திமுக எம்எல்ஏ பேச்சுக்கு விளக்கம் அளிப்பீர்களா ஸ்டாலின் – பாஜக நாராயணன்திருப்பதி கேள்வி

அருப்புக்கோட்டை சட்ட மன்ற உறுப்பினரும், திராவிட முன்னேற்ற கழகத்தின் விருது நகர் தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் அவர்கள் பேசியதாக ஒரு அலைபேசி உரையாடல் சமூக ஊடகங்களில் வலம் வந்து கொண்டிருக்கிறது.

‘மாமா மாமா’ என்று இருவர் உரிமையோடு அழைத்துக்கொள்ளும் அந்த உரையாடலில், திரு. ராமச்சந்திரன் பேசுகையில், “அனைத்து ஊர்களிலும் எல்லா ஜமாத்துகளிலும் சோதனை செய்தார்கள், ஆனால் நம் ஊரில் எந்த ஜமாத்துக்கும் செல்லவில்லை.

அதிகாரிகளை நான் சத்தம் போட்டேன். எந்த தொந்தரவும் நம் ஆட்களுக்கு இல்லாதபடி வைத்திருக்கிறேன். ஏனென்றால் அனைத்தும் என் ஓட்டு என்று தெரியும். கொரோனா உள்ளது என்றால் அசிங்கம் இல்லையா? பக்கத்து வீட்டுக்காரர் கூட பேசமாட்டார்” என்றும், அவர் பாசத்தோடு மாமா என்று அழைக்கும் நபர், பீலா ராஜேஷ் அம்மா பிரித்து பேசுகிறார் என்றதற்கு “ஆமாம், ஆமாம்” என்று சொல்கிறார்.

அருப்புக்கோட்டை சட்டமன்றத்தில் போலீஸ் தொந்தரவோ, தாசில்தார் தொந்தரவோ, கலெக்டர் தொந்தரவோ இல்லாமல் நான் தான் பார்த்து கொள்கிறேன் என்றும் இல்லையென்றால் உங்களை கிறுக்காக ஆகியிருப்பார்கள், மல்லு கட்டியிருப்பார்கள் என்றும் பேசியுள்ளார்.

‘மாமா, மாமா’ என்று வாஞ்சையோடு அழைக்கும் அந்த நபரும் “சி ஏ ஏ, என் ஆர் சி பிரச்சினையில் முழுமையாக உங்களுக்கு(தி மு க வுக்கு) ஆதரவு கொடுத்தோம் என்றும் என்ன நடந்தாலும் உங்களுக்கு (தி மு க வுக்கு) தான் எங்கள் ஓட்டு என்ற நிலை தமிழ் நாட்டில் வந்து விட்டது” என்ற உண்மையை உடைத்து கூறியுள்ளார். அதை தி மு க சட்டமன்ற உறுப்பினரும் ஆமோதித்துள்ளார்.

இதனடிப்படையில் திரு.ஸ்டாலின் அவர்களுக்கு நான் முன் வைக்கும் கேள்விகள்.

  1. உங்கள் கட்சியின் மாவட்ட செயலாளர், சட்ட மன்ற உறுப்பினர், கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளை செய்ய சென்ற அரசு அதிகாரிகளை மிரட்டியுள்ளார். அதை ஏற்கிறீர்களா?
  2. நாடு முழுதும் தப்லீக் ஜமாஅத் இயக்கத்தினர் மற்றும் வெளிநாட்டு மதப்பிரச்சராகர்கள் இருக்கின்றனரா என்பதை சோதனையிட்டு வரும் நிலையில் உங்கள் மாவட்ட செயலாளர் மற்றும் சட்ட மன்ற உறுப்பினர், தி மு கவின் நிர்வாகி மற்றும் மக்கள் பிரதிநிதி என்ற அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி கொடிய கிருமி தொற்று உள்ள நபர்களை அடையாளம் கண்டுபிடிக்கும் முயற்சியை தடுத்துள்ளார். அதை திராவிட முன்னேற்ற கழகம் ஏற்று கொள்கிறதா?
  3. அரசு அதிகாரிகள் மக்களை ‘கிறுக்காக’ ஆக்குகிறார்கள் என்று அவதூறாக பேசியதை ஏற்கிறதா தி மு க?
  4. சி ஏ ஏ (குடியுரிமை திருத்த சட்டம்) மற்றும் என் ஆர் சி பிரச்சினையில் தி மு க வுக்கு ஆதரவாக இஸ்லாமியர்கள் இருந்தார்கள் என்று சொல்வதை ஏற்று கொண்டு ஆமோதித்ததன் மூலம் தமிழகத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக, தி மு க தான் இஸ்லாமியர்களை தூண்டி விட்டது என்பது உறுதி செய்யப்பட்டு விட்டது என்பதை ஒப்பு கொள்கிறீர்களா?
  5. ஓட்டுக்காக தான் இஸ்லாமிய மக்கள் மீது உங்கள் கட்சி பரிவாக இருப்பது போன்று நடிக்கிறது என்பதை இந்த உரையாடல் உறுதி செய்துள்ளது என்பதை நாடே உறுதியாக ஏற்று கொள்ளும். அதை நீங்கள் ஏற்று கொள்வீர்களா?
  6. ஒரு வேளை, இந்த உரையாடல் போலி என்று சாத்தூர் ராமச்சந்திரன் அவர்களோ, நீங்களோ, சொல்வீர்களேயானால் அதை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் உங்களிடத்தில் தான் உள்ளது.
  7. அப்படி சாத்தூர் ராமச்சந்திரன் பேசியது உண்மை தான் என்று நீங்கள் ஏற்று கொள்ளும் நிலையில், அவர் பேசியதை உங்களின் கட்சியின் கருத்தாக உறுதி படுத்துவீர்களா? கொரோனா தொற்று பரவி நாசத்தை விளைவிப்பதை விட உங்களுக்கு முஸ்லிம்களின் ஓட்டு தான் முக்கியம் என்ற அவரின் நிலைப்பாடு தான் உங்கள் கட்சியின் நிலைப்பாடும் என்பதை அறிவிப்பீர்களா?
  8. அப்படி இல்லையென்றால், கட்சி நிலைக்கு எதிராக செயல்பட்டார் என்று இன்று கே. பி.ராமலிங்கம் அவர்கள் மீது எடுத்த நடவடிக்கை போல் சாத்தூர் ராமச்சந்திரன் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுப்பீர்களா?
  9. நாட்டு மக்கள் அனைவரும் கொரோனாவுக்காக முகத்திரை அணிய வேண்டிய இந்த நேரத்தில், தி மு க வின் முகத்திரை கிழித்தெறியப்பட்டது என்று மக்கள் பேசிக்கொள்வது உண்மை தானே?

விளக்கம் சொல்வீர்களா ஸ்டாலின் அவர்களே, நீங்கள் சொல்வீர்களா?

கட்டுரை :- நாராயணன் திருப்பதி,
செய்தி தொடர்பாளர்,
தமிழக பாரதிய ஜனதா கட்சி.

Exit mobile version