ஹரியானா, ஜம்மு – காஷ்மீர் சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, டில்லியில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்துக்கு பிரதமர் மோடி நேற்று மாலை சென்றார். சிறப்பான வரவேற்பு கொடுத்த கட்சித் தொண்டர்கள் இடையே அவர் பேசியதாவது:
ஹரியானா மக்கள் மிகபெரும் அற்புதத்தை நிகழ்த்தி உள்ளனர். நவராத்திரியின் ஆறாவது நாளில் காத்யாயினி அம்மன்,சிங்கத்தின் மீது அமர்ந்து,கையில் தாமரையுடன் காட்சி அளிக்கிறார். அவர் நம்மை ஆசிர்வதித்துள்ளார்.ஹரியானாவில் தொடர்ந்து 3வது முறையாக தாமரை மலர்ந்துள்ளது.
ஜம்மு – காஷ்மீரில் மிகவும் அமைதியான முறையில் தேர்தல் நடத்தப்பட்டது, நம் ஜனநாயகம், நம் அரசியலமைப்பு சட்டத்துக்கு கிடைத்த வெற்றி. அங்கு வெற்றி பெற்றுள்ள தேசிய மாநாட்டுக் கட்சிக்கு வாழ்த்து தெரிவிக்கிறேன். ஓட்டு சதவீதத்தை பார்க்கும்போது, அங்கு பா.ஜ., முன்னிலையில் உள்ளது.
ஹரியானாவில் கிடைத்த இந்த வெற்றி, கட்சித் தொண்டர்கள், கட்சித் தலைவர் நட்டா, முதல்வர் நயாப் சிங் சைனி உள்ளிட்டோரின் கூட்டு முயற்சியாகும்.
கடந்த, 1966ல் ஹரியானா உருவாக்கப்பட்டதில் இருந்து, இதுவரை, 13 தேர்தல்கள் நடந்துள்ளன. முதல், 10 தேர்தல்களில் மக்கள் மாறி மாறி ஆதரவு அளித்தனர். ஆனால், பா.ஜ.,வுக்கு தான், தொடர்ந்து மூன்றாவது முறை ஆட்சி அமைக்கும் வாய்ப்பை தந்துள்ளனர்.
பா.ஜ., எங்கு ஆட்சி அமைத்தாலும், அதற்கு மக்கள் தொடர்ந்து ஆதரவு அளிக்கின்றனர். ஆனால், காங்கிரஸ் கட்சி, 2011க்குப் பிறகு எந்த ஒரு மாநிலத்திலும் தொடர்ந்து வென்றதில்லை.
காங்கிரஸ் நம் நாட்டை பலவீனப்படுத்த முயற்சிக்கிறது. நம் நாட்டுக்கு எதிராக தொடர்ந்து பொய் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது. சில வெளிநாட்டு சக்திகளுடன் இணைந்து காங்., செய்யும் சதிகளை நாம் முறியடிப்போம். வேளாண் சட்டங்கள் தொடர்பாக காங்கிரஸ் பொய் பிரசாரம் செய்ததற்கு, ஹரியானா மக்கள் இந்தத் தேர்தலில் தகுந்த பதிலடி கொடுத்துள்ளனர்.
நாட்டுடன் நாங்கள் உள்ளோம் என்பதை அவர்கள் உணர்த்தியுள்ளனர். இதுபோலவே, ஒவ்வொரு பிரிவினரும், நாட்டுடன் இணைந்து செயலாற்றி வருகின்றனர்.
ஜம்மு – காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டால், பற்றி எரியும் என்று மிரட்டினர். இன்று அமைதியான முறையில் தேர்தல் நடந்து, புதிய அரசு அமைய உள்ளது. காஷ்மீர் தற்போது அழகாக பூத்து வருகிறது. ஊரடங்கு உத்தரவு, பிரிவினைவாதம் போன்றவை அங்கு தற்போது இல்லை. ஜனநாயகம் அங்கு சிறப்பாக உள்ளது.
காங்கிரஸ் தன்னுடன் கூட்டணி அமைத்தவர்களை நசுக்கி வந்துள்ளது. லோக்சபா தேர்தலின்போதும், அதன்பிறகும் அதை நாம் பார்த்தோம். தற்போது, அதனுடன் ஏன் கூட்டணி வைத்தோம் என்று, தேசிய மாநாட்டு கட்சி சிந்திக்கத் துவங்கும்.இவ்வாறு பேசினார்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















