இந்து சமய அறநிலையத்துறை இப்போது, கோவில்களில் உழவாரப்பணி செய்ய விரும்புபவர்கள், முன்பதிவு செய்துகொள்ளலாம் செய்துள்ள அறிவிப்பு, பொது அறிவுக்கும் நடைமுறைக்குப் பொருந்தாத ஒரு வேண்டாத வீணான “சேவை.” யாரு(க்கு)ம் எந்த விதத்திலும் தேவை என்று கேட்காத ஒன்றை முன்பதிவு முறையில் அமல்படுத்துவது சுதந்திர இந்தியாவாக தெரியவில்லை.
ஊரான் ஊரான் தோட்டத்திலே ஒருத்தன் போட்டானாம் வெள்ளரிக்கா. காசுக்கு ரெண்டு விக்கச் சொல்லி காயிதம் போட்டான் வெள்ளைக்காரன்என்ற வெள்ளைக்கார கொடுங்கோல் ஆட்சியை விளக்குவதாக பாடலைப் போல தான் உழவாரப்பணி முன்பதிவு பார்க்கப்படுகிறது.எந்த ஊரில், எந்த நாட்டில், எந்த கோயிலுக்கு உழவாரப் பணி செய்வதற்கு, மக்கள் முண்டியடித்து, போட்டி போட்டுக்கொண்டு வரிசைகட்டி நிற்கிகிறார்களாம்?
நூற்றாண்டு காலமாகவே தமிழகத்தில் ஆங்காங்கே பக்தர்கள், தாங்களாகவே தன்னார்வ குழுக்களை அமைத்து, கலைகளின் பொக்கிஷமான, புனிதம் மிகுந்த கோயில்கள் எல்லாம் முட்புதர்கள் மண்டி மண்மேடு ஆகிவிட்டதால், வழிபாடு செய்ய இயலாது, பாழ் பட்டுப்போன திருக்கோயில்களில் மரம் செடி வளர்ந்துள்ள கோபுரங்கள், பிரகாரங்கள் ஆகியவற்றின் குப்பைகளை, செடிகொடிகளை அகற்றி, தங்கள் செலவிலேயே பழுது பார்த்து, வெள்ளையடித்து, காவி தீட்டி, திருக்கோயில்களை மீட்டு, வழிபாட்டுக்கு உரிய பொலிவு மிக்க கோயில்களாக மாற்றுவதில் பெரும் பங்கு வகித்து வருகின்றனர்.
இப்படி நீண்டகாலமாக தங்கள் பொன்னான நேரத்தையும் பொருட்செலவையும் உடலுழைப்பையும் பயன்படுத்தி திருக்கோயில்களை சீர்திருத்தவரும் உழவாரப்பணி சேவகர்களுக்கு எல்லாம் ஆப்பு வைப்பதைப் போல், தன்னார்வத் தொண்டு செய்வதற்கு, முன்பதிவு தேவை என்பதை வற்புறுத்துவதாக ஆகி உள்ளது இந்த விளம்பரம்.
திருக்கோயில் நிர்வாகம் மற்றும் திருக்கோயில்களின் நிர்வாகத்தை மேற்பார்க்கும் இந்து சமய அறநிலையத்துறை ஆகிய இரண்டும் கைவிட்டுவிட்ட, தொலைதூரத்தில் அமைந்துள்ள கோயில்களை எல்லாம் தேடித் தேடிச் சென்று, சீர்திருத்தம் செய்துவரும் உழவாரப்பணி கூட்டத்தாருக்கு, இந்த அறிவிப்பு மன வேதனையை அளிக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இந்து சமய அறநிலையத் துறையின் அறிவிப்பை பார்த்தால், முதல்கட்டமாக, வருவாய் உள்ள, பக்தர்கள் கூட்டத்துக்கு குறைவில்லாத 47 கோயில்களை முன்னிறுத்தி உள்ளார்கள். உழவாரப்பணி செய்யப்படும் கோயில்கள் எல்லாம், பொதுமக்களின் கவனத்தை ஈர்க்காத, செல்வச்செழிப்பற்ற, தொலைதூரத்தில், ஜனசந்தடி அற்ற இடங்களில் அமைந்துள்ள, சற்றே சிறிய கோயில்கள் தான் என்ற உண்மையை புரிந்துகொள்ளாமல் அறிவித்துள்ளது, ஏதோ விளம்பரத்துக்காக செய்துள்ள யோசனையற்ற செய்கை என்றுதான் தோன்றுகிறது.
பல மைல்கள், சொந்தச் செலவில் பிரயாணம் பண்ணி, கால் கடுக்க வரிசையில் மணிக்கணக்காக நின்று, குடும்பத்துடன் மொட்டை அடிப்பது முதல், தரிசன கட்டணம், அர்ச்சனை கட்டணம் போன்ற எல்லா கட்டணங்களையும் செலுத்தி, இறைவனிடம் கையேந்தி நிற்கும் ஏழை பக்தனின் பக்திக்கு முன்னால், கணினியிலும் இணையத்தளத்திலும் முன்பதிவு செய்துகொள்ளும் வசதி கொண்ட எவரும் சிறந்தவர் என்று கூறிவிட முடியாது. அடிக்கடி கணினி, இணையதள முன்பதிவு போன்றவற்றை பேசும் இந்து சமய அறநிலையத்துறை ஏழ்மை நிலையில் உள்ளவர்கள் குறித்து எந்த வசதியும் செய்வதில்லை.
தன்னார்வத் தொண்டர்கள், சமயப் பற்றும் பக்தி நெறியும் கொண்டவர்கள், தாமாக முன்வந்து கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்துவதற்கும், பிரார்த்தனை தலங்களில் குடிதண்ணீர் மற்றும் வழிகாட்டுதல் உதவிகளை செய்வதற்கும், கூட்டம் இல்லாத நாட்களில் குப்பை கூளங்களை அகற்றி, செடிகொடிகளை பிடுங்கி, வெட்டி, சீரமைத்து, திருக்கோயில்களை இருண்ட நிலையிலிருந்து மீட்டு வருகின்ற செய்கை, தானாக எந்தவித குறைபாடும் இன்றி நடந்துவருவதை திடீரென, “எல்லாம் வரிசையில் வாருங்கள்; ஆதார் கார்டு எடுத்து வாருங்கள்; ரேஷன் கார்டு எடுத்து வாருங்கள்” என்று சட்ட திட்டங்களை பொருத்துவதால், இந்து சமய அறநிலையத்துறை என்பது, கட்டுப்பாடுகளை மட்டும் வைத்துக்கொள்ளும் ஒரு போலீஸ் துறையாக பார்க்கப்படும்.
கோயில்கள், இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமானவை அல்ல. அறநிலையத்துறை மற்றும் அதன் அலுவலர்கள், பணியாளர்கள், திருக்கோயில்களுக்கு கைகட்டி சேவகம் செய்ய வந்த ஏவலர்கள் மட்டுமே என்பதை மறக்க வேண்டாம்.
இந்து சமயஅறநிலைய துறையில் பணியாற்றும் அலுவலர்கள், பொது சேவகர்கள் என்ற ஊழியர்கள் என்ற மனநிலையை மட்டும்தான் கொள்ள வேண்டுமே தவிர, ஆணையிடும் அலுவலர்களாக தங்களைத் தாங்களே உயர்த்திக் கொண்டு, பொது சேவை புரிய வருபவர்களை தாழ்த்திக் காட்டுகின்ற இம்மாதிரி முயற்சிகளை விட்டுவிட வேண்டும்.