தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அறிக்கை ஒன்றிய வெளியிட்டுள்ளார்.அதில்,உலகெங்கும் உள்ள அய்யா வைகுண்டர் பக்தர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் அய்யா வைகுண்டரின் அவதார விழாவுக்கு, திமுக அரசு பல்வேறு கெடுபிடிகள் விதித்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. திருநெல்வேலி மாவட்டம் பாளையம்கோட்டை அய்யா வைகுண்டபதிக்குள் நுழைந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குவதைத் தடுத்து, சமையல் பாத்திரங்களை எடுத்துச் சென்றிருக்கிறது காவல்துறை. இதனால், அய்யா வைகுண்டரின் பக்தர்கள் மனம் புண்பட்டிருக்கிறார்கள்.
https://x.com/annamalai_k/status/1896834722019582265
ஆன்மீக பூமியான தமிழகத்தில், தொடர்ந்து பக்தர்களுக்கு இடையூறு செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறது திமுக அரசு. போலி மதச்சார்பின்மை பேசி, தமிழகத்தின் ஆன்மீக நம்பிக்கைகளை, இது போன்ற அடாவடித்தனமான நடவடிக்கைகளால் சிதைத்து விடலாம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் திரு. ஸ்டாலின்.
திமுக அரசின் இந்த அராஜகப் போக்கினை வன்மையாகக் கண்டிக்கிறோம். அய்யா வைகுண்டரின் அவதார தினமான இன்று, பக்தர்கள் மனதைப் புண்படுத்தியதற்கு, முதலமைச்சர் மன்னிப்பு கேட்பதோடு, இந்த முறைகேடான நடவடிக்கையில் ஈடுபட்ட காவல்துறையினர் மீதும், இதன் பின்னணியில் உள்ளவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், வலியுறுத்துகிறோம்.