கடந்த ஆண்டில் மோடி அரசு மேற்கொண்ட ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பை “சட்டவிரோதமானது மற்றும் செல்லாதது” என்று சீனா கூறியதற்கு இந்தியா அரசு கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளது. மேலும் மற்ற நாடுகளின் உள் விவகாரங்கள் குறித்து கருத்து தெரிவிக்க வேண்டாம் என்றும் சீனாவுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த அரசமைப்புச் சட்டப்பிரிவு 370 சிறப்புரிமைகளை மத்திய அரசு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி நீக்கியது மற்றும் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை லடாக் மற்றும் ஜம்மு காஷ்மீர் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது அறிவித்தது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் அரசமைப்புச் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டு ஓராண்டு முடிவடைந்த நிலையில், ஜம்மு-காஷ்மீர் குறித்து சீனாவின் கருத்துக்களுக்கு சரியான பதிலடியை இந்திய வெளிவிவகார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா தந்துள்ளார். ஜம்மு-காஷ்மீர் விஷயத்தில் தலையிட சீனாவுக்கு எந்தவித உரிமையும் இல்லை என்று அவர் கூறினார்.
முன்னதாக, சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் பெய்ஜிங்கில், “ஜம்மு-காஷ்மீரின் நிலைமை குறித்து ஒருதலைப்பட்சமாக எடுக்கப்பட்டஒவ்வொரு மாற்றமும் சட்டவிரோதமானது மற்றும் தவறானது என்று கூறினார்.
சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் கருத்துக்கு பதில் அளித்த ஸ்ரீவஸ்தவா, இந்த விஷயத்தில் சீனவுக்கு எந்த உரிமையும் இல்லை, மற்ற நாடுகளின் உள் விவகாரங்கள் குறித்து கருத்துத் தெரிவிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று கூறினார்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் மறுசீரமைப்பை சீனா விமர்சித்துள்ளது. மேலும் லடாக்கை ஒரு யூனியன் பிரதேசமாக மாற்றியதற்காக மத்திய அரசை சாடியுள்ளது. லடாக்கின் பல பகுதிகளை சீனா உரிமை கோருகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது
முதலாவதாக, காஷ்மீர் பிரச்சினை பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான ஒரு சர்ச்சையாகும். பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இருதரப்பு ஒப்பந்தங்கள் மூலம் ஜம்மு-காஷ்மீர் பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்பது தான் உண்மை என்று அவர் கூறினார்.
இரண்டாவதாக, காஷ்மீர் பிராந்தியத்தில் எந்தவொரு ஒருதலைப்பட்ச மாற்றமும் சட்டவிரோதமானது மற்றும் தவறானது. மூன்றாவதாக, காஷ்மீர் பிராந்திய பிரச்சினை சம்பந்தப்பட்ட தரப்பினரிடையே பேச்சுவார்த்தை மற்றும் ஆலோசனை மூலம் முறையாகவும் அமைதியாகவும் தீர்க்கப்பட வேண்டும் என்று வாங் கூறினார்.
காஷ்மீர் பிரச்சினையில் சீனா தனது நட்பு நாடான பாகிஸ்தானுடன் எப்போதும் பக்கபலமாக இருந்து வருகிறது.
இந்தியாவின் முடிவைத் தொடர்ந்து, ஐ.நா.பாதுகாப்புக் குழுவில் காஷ்மீர் பிரச்சினையை எழுப்ப சீனா பல முயற்சிகளை மேற்கொண்டது. இருப்பினும், இந்த முயற்சிகள் உலக அமைப்பின் பிற உறுப்பு நாடுகளால் நிராகரிக்கப்பட்டன.
சீனாவின் இந்த செயலுக்கு இந்தியா தனது கண்டனங்களை பதிவு செய்துள்ளது.