விண்கல்லால் 6,900 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட பள்ளம் நாசா தகவல்.
இந்திய நாட்டின்,குஜராத் மாநிலம்,பன்னி புல்வெளி காப்புக் காடுகள் எனும் பகுதியில் உள்ள இப்பள்ளத்தை நாசாவின் லேன்ட்சாட் 8 செயற்கைக்கோள் படமெடுத்துள்ளது. இந்த பள்ளம் ஏற்பட்டுள்ள கிராமத்தின் பெயரைச் சேர்த்து, லூனா பள்ளம் என இதற்கு பெயரிடப்பட்டுள்ளது. இந்த மிகப்பெரிய பள்ளம் விண்கல் மோதியதால் ஏற்பட்டிருக்கலாம் என விஞ்ஞானிகள் யூகிக்கின்றனர்.
சமீபத்தில் நடத்தப்பட்ட புவி வேதியியல் பகுப்பாய்வு முடிவுகளின்படி விண்கல் மோதியதால் இந்த பள்ளம் ஏற்பட்டிருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்த லூனா பள்ளம் 1.8 கிலோமீட்டர் விட்டம் உடையதாகவும், 20 அடி ஆழம் கொண்டதாகவும் உள்ளது. அகமதாபாத்திலிருந்து 320 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
வெள்ளை உப்பு பாலைவனம் எனப்படும் குஜராத்தின் கட்ச் பாலைவனம் அருகே இந்த பள்ளம் ஏற்பட்டுள்ளது. தாழ்தள பகுதி என்பதால், இப்பள்ளத்தில் நீர் உள்ளது. கடந்த 2022ம் ஆண்டில் வறட்சி காலத்தில் இப்பள்ளத்தின் மாதிரிகளை சோதனை செய்ததில் அதில் அரியவகை தனிமங்களான இரிடியம் போன்றவை இருந்தது தெரியவந்துள்ளது.
இதனால் இப்பள்ளம் கடும் வெப்பம் மற்றும் அழுத்ததால் ஏற்பட்டுள்ளது உறுதியாவதாகவும் விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர். இப்பள்ளம் ஹரப்பா நாகரீகத்தையொட்டிய காலத்தில், சுமார் 6,900 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்டிருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியிலுள்ள புல்வெளி காப்புக் காடுகள் பெரும்பாலும் நீரில் மூழ்கியிருக்கும்.
உலகம் முழுவதும் பூமி மீது விண்கல் மோதியதால் உருவான பள்ளங்கள், 200க்கும் குறைவாகவே கண்டறியப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















