பாஜக பிரமுகரின் டீக்கடையை அடித்து உடைத்த வழக்கில் திமுக பிரமுகரின் அடியாட்கள் 5 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். திமுக பஞ்சாயத்து தலைவர் தலைமறைவாகியுள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் அரியகுளம் சாரதா கல்லூரி எதிரே வேல் கண்ணன் என்பவருக்கு சொந்தமான டீக்கடை உள்ளது. இவர் பாரதிய ஜனதா கட்சியின் தமிழ் வளர்ச்சி பிரிவு நெல்லை மாவட்ட தலைவராக உள்ளார். கண்ணனின் டீக்கடை அருகே பாரதிய ஜனதா கட்சி தொடர்பான பேனர் ஒன்று வைக்கப்பட்டிருந்தது. அந்த பேனரை மேல் புத்தனேரி பஞ்சாயத்து தலைவரும் திமுக பிரமுகருமான மனோஜ் ஆனந்த், அவரது தந்தை கண்ணன் மற்றும் சிலர் சேர்ந்து கிழித்துள்ளனர்.
பேனர் கிழிக்கப்பட்டது தொடர்பாக பாரதிய ஜனதா கட்சியின் தமிழ் வளர்ச்சி பிரிவு மாவட்ட தலைவர் வேல் கண்ணன் திருநெல்வேலி தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த நிலையில் வெள்ளி கிழமை இரவு வேல் கண்ணனின் தேநீர் கடைக்கு வந்த பத்துக்கும் மேற்பட்ட நபர்கள் கடையை அடித்து உடைத்தனர். கடையில் பணிபுரியும் பாலசுப்பிரமணியும் மீதும் தாக்குதல் நடத்தினர். கடையின் அருகே நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களையும் அடித்து நொறுக்கினர். தாக்குதல் சம்பவங்களை அந்த வழியாக சென்றவர்கள் மற்றும் குடியிருப்பு வாசிகள் செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.
பாஜக நிர்வாகியின் கடை தாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நெல்லை மாவட்ட பாரதிய ஜனதா கட்சி தலைவர் தயாசங்கர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சரவணனை நேரில் சந்தித்து புகார் மனு அளித்தார் மேலும் தாக்குதல் வழக்கில் தொடர்புடைய மேல புத்தினேரி பஞ்சாயத்து தலைவர் மனோஜ் ஆனந்தை கைது செய்ய வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
புகாரின்பேரில் திமுக பிரமுகரான வேலவன்குளம் கண்ணனின் அடியாட்கள் 5 பேரை போலீசார் கைது செய்து அவர்கள் மீது ஏழு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர் மேலும் செல்போன் வீடியோ பதிவு அடிப்படையில் திமுக பஞ்சாயத்து தலைவர் மனோஜ் ஆனந்த் உள்ளிட்ட ஐந்து பேரை தேடி வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.