தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த 6 மற்றும் 9-ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடந்தது. 12-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும், 20-ம் தேதி வெற்றி பெற்றவர்கள் பதவி ஏற்பும், 22-ம் தேதி மாவட்ட ஊராட்சி தலைவர், துணைத் தலைவர், யூனியன் குழு தலைவர், துணைத் தலைவர் மற்றும் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் தேர்தல் நடந்தது.
தென்காசி மாவட்டம் கடையம் ஒன்றியத்தில் உள்ள 17 உறுப்பினர்களில் திமுக 11, அதிமுக 5, காங்கிரஸ் ஒரு இடத்தில் வெற்றி பெற்றது. ஒன்றியக் குழு தலைவருக்கு நடந்த தேர்தலில் திமுக.வை சேர்ந்த செல்லம்மாள் மற்றும் ஜெயக்குமார் என திமுகவினர் இடையே நடந்த போட்டியில் செல்லம்மாள் 13 வாக்குகளும், ஜெயக்குமார் 4 வாக்குகளும் பெற்றனர். இதனால் செல்லம்மாள் கடையம் யூனியன் சேர்மனாக பதவி ஏற்றுக் கொண்டார்.
ஒன்றியக்குழு தலைவர் பதவிக்கு திமுக சார்பில் ஜெயக்குமாரை தேர்ந்தெடுக்க முடிவு செய்யப்பட்டிருந்ததாகக் கூறப்படும் நிலையில் திமுக உறுப்பினர்களாலேயே அவர் தோற்கடிக்கப்பட்டார். அதிமுக உறுப்பினர்களின் ஆதரவோடு செல்லம்மாள் வெற்றி பெற்றதாகவும், இவரை தேர்ந்தெடுக்க திமுக ஒன்றியச் செயலாளர் குமார் ஏற்பாடு செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு பொறுப்பில் இருந்து ஒன்றியச் செயலாளர் குமார் விடுவிக்கப்பட்டார். இதன் பின்னர் திமுக தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் ஒன்றியக் குழுத் தலைவியான செல்லம்மாளை அழைத்து சேர்மன் பதவியில் நீடிக்க வேண்டும் என்றால் ரூ.1 கோடியே 10 லட்சம் தர வேண்டும் என்று கூறியதாகத் தெரிகிறது. ஏழை குடும்பத்தை சேர்ந்த செல்லம்மாள் அதிர்ச்சி அடைந்தார்.
இந்நிலையில் ஒன்றியக்குழு தலைவியான செல்லம்மாள் திடீரென தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். அவர் தென்காசி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரான ஹெலனிடம் தனது ராஜினாமா கடிதத்தை யூனியன் சேர்மன் செல்லம்மாள் வழங்கினார். இந்த சம்பவம் தென்காசி மாவட்ட திமுக தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.