திமுகவின் ஊழல் ஆட்சிக்கு முதல்வர் பொறுப்பேற்பாரா ? அண்ணாமலை கேள்வி.
தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில்,
நேற்று, தமிழக நிதி அமைச்சர் திரு பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், திரு உதயநிதி ஸ்டாலின் மற்றும் திரு சபரீசன் ஆகிய இருவர் ஒரே வருடத்தில் 30,000 கோடி ரூபாய் வரை முறைகேடாக சம்பாதித்துள்ளார்கள் என்று பேசிய ஆடியோ ஒன்றை வெளியிட்டிருந்தோம். நாங்கள் இந்த மாதம் 14ஆம் தேதி வெளியிட்ட DMK Files என்ற காணொளிக்கு வலு சேர்க்கும் விதமாக அமைந்துள்ளது தமிழக நிதி அமைச்சரின் பேச்சு.
இப்போது வரை அதற்கு, திமுக அரசு எந்தவித விளக்கமும் அளிக்காமல் மௌனமாக இருப்பது அவர்களுக்கு வாக்களித்துத் தேர்ந்தெடுத்த மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி என்பதை தமிழக முதல்வர் திரு. மு.க. ஸ்டாலின் உணர வேண்டும்.
கோவை குண்டுவெடிப்பு சம்பவம் ஒரு ISIS தற்கொலைப்படை தாக்குதல் என்பதை முதல் நாளிலிருந்து தமிழக பாரதிய ஜனதா கட்சி சொல்லி வந்ததை நேற்று மீண்டும் ஒரு முறை தேசிய புலனாய்வு முகமையின் குற்றப்பத்திரிக்கை உறுதிப்படுத்தியுள்ளது. இதை இன்று வரை சிலிண்டர் வெடிப்பு சம்பவம் என்று மக்களை ஏமாற்றி வருகிறது திமுக. திமுகவினரின் ஆட்சி அதிகார மமதையால் தினந்தோறும் மக்கள் அவதிப்படுகின்றனர்.
ஒரு புறம் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, மறுபுறம் தமிழக முதல்வர் திரு மு.க. ஸ்டாலின் அவர்களின் குடும்பம் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி ஒரே வருடத்தில் 30,000 கோடி ரூபாய் முறைகேடாக சம்பாதித்திருப்பது என இந்த ஆட்சி கொடுத்த வாக்குறுதிகளுக்கு நேர் எதிராகவும் மக்கள் விரோதமாகவும் செயல்பட்டு வருவதை இனியும் அனுமதிக்க முடியாது.
ஊழலில் கொழிக்கும் தனது குடும்பத்தாரின் இந்த செயலுக்கு தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று மக்களுக்கு பதில் அளிப்பதோடு தகுந்த நடவடிக்கையும் எடுக்கவேண்டும் என்று தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக வலியுறுத்துகிறேன். இவ்வாறு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது
Get real time update about this post categories directly on your device, subscribe now.















