து, பறிமுதல் செய்தனர்.
மற்றொரு சம்பவத்தில் ஏர் இந்தியா விமானத்தில் தில்லி செல்லவிருந்த புதுக்கோட்டையைச் சேர்ந்த பவுசல் கரீம் (21) மற்றும் திருச்சியைச் சேர்ந்த சையத் அஜீ்ஸ் (22), ஆகிய இருவரையும் சந்தேகத்தின் பேரில் சுங்கத்துறை அதிகாரிகள் அவர்களது உடமைகளைச் சோதனையிட்டனர்.
அப்போது அவர்களது கைப்பையில் இருந்த எட்டு பொட்டலங்களைப் பிரித்துப் பார்த்தபோது அதில் ரூ.99.91 லட்சம் மதிப்பிலான 2.21 கிலோ கிராம் தங்கம் மறைத்து வைக்கப்பட்டிருந்ததைக் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். தங்கத்தைக் கடத்திச் செல்ல முயன்ற அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
இது குறித்து தொடர் விசாரணை நடைபெற்று வருவதாக சென்னை சர்வதேச விமான நிலைய சுங்கத்துறை ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.