பிரிவினைவாத உள்நோக்கத்துடன் திமுக ஆதரவாளர்கள் சமூக ஊடகங்களில் பயன்படுத்தி வரும் ‘ஒன்றிய அரசு’ என்ற வார்த்தையை கடந்த 2-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு தமிழக அரசும் பயன்படுத்தி வருகிறது.
இதுபற்றி சட்டமன்றத்தில் பாஜக குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “நமது அரசியலமைப்புச் சட்டத்தில், “இந்தியா, அதாவது பாரதம் – மாநிலங்களைக் கொண்ட ஓர் ஒன்றியமாய் இருக்கும்” என்றுதான் உள்ளது.
அதைத்தான் பயன்படுத்துகிறோமே தவிர, சட்டத்தில் இல்லாததை நாங்கள் பயன்படுத்தவில்லை.
கூட்டாட்சித் தத்துவம் அடங்கியிருப்பதால் ‘ஒன்றிய அரசு’ என்ற வார்த்தைைப் பயன்படுத்துகிறோம்” என்று கூறியிருக்கிறார்.
இந்தியா என்கிற பாரத நாட்டின் நிர்வாக வசதிக்காகவே மாநிலங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. மாநிலங்கள் தங்கள் நிர்வாக வசதிக்காக மாவட்டங்களைப் பிரிப்பது போல, இந்திய அரசு நிர்வாக வசதிக்காக மாநிலங்கள் இரண்டு அல்லது மேலும் பல மாநிலங்களாகப் பிரிக்க முடியும்.
ஆனால், இந்தியா என்ற பாரத நாட்டை யாராலும் பிரிக்க முடியாது.
இந்தியாவில் இருந்து பிரிகிறோம் என்று மாநிலங்கள் கூற முடியாது. அப்பது கூறினால் அது பிரிவினைவாதம். தேசத் துரோகம்.
எனவே, முதலமைச்சர் கூறியதுபோல கூட்டாட்சி தத்துவத்திற்காக ‘ஒன்றிய அரசு’ என்ற வார்த்தையை பயன்படுத்தினால் பிரச்சினையில்லை.
‘ஒன்றிய அரசு’ என்று சொல்வதால் இந்திய அரசின் அதிகாரங்கள் குறையப்போவதில்லை.
இவ்வளவு விளக்கம் அளித்த முதலமைச்சர், ‘மத்திய அரசு’ என்றால் என்ன, ‘ஒன்றிய அரசு’ என்றால் என்ன, இரண்டுக்கும் இடையே உள்ள வேறுபாடுகள் என்ன என்பதற்கும் விளக்கம் அளித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.