தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில்,
மழையும் தண்ணீரும் வடியல… மக்களுக்கு இன்னும் விடியல…பண்புக்குரிய தாய்த் தமிழ்நாட்டின் பந்தங்களே… அன்புக்குரிய தாமரைக் குடும்பத்தின் சொந்தங்களே…..
அனைவருக்கும் வணக்கம்.மழையிலும், வெள்ளத்திலும் தேங்கிக் கிடக்கும் தண்ணீரிலும் சென்னை, கடலூர், கன்னியாகுமரி என்று பல பகுதிகளிலும் நான் நேரில் சென்று மக்கள் படும் துன்பத்தைப் பார்த்து வந்தேன்.பலப்பல ஆண்டுகளும் ஆட்சிகளும் மாறி மாறி வந்த போதும், மழை வெள்ளம் என்பது மட்டும் மாறாமல் இருக்கிறது. ஆண்டுக்கு, ஆண்டு ஆயிரக்கணக்கான கோடிகளை மழைநீர் வடிகாலுக்காக மத்திய அரசில் இருந்து நிதி வாங்கி மாநில அரசுகள் செலவிட்ட போதும் மக்கள் படும் துன்பங்கள் மட்டும் மாறாமல் போனது.
ஏன் இப்படி நடக்கிறது? என்று கவலைப்பட எவருமில்லை. ஊடகங்கள் ஆளும் கட்சிக்கு இடித்துரைக்கும் அமைச்சராக இருந்திருக்க வேண்டும். ஆனால் திமுகவின் ஆட்சி நடைபெறும் போதெல்லாம் ஊடகங்கள் எல்லாம் ஊமையாகிவிடுகின்றன. தவறுகளை எடுத்துரைக்க ஒருசில ஊடகங்கள் தவிர மற்றவைகள் அச்சப்படுகின்றன.
மழைநீர் வடிகால் என்று மாநகராட்சியில் தனியே ஒரு துறை இருக்கிறது அந்தத்துறை சார்ந்த அதிகாரிகள் இருக்கிறார்கள் ஆண்டுக்காண்டு புதிய, புதிய திட்டங்கள் போடப்படுகின்றன. செலவிடும் தொகைகள் எல்லாம் அறிவிப்புகளாக இருக்கின்றனவே தவிர அறிவுப் பூர்வமான திட்டங்கள் எதுவும் நடைபெறவில்லை.தாழ்வான பகுதிகளில் ஏரிகளில் குளங்களில் வீடுகளைக் கட்டிக்கொள்ள அரசுதானே அனுமதி கொடுத்திருக்கிறது.
அப்போது அங்கிருந்து நீரினை வெளியேற்ற தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளும் செய்யப்படவில்லை. இதனால் மக்கள் படும் துன்பத்திற்கு அளவே இல்லை. வாக்களித்ததர்க்கா எங்களுக்கு இந்தத் தொல்லை.இன்னும் தெளிவாகச் சொல்லப்போனால், மக்களின் வாழ்விடங்களில், சுத்தமான குடிநீர் கிடைக்க வழிவகை செய்யப்படவில்லை. அதுபோல மழை நீர் வடிகால் அமைப்புகள் ஏற்படுத்தப்படவில்லை.நீரில் மூழ்கி இருக்கும் வீடுகளில் சமைக்கவும் முடியாமல் படுத்து உறங்கவும் இடம் இல்லாமல் மக்கள் பட்ட அவதி கொஞ்ச நஞ்சமில்லை.
அவர்களுக்கு உண்பதற்கு உணவும், கட்டில், போர்வைகள், மருந்துகள், அத்தியாவசிய பொருட்கள் என்ற தேவைகளை எல்லாம் பாஜக தொண்டர்கள் இணைந்து மாநிலம் முழுவதும் வழங்கினோம். உணவுக் கூடங்கள் அமைத்து, உணவு சமைத்து பாதிக்கப்பட்டவர்களிடம் விநியோகித்தோம். கொரோனா காலத்தில் பெற்ற அனுபவத்தின் மூலம்… சேவை நம் செயல்திட்டம் என்று தன்னலம் கருதாமல் மக்கள் தொண்டு செய்யும் நம் தாமரைச் சொந்தங்கள் அனைவரையும் நான் மனதார வாழ்த்துகிறேன்.
பாராட்டுகிறேன்.மக்கள் வாழ்விடங்கள் மட்டும் பாதிக்கப்படவில்லை. பயிர்த்தொழில் நடைபெறும் வயல்வெளிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றன. இன்னும் ஒரு மாத காலத்தில் அறுவடைக்குத் தயாராக இருந்த பயிர்கள் எல்லாம் நீரில் மூழ்கி அழிந்து போய்விட்டன. விவசாயிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாக நிற்கிறது.
இந்நிலையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாய குடும்பங்களுக்கு இழப்பீட்டுத் தொகையாக, 1 ஹெக்டேருக்கு ₹.20000 வழங்குவதாக அறிவித்து இருக்கிறார். அதாவது ஒரு ஏக்கருக்கு 8,000 ரூபாய். ஆனால் திரு. மு. க ஸ்டாலின் அவர்கள் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது ஒரு ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்று போராட்டங்களை நடத்தியவர். ஆனால் அவருடைய கையிலேயே அதிகாரம் வந்தபிறகு பழைய குணமில்லை . ஏழை விவசாயிகளுக்கு, இழப்பீட்டுத் தொகையை வழங்க மனமில்லை.இன்று நாகர்கோயில், கன்னியாகுமரி பகுதியில் பயணம் மேற்கொண்டேன். வைக்கல்லூர், அதங்கோடு கிருஷ்ணசாமி கோவில் மண்டப முகாம்…
காப்புக்காடு பேப்பிலாவிளையில் இருக்கும் குன்னத்தூர் அரசு நடுநிலைப்பள்ளி முகாம்… என்று… தோவாளை, திருப்பதிசாரம் ஆகிய பகுதிகளில், மழை, வெள்ளத்தினால் சேதங்களை சந்தித்திருக்கும் நாகர்கோவில் மக்களை மேனாள் அமைச்சர். திரு பொன் ராதாகிருஷ்ணன் அவர்கள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் எம் எல் ஏவுமான திரு நயினார் நாகேந்திரன் அவர்கள், நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் திரு எம் ஆர் காந்தி அவர்கள் என்று பாஜகவின் தலைவர்களுடன் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கினேன்.
மக்களோடு மக்களாக மக்களுக்கான தொண்டுகள் செய்து, மக்களுக்கு துயர் படும் நேரத்தில் தோள்கொடுக்கும் தோழனாக, சேவைகள் செய்வதையே நம் குறிக்கோளாகக் கொண்டு பாடுபட்டு வருகிறோம். இந்த தன்னார்வத் தொண்டும், மக்களுக்கான உதவிகளும் தொடரட்டும்.அடுத்ததாக ஒரு மழை வரப்போகிறது. புயல் வீசப் போகிறது. மழைநீர் தேங்கப் போகிறது. மறுபடியும் நாம் தொண்டுக்கும், சேவைக்கும், அர்ப்பணிக்கும் தயாராவோம்!மக்கள் சேவை தானே நமக்குப் பிடித்த பிரதமருக்குப் பிடித்தது… நன்றி.
என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.