கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பாஜக அலுவலகத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
தமிழக அரசு குறித்து நான் கூறும் குற்றச்சாட்டுகள் பொய்யெனில் அமைச்சர்கள் என் மீது வழக்கு தொடரட்டும். அதனை நீதிமன்றத்தில் சந்திக்கத் தயார். திமுக அமைச்சர்கள் பேசுவது அடுப்புக்கரி சட்டியை பார்த்து நீ கருப்பாக உள்ளாய் என்று சொல்வது போல் உள்ளது. மாதம் மாதம் திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியல் வெளியிடப்படும். ஊழலை தடுப்பதற்கு அதிகாரிகளை மாற்றுவதால் எந்த பயனும் இல்லை. முதல்வர் தான் ஊழல் நடைபெறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். திமுகவினர் அனைவரும் அனைவருக்கும் தெரியும் படி ஊழல்கள் செய்து வருகின்றனர். நியூட்ரிசன் கிட் டெண்டர் குறித்து இதுவரை திறக்கப்படவில்லை. இது குறித்து சமீப காலங்களாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஏன் செய்தியாளர்களை சந்திக்கவில்லை?
திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல் காவல் நிலையத்தில் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர். இது குறித்து தமிழக முதல்வர் தான் விளக்கம் அளிக்க வேண்டுமே தவிர, டிஜிபி உள்ளிட்ட காவல்துறையினர் விளக்கமளிப்பது போதாது. திமுக அரசு எதிர்க்கட்சியாக இருந்தபோது சாத்தான்குளம் விவகாரத்தை அரசியல் நிகழ்வாக மாற்றியது. தற்போது காவல்துறை செயலின்மை என்பது அதிகரித்துள்ளது. பல் பிடுங்கப்பட்ட பாம்பு போல் தமிழக காவல்துறை இருக்கிறது. தமிழக முதல்வர் காவல் நிலையங்களில் ஆய்வு செய்ய ஆரம்பித்த பிறகு தான் குற்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளது.
கோவை மாநகராட்சியில் பொருத்தவரை இங்குள்ள திமுக கவுன்சிலர்கள் ராஜினாமா செய்து கொள்ளும் அளவிற்கு நிர்வாகம் செயல்படுகிறது. தமிழகத்தில் கஞ்சா விற்பனை அதிகரித்து வருகிறது. டுவிட் செய்பவர்கள் மீது குண்டர் சட்டம் போடும் காவல் துறையினர் ஏன் கஞ்சா விற்பனை செய்பவர்கள் மீது ஏன் குண்டாஸ் போடுவதில்லை?. மேகதாது அணை விவகாரத்தை பொறுத்தவரை அணை கட்ட வேண்டும் என யார் வந்தாலும், தமிழக அரசு அதனை எதிர்க்க வேண்டும். இதற்கு பாஜக துணை நிற்கும். இதனை அனைத்து கட்சி கூட்டத்தில் பாஜக வெளிப்படுத்தி உள்ளது. மேகதாதுவில் மூன்று மாநிலங்களில் ஒப்புதல் இல்லாமல் அணை கட்ட முடியாது.
அதிமுகவுடன் போட்டி போடும் மனப்பான்மை தங்களுக்கு இல்லை. பாஜக வை வளர்க்கவே நாங்கள் ஈடுபட்டு வருகிறோம். நாங்கள் கருத்தியல் அடிப்படையில் செயல்பட்டு வருகிறோம். அதிமுகவில் இருக்கும் ஒவ்வொருவரும் அவர்களது கட்சி முதலிடத்தில் இருக்க வேண்டும் என்று எவ்வாறு நினைக்கிறார்களோ, அதே போல்தான் பாஜகவில் இருக்கும் அனைவரும் எங்கள் கட்சி முதலிடத்தில் இருக்க வேண்டுமென நினைக்கிறோம். இதில் தவறில்லை.
தமிழகத்தில் தற்போது கம்யூனிஸ்ட் கட்சி எங்கே இருக்கிறது? கேரள தங்க கடத்தல் விவகாரத்தில் முதல்வர் பினராயி விஜயன் உள்ளார் என ஸ்வப்னா கூறி உள்ளார். லூலூ மால் வந்தால் முதலில் பாதிக்கப்படுபவர்கள் சிறு குறு தொழில் செய்பவர்கள் தான். அப்படியிருக்க கம்யூனிஸ்ட் கட்சிகள் ஏன் அதைப்பற்றி பேசுவதில்லை?. அமைச்சர் சேகர்பாபு அரசியல் லாபத்திற்காக சிதம்பரம் தீட்சீதர்கள் விவகாரத்தில் செயல்படுகிறார். நீதிமன்ற தீர்ப்பு இருக்கும் பொழுது கோவிலுக்குள் ஏன் சென்றார்கள் என்பதை அமைச்சர் சேகர்பாபு விளக்க வேண்டும்.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பட ரிலீஸ் நிகழ்வுகளில் தான் இருக்கிறாரே தவிர, பள்ளிகள் பக்கம் செல்வதில்லை. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் எப்படி எல்லாம் செயல்படக் கூடாதோ அப்படி எல்லாம் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செயல்படுகிறார்.”நேஷனல் ஹெரால்டு பத்திரிகை விவகாரத்தில் டெல்லி அமலாக்கத்துறை சட்டத்திற்கு உட்பட்டு ராகுல்காந்தியை விசாரணைக்கு அழைத்துள்ளனர். இதற்காக டெல்லி ஸ்தம்பிக்கும் அளவிற்கு காங்கிரஸ் கட்சியினர் அங்கு கூச்சல் குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றனர். எதற்காக ராகுல் காந்தி, சோனியா காந்தி தவறு செய்யாதவர்கள் போல் நடிக்க வேண்டும்? சோனியா காந்தி, ராகுல் காந்திக்கு 83 சதவிகிதம் பங்கு இருப்பதால் அமலாக்கப் பிரிவு விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்காகத் தான் காங்கிரஸ் நாடகம் ஆடுவதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். சசிகலாவை அதிமுகவில் இணைப்பது குறித்து பலரும் கருத்து தெரிவிப்பது அவரவர்கள் தனிப்பட்ட கருத்து. அவரை கட்சியில் இணைப்பது குறித்து அந்தக் கட்சி தான் முடிவு செய்ய வேண்டும். சசிகலா கட்சியில் இணைவது குறித்து அதிமுக மனது புண்படும் வகையில் பாஜகவின் செயல்பாடு இருக்காது” எனத் தெரிவித்தார்.