ஆப்பிரிக்காவில் இருந்து தபால் பார்சல் மூலமாக போதைப் பொருள் கடத்தி வரப்பட்டுள்ளதாக சென்னை சுங்கத்துறைக்கு உளவுத்தகவல் கிடைத்தது. இதையடுத்து, சென்னை வெளிநாட்டு தபால் அலுவலகத்துக்கு, கென்யா தலைநகர் நைரோபியிலிருந்து வந்த 5 பார்சல்கள் கைப்பற்றப்பட்டு சோதனையிடப்பட்டன.
பூந்தொட்டிகள் என தெரிவிக்கப்பட்டிருந்த பார்சலை பிரித்து பார்த்தபோது, 11 மர குவளைகள் வெள்ளை நிற பேப்பரில் சுற்றப்பட்டிருந்தன. அவற்றை பிரித்து பார்த்த போது, இளஞ்சிவப்பு நிற பாலீத்தின் கவரில் காட் போதை இலைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. இந்த குவளைகளிலிருந்து மொத்தம் 46.8 கிலோ காட் இலைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் சர்வதேச சந்தை மதிப்பு ரூ.1.17 கோடி.
இந்த கடத்தல் தொடர்பாக சென்னையில் உள்ள ஒரு ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றும், 27 வயது ஏரோனாட்டிக்கல் இன்ஜினியர் கைது செய்யப்பட்டார்.
‘கேதேயுடுலிஸ்’ எனப்படும் இந்த காட் இலைகள் ‘மிரா’ எனவும் அழைக்கப்படுகிறது. இது கிழக்கு ஆப்பிரிக்கா மற்றும் தெற்கு ஏமனில் விளைவிக்கப்படும் ஒருவித போதைத் தரும் இலை வகையாகும்.
கடந்தாண்டு மார்ச் மாதம், ரூ.40 லட்சம் மதிப்புள்ள 15.6 கிலோ காட் இலைகளை, சென்னை வெளிநாட்டு தபால் அலுவலகத்தில் சுங்கத்துறை பறிமுதல் செய்தது. அவை எத்தியோப்பியாவில் இருந்து வந்தது.
இந்த கடத்தல் தொடர்பாக மேலும் விசாரணை நடைப்பெறுவதாக, சென்னை சர்வதேச விமான நிலைய சுங்க ஆணையர் தெரிவித்துள்ளார்.