இந்தியாவில் இதுவரை கொவிட்-19 நோய் தொற்று 195 பேருக்கு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 32 பேர் வெளிநாட்டவர்கள். மத்திய அரசு வெளியிட்டுள்ள இன்று (20.03.2020) காலை 9 மணி நிலவரப்படியான அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களில் 19 பேர் சிகிச்சைக்கு பிறகு குணமடைந்து வீட்டிற்கு திரும்பியுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் குடிபெயர்ந்து சென்றிருப்பதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது. இதுவரை கொவிட்-19 நோய் தொற்றுக்கு இந்தியாவில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 47 பேருக்கு கொவிட்-19 நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அடுத்தபடியாக கேரளாவில் 28 பேருக்கும், உத்தரப்பிரதேசத்தில் 19 பேருக்கும், தில்லியில் 17 பேருக்கும், கர்நாடகத்தில் 15 பேருக்கும் இந்த நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 4 பேருக்கு இந்த நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் ஒருவர் சிகிச்சைக்கு பிறகு குணமடைந்து வீடு திரும்பியுள்ளார் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.
ஹரியானாவில் 14 வெளிநாட்டவர் உட்பட 17 பேருக்கும், லடாக் யூனியன் பிரதேசத்தில் 10 பேருக்கும், தெலங்கானாவில் 7 பேருக்கும், ஜம்மு யூனியன் பிரதேசத்தில் 4 பேருக்கும், இந்த நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுவரை நாட்டின் விமான நிலையங்களில் 14,31,734 பயணிகளிடம் இந்த வைரசுக்கான சோதனைகள் நடத்தப்பட்டிருப்பதாகவும் அரசு அறிக்கை தெரிவிக்கிறது.