மொத்த பாதிப்புகளுடன் ஒப்பிடும் போது, தற்போது சிகிச்சையில் உள்ள கொரோனாவைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை இந்தியாவில் தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது.
நாட்டின் மொத்த பாதிப்புகளில் தற்போது சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 15.11 சதவீதம் ஆகும் (9,40,441). ஆகஸ்டு 1 அன்று 33.32 சதவீதமாக இருந்த சிகிச்சை பெறுபவர்களின் விகிதம், தற்போது 15.11சதவீதமாக இருக்கிறது. இரண்டு மாதங்களில் பாதிக்கும் அதிகமாகக் குறைந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 86,428நோயாளிகள் குணமடைந்த நிலையில், குணமடைந்தோரின் விகிதம் 83.33சதவீதத்தை இன்று தொட்டுள்ளது. இது வரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 51,87,825ஆகும்.
தினமும் அதிக அளவிலான குணமடைதல்களை இந்தியா கண்டு வரும் நிலையில், புதிய பாதிப்புகளை விட குணமடைதல்கள் அதிகம் என்று பல மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் தகவல் அளித்து வருகின்றன.
தினமும் குணமடைவோரின் சராசரி எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவில் கடந்த சில நாட்களாக 90 ஆயிரத்தை தொட்டுள்ளது.
முழுமையான அணுகுமுறையின் மூலம் மத்திய அரசின் தலைமையிலான திட்டங்களை கவனத்துடனும், திறமையுடனும் செயல்படுத்திய காரணத்தால் குணமடைபவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் அதிக அளவில் உயர்ந்து வருகிறது.
பரிசோதனை, கண்டறிதல், கண்காணிப்பு, சிகிச்சை மற்றும் தொழில்நுட்பம் ஆகிய ஐந்து அம்சங்களின் மீது கவனம் செலுத்தியதால் நாடு முழுவதும் சிறப்பான பலன் கிடைத்து வருகிறது.