பிரதமர் நரேந்திர மோடியின் அன்பான உத்தரவை பின்பற்றி, அனைவரும் வீட்டில் தேசியக் கொடி ஏற்ற வேண்டும் என்று நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
பாரத தேசத்தின் 75-வது சுதந்திர தின விழாவை பிரம்மாண்டமாகக் கொண்டாட மத்திய அரசு பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகிறது. இதன் ஒரு புகுதியாக, தேசியக் கொடி விதிகளிலேயே மத்திய அரசு மாற்றம் செய்தது. அதாவது, கையால் நெய்யப்பட்ட பருத்தி துணியால் தயாரிக்கப்பட்ட தேசியக் கொடிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பது விதி. ஆனால், 75-வது சுதந்திர தினத்தை பாரத தேசத்திலுள்ள அனைவரின் வீடுகளிலும் தேசியக் கொடியேற்றி கொண்டாட வேண்டும் என்று பிரமதர் மோடி வேண்டுகோள் விடுத்திருக்கிறார். ஆகவே, கைத்தறி கொடியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டு, இயந்திரத்தின் மூலம் பாலியஸ்டர், பருத்தி, கம்பளி, பட்டு போன்றவற்றால் தயாரிக்கப்பட்ட தேசியக் கொடிகளையும் பயன்படுத்தலாம் என்று மத்திய அரசு அனுமதி அளித்திருக்கிறது.
மேலும், சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 2-ம் தேதி முதல் ஆகஸ்ட் 15-ம் தேதி வரை சமூக வலைதள கணக்குகளில் தங்கள் சுயவிவரப் படங்களில் தேசியக் கொடியை வைக்குமாறு பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார். தவிர, ஜூலை 31-ம் தேதி நடந்த மன் கி பாத் வானொலி நிகழ்ச்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, “இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கிறது. இந்த வரலாற்று தருணத்தை கொண்டாடும் வகையில், ஆகஸ்ட் 13-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடி ஏற்ற சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. ஆகவே, இந்த இயக்கத்தில் இணைந்து உங்கள் வீடுகளிலும் தேசியக் கொடியை ஏற்றுங்கள்” என்று கேட்டுக் கொண்டிருந்தார்.
இந்த நிலையில்தான், இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் பிரதமரின் அன்பான வேண்டுகோளை ஏற்று, அனைவரின் வீடுகளிலும் தேசியக்கொடி ஏற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள காணொளியில், “இந்தியர்கள் அனைவருக்கும் எனது பணிவான வணக்கம். இன்று சுதந்திரக் காற்றை சுவாசிக்கிறோம். சுதந்திரமாக சிந்திக்கிறோம். சுதந்திரமாக செயல்படுகிறோம். இவை அனைத்தும் 75 ஆண்டுகளுக்கு முன்பு வெறும் கனவு. 75-வது சுதந்திர தினத்தை கொண்டாட வேண்டும் என்று நமது பாரத பிரதமர் அன்புடன் கட்டளையிட்டிருக்கிறார். இது ஒரு கட்டளை அல்ல, ஒரு கடமை. சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில், இந்த மூவர்ணக் கொடியை நம் வீடுகளில் ஏற்றி, தாய் தந்தையரை வணங்குவது போல், அன்னை திருநாட்டை வழிபடுவோம்” என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















