சஞ்சீப் பானர்ஜி சாடுவது நீதித் துறையையா ? அரசியல் தலைமையையா ? நீதிபதிகள் உயர் பதவிகளை அடைவதும் ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்திற்கு மாற்றப்படுவதும் நீதித்துறைக்குள் நிர்வாக ரீதியான நடைமுறையாகும். பதவி உயர்வுகள், இடமாற்றங்களின் போது ஒரு சிலருக்கு தாங்கள் எதிர்பார்த்த படி நடைபெறாமல் போயிருக்கலாம்.
ஜனநாயக நாட்டில் நீதித்துறை சுதந்திரமான அமைப்பாகச் செயல்பட வேண்டும் என்ற அடிப்படையிலேயே அதற்கான கட்டமைப்புகள் உருவாக்கப் பட்டிருக்கின்றன.கடந்த 11 மாதங்களாக சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பணியாற்றிய சஞ்சீப் பானர்ஜி மேகாலயா நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு இருக்கிறார்.
அதில் அவருக்கு முழு மகிழ்ச்சி இருக்க வாய்ப்பில்லை. எனினும், அந்த இடமாற்றத்தை ஏற்றுக்கொண்டு அவர் சென்னையிலிருந்து விடைபெற்று சென்று விட்டார். ஆனால், அவர் மேகாலயா செல்லும் முன் ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார். அதுதான் மிகப் பெரிய கேள்விக் குறியாயிருக்கிறது. அதுவும் அவர் அதைச் சென்னை உயர்நீதிமன்றத்தினுடைய கடித திண்டிலேயே (Letter pad) அந்த அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்.
அதில் அவர் தனக்கு 11 மாதங்களாக ஒத்துழைப்பு கொடுத்த வழக்கறிஞர்கள், நீதிபதிகள், ஊழியர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்ததோடு நிற்காமல் ,”My regret is that i could not completely demolish the feudal culture which in you serve’ – அதாவது இன்று நிலவும் நிலப் பிரபுத்துவ செயல்பாடுகளை என்னால் முற்றாக ஒழிக்க முடியவில்லை” என்றும் சாடி இருக்கிறார்.
கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த நீதிபதி கர்ணன் அவர்கள் நீதிபதிகளையும், நீதித்துறையையும் பற்றி ஒரு கருத்தைச் சொன்னதற்காக அவர் உச்ச நீதிமன்றத்தாலேயே தண்டிக்கப்பட்டு கல்கத்தா சிறையில் அடைக்கப்பட்டார். இப்பொழுது சஞ்சீப் பானர்ஜி அவர்கள் ’feudal culture’ என்று சொல்லியிருப்பது நீதித்துறையின் மீதானதா? அரசியல் தலைமையின் மீதானதா? சமூகத்தின் மீதானதா? என்பது குறித்து நாட்டு மக்களுக்கு தெரிந்தாக வேண்டும்.
சாதாரண வழக்கறிஞர்களோ அல்லது குடிமகனோ பாதிக்கப்பட்டாலும் நீதித்துறையை பற்றி விமர்சிக்க முடியாத நிலை இருக்கும் போது, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த ஒருவர் இதுபோன்று எப்படி சொல்ல முடியும்? அந்த கருத்து எதன் மீதான தாக்குதல் என்பதே இப்பொழுது எழுந்திருக்கும் கேள்வியாகும்.
அவருடைய அந்த பொறுப்பிலிருந்து யாரை குற்றம் சுமத்தி இருந்தாலும் அது தவறு தானே?அவருடைய கருத்தை சட்டத்துறை உலகம் எளிதில் கடந்து போகாது; கடந்து போகவும் கூடாது என்பதே எனது எதிர்பார்ப்பு. தமிழகத்தினுடைய அறிவுஜீவிகளில் பலரும் கூட அவர் மாற்றம் குறித்து ஆதரவு கருத்துகளைத் தெரிவித்து இருந்தார்கள். இப்பொழுது அவர் சொல்லி இருக்கக்கூடிய ,”My regret is that i could not completely demolish the feudal culture which in you serve’ என்பது எதை எதையெல்லாம் குறிக்கிறது என்பதை அவர் மக்களுக்கு தெளிவு படுத்த வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.
டாக்டர்.க.கிருஷ்ணசாமி, MD, நிறுவனர்-தலைவர்,புதிய தமிழகம் கட்சி.