நெல்லையின் கிழக்கு மாவட்ட தலைவர் ஜெயக்குமார் சடலமாக மீட்கப்பட்டது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது, இந்த நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முக்கிய ஆதாரத்தை வெளியிட்டுள்ளார். இது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரான KPK ஜெயக்குமார் தனசிங் 2 நாட்கள் காணவில்லை என கூறப்பட்ட நிலையில் வீட்டின் அருகே உள்ள தோட்டத்தில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். கடந்த வியாழனன்று இரவு 7.45 மணிக்கு வீட்டில் இருந்து சென்ற KPK ஜெயக்குமார் தனசிங் வீடு திரும்பவில்லை என அவரது மகன் காவல்துறையிடம் புகாரளித்திருந்த நிலையில், இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
இந்த நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் X தளப்பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் விடுத்துள்ள பதிவில், “காணாமல் போனதாகத் தேடப்பட்டு வந்த காங்கிரஸ் கட்சியின், நெல்லை கிழக்கு மாவட்டத் தலைவர் திரு. ஜெயக்குமார் அவர்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளது மிகுந்த அதிர்ச்சியைத் தருகிறது.
கடந்த ஏப்ரல் 30 அன்றே, மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக திரு.ஜெயக்குமார் அவர்கள் புகார் அளித்திருப்பதாகத் தெரிகிறது. குறிப்பாக, நாங்குநேரி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் திரு.தங்கபாலு உள்ளிட்டவர்கள் பெயர்களை, அந்தப் புகார்க் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார். ஆனாலும், காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை.

காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவரின் புகாருக்கே, திமுக ஆட்சியில் இதுதான் நிலைமை என்றால், சாமானிய பொதுமக்கள் எதிர்கொள்ளும் சட்ட ஒழுங்கு பாதுகாப்பு குறித்த கேள்வி பலமாக எழுகிறது.உடனடியாக, மறைந்த காங்கிரஸ் திருநெல்வேலி கிழக்கு மாவட்டத் தலைவர் திரு. ஜெயக்குமார் அவர்கள் புகாரில் குறிப்பிட்டுள்ள அனைவரிடமும் விசாரணை நடத்தி, உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டுமென்று திமுக அரசை வலியுறுத்துகிறேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















