கொவிட்-19 பொது முடக்கம் காரணமாக, பொருள் போக்குவரத்து பாதிப்பு உள்பட ஏராளமான சவால்களை சந்தித்து வரும் நிலையில், ரசாயனம் மற்றும் பெட்ரோகெமிகல்ஸ் துறையின் கீழ் இயங்கும் பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் பூச்சிக்கொல்லி லிமிடெட் (Hindustan Insecticides Limited – HIL) இந்தியா நிறுவனம், நாடு முழுவதும் உள்ள விவசாய சமூகத்தினருக்கு போதுமான அளவு பூச்சிக்கொல்லிகள் விநியோகத்தை உறுதி செய்துள்ளது. அதே சமயம், ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து DDT பூச்சி மருந்து ஏற்றுமதிக்கான ஆர்டர்களை அந்நிறுவனம் எதிர்பார்த்துள்ளது.
தெற்கு ஆப்பிரிக்கப் பிராந்தியத்தில் வரும் மாதங்களில் மலேரியா பரவுவதற்கு வாய்ப்பு இருப்பதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ள நிலையில், DDT பூச்சி மருந்து விநியோகத்துக்கான கடிதத்தை தெற்கு ஆப்பிரிக்க மேம்பாட்டு சமுதாயத்தின் பத்து நாடுகளுக்கு எச்ஐஎல் எழுதியுள்ளது.
நாட்டில் ஊரடங்கு அமலில் உள்ள இக்கால கட்டத்தில் மே மாதம் 7-ஆம் தேதி வரை, ஊரடங்கின் பாதிப்பை விவசாயிகள் உணராமல் இருக்கும் வகையில், எச்ஐஎல் நிறுவனம் 120.40 மெட்ரிக் டன் DDT டெக்னிகல், 226 மெட்ரிக் டன் DDT 50% wdp பூச்சி மருந்து, 85 மெட்ரிக் டன் மாலதியான் டெக்னிகல், 16.38 மெட்ரிக் டன் ஹில்கோல்டு, 27.66 மெட்ரிக் டன் பார்முலேசன்ஸ் ஆகியவற்றை தயாரித்துள்ளது. இவை தவிர, வெட்டுக்கிளிக் கட்டுப்பாட்டு திட்டத்துக்கான மாலதியான் டெக்னிகல் விநியோகத்தை அது தொடர்ந்து வருகிறது. ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களில் விவசாய அமைச்சகத்தின் வெட்டுக்கிளி கட்டுப்பாட்டுத் திட்டத்தைச் செயல்படுத்த இந்த மருந்து விநியோகம் தொடர்கிறது. சிறு உயிரிகளால் பரவும் நோய்க் கட்டுப்பாட்டு தேசிய திட்டத்தின் விநியோக ஆர்டருக்கு இணங்க, ஒடிசாவுக்கு (30 மெட்ரிக் டன்) DDT 50% WDP பூச்சி மருந்து அனுப்பப்பட்டுள்ளது.