லோக்சபாவில், காஷ்மீர் மாநிலம் தொடர்பான மசோதாக்கள் மீது நடந்த விவாதத்தில் செந்தில்குமார், சமீபத்தில் 3 மாநில தேர்தல்களில் பா.ஜ., வெற்றி பெற்றது குறித்து பேசுகையில் குறிப்பிட்டதாவது: ஹிந்தி பேசும் கோமூத்ரா மாநிலங்கள். பா.ஜ.,வால் தென்னிந்தியாவில் வெல்ல முடியாது. கோமூத்ரா மாநிலங்கள் என நாங்கள் அழைக்கும் ஹிந்தி பேசும் மாநிலங்களில் மட்டும்தான் வெல்ல முடியும்.
தமிழகம், ஆந்திரா, கேரளா மற்றும் தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களை பா.ஜ., யூனியன் பிரதேசங்களாக மாற்றினால் ஆச்சர்யப்பட மாட்டேன். இதன் மூலம் நீங்கள் மறைமுகமாக அதிகாரத்திற்கு வரலாம். அங்கு தடம் பதிக்க முடியும் எனவும், தென் மாநிலங்களை தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடியும் என உங்களால் கற்பனைகூட செய்து பார்க்க முடியாது என பேசினார்.
இதற்கு பா.ஜ., கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: தி.மு.க., அரசின் மோசமான நிர்வாகத்தால் சென்னை மூழ்கிக் கொண்டு உள்ளது. திமுக.,வினர் பார்லிமென்டில் தரம் தாழ்ந்து செயல்படுகின்றனர். வட இந்திய சகோதரர்களை பானி பூரி விற்பவர்கள், கழிவறை கட்டுபவர்கள் என விமர்சனம் செய்த ‛இண்டியா’ கூட்டணியில் உள்ள திமுக., எம்.பி., தற்போது கோமூத்ரா மாநிலங்கள் எனக்கூறியதை தமிழக பா.ஜ., கடுமையாக கண்டிக்கிறது.
புதுச்சேரியில் பா.ஜ., கூட்டணி ஆட்சியில் உள்ளதையும், கர்நாடகாவில் ஆட்சியில் இருந்ததையும் அவர் மறந்துவிட்டார். திமுக.,வின் இந்த அராஜகமே அவர்கள் வீழ்வதற்கு காரணமாக இருக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.