தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளில், 99 சதவீதத்தை நிறைவேற்றி விட்டதாக, முதல்வர் ஸ்டாலின் கூறியிருப்பது பொய்’ என, தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி ஆதாரங்களை வெளியிட்டு உள்ளது.
சென்னையில் நடந்த ஒரு விழாவில், முதல்வர் ஸ்டாலின், ‘தி.மு.க., தேர்தல் அறிக்கையில் தரப்பட்ட வாக்குறுதிகளில், 99 சதவீதத்தை நிறைவேற்றி விட்டோம்’ என, பேசினார். இது எதிர்க்கட்சியினர் மட்டுமின்றி, பல்வேறு தரப்பிலும் சர்ச்சையை கிளப்பியது.
இந்நிலையில், ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்களுக்கு, தி.மு.க., தந்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்பதை விளக்கி, தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலர் முத்துசாமி, முதல்வர் ஸ்டாலினுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.
கடிதத்தில், தி.மு.க., தேர்தல் அறிக்கையில், 308லிருந்து 311 வரையிலான நான்கு வாக்குறுதிகளை அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
எழுத்துப்பூர்வமாக தந்த இந்த வாக்குறுதிகளை, 28 மாதங்களாகியும் நிறைவேற்றாமல் இருப்பதை, எப்படி மறந்தீர்கள் என, கடிதத்தில் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.