தேசிய ’நீட்’டுக்கு எதிரான ‘திராவிடத்தின்’ 165 பக்க குற்றப்பத்திரிக்கையே, ஏ.கே. ராஜன் கமிட்டி அறிக்கை! ராஜாவை மிஞ்சிய ராஜ விசுவாசம்!! ’சத்யமேவ ஜெயதே’ / ’வாய்மையே வெல்லும்’ என்பது எவ்வளவு நிதர்சனமான உண்மை என்பதை நீட் தேர்வு குறித்து தமிழக அரசால் நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் கமிட்டி சமர்ப்பித்த அறிக்கையிலிருந்தே தெளிவாகிறது.
எத்தனை கமிட்டி போட்டு ஆராய்ந்தாலும்; எவ்வளவு பொய்யுரைகளையும், புனைக்கதைகளையும் பரப்பினாலும் உண்மையை நிரந்தரமாக மறைக்க முடியாது என்பதற்கு இக்கமிட்டியின் 165 பக்க அறிக்கையே சான்று. இது அறிஞர்களால் தயாரிக்கப்பட்ட ஆய்வறிக்கையைப் போல் இல்லை. ஒரு அரசியல் கட்சியின் சார்பாக தயாரிக்கப்பட்ட குற்றப்பத்திரிக்கையாகவே உள்ளது.
’நீட்’ தேர்வுக்கு எதிராக, திராவிட அரசியல் ரீதியான காழ்ப்புணர்வு கொண்ட கமிட்டி உறுப்பினர்களை உள்ளடக்கிய அக்குழுவிடமிருந்து வேறு எதை எதிர்பார்க்க முடியும்? எனினும் தமிழகத்தில் அமைந்துள்ள ஒரு அரசியல் கூட்டணி ’நீட்’ தேர்வால் ’சமூக நீதி’க்கு பங்கம் வந்துவிட்டது என கடந்த ஐந்து வருடங்களாக பரப்புரை செய்து வந்தார்களே, உண்மையிலேயே அது போன்று எதாவது ஒரு பாதிப்பை நீட் தேர்வு உருவாக்கி இருக்கிறதா
? அதற்கான தரவுகளை இவர்கள் சமர்ப்பித்து இருக்கிறார்களா? என்பதை கண்டறிவதற்காகவே அறிக்கையின் 165 பக்கங்களையும் துருவித் துருவி படித்துப் பார்த்தேன். ஆனால், இவர்கள் புரட்டி வந்த ’சமூக நீதி’க்கு எவ்வித பங்கமும் வந்ததற்கான ஆதாரம் எதுவும் அறிக்கையில் இல்லை. எனவே இப்பொழுது அவர்கள் ’கிராமப்புற’ மற்றும் ’தமிழ் பாடத்திட்டம்’ என்ற வேறு வேறு போர்வைக்குள் நுழைகிறார்கள்.
1968-ல் சென்னை மாகாணம் ’தமிழ்நாடு’ எனப் பெயர் மாற்றப்பட்டு; தேசிய மொழியான ’இந்தி’யை உள்ளே விடாமல் தடுத்து தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளை மட்டுமே கற்பிதம் செய்து ’மூன்று தலைமுறைகள் கழித்த பிறகும், தமிழ் வழிக் கல்வி பயின்ற மாணவர்கள் NCERT என்ற தேசிய கல்வித் திட்டம் மற்றும் மாநில கல்வித் திட்டத்தின் அடிப்படையிலும் நடைபெறும் நீட் தேர்வில் தமிழ் மொழி வழிக் கல்வி மாணவர்களால் பெரிய அளவிற்கு வெற்றி பெற முடியவில்லை’ என்று இக்கமிட்டியில் ஒத்துக் கொண்டிருப்பது அவர்கள் தங்களின் திராவிட சித்தாந்த தோல்விக்கான பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்துள்ளதைப் போல் உள்ளது.திராவிட சித்தாந்த ஆட்சியின் காரணமாக தமிழக மாணவர்கள் கல்வியில் எந்த அளவிற்கு தேசிய நீரோட்டத்திலிருந்து வெகுதூரம் விலகி நிற்கிறார்கள் என்பதை இதன்மூலம் அறிய முடிகிறது. மிகவும் பின்தங்கிய மாநிலம் என்று சொல்லக்கூடிய வட மாநிலங்களில் கூட இந்த அளவிற்கு நீட்டுக்கு எதிராகக் கூக்குரல் கிடையாது.
ஆனால் பட்டவர்த்தனமாக எந்த தமிழ் மொழியைக் கூறி கடந்த 60 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கிறார்களோ அந்த தமிழ் மொழியை தாய்மொழியாகக் கொண்ட சமுதாயத்திற்கு நல்ல கல்வியைக் கூட கொடுக்க முடியவில்லை என்பது எவ்வளவு வெட்கக்கேடான செயல். இதிலிருந்தே திராவிடத்தால் தமிழர்கள் எந்த அளவிற்கு தங்களுடைய அடையாளத்தை இழந்து நிற்கிறார்கள்; அவர்களுடைய தரம் குறைக்கப்பட்டு இருக்கிறது என்பது வெட்ட வெளிச்சமாகிறது.இந்த அறிக்கையை முழுமையாக எத்தனை பேர் படித்தார்கள் என்பது தெரியாது. ஆனால், நீட்டுக்கு எதிராக அமையப் பெற்றிருக்கக் கூடிய 20 குற்றச்சாட்டுகளையும் தாண்டி இன்னொரு முக்கியமான விஷயம் கண்ணுக்குப் புலப்படாமல் ’திராவிட விஷம்’ ஏற்றப்பட்டு இருக்கிறது. இந்த அறிக்கையில் இந்திய/பாரத/மத்திய அரசாங்கம் என்று ஒரு இடத்தில் கூட வராமல் நமது தேசத்தை மிகப்பெரிய அளவிற்கு இருட்டடிப்பு செய்திருக்கிறார்கள்.
நீட் தேர்வு குறித்த ஏ.கே.ராஜன் கமிட்டியினுடைய முழு அறிக்கைக்கும் பதில் சொல்ல வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. அவர்கள் நீட் தேர்வுக்கு எதிராக 20-க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்திருக்கிறார்கள். அவை அனைத்திற்கும் ஒரே அறிக்கையில் பதில் சொல்லிவிட இயலாது. மூன்று அல்லது நான்கு அறிக்கைகளாக வந்தால் மட்டுமே முழு உண்மையையும் எளிதாக விளக்க முடியும்.மே 7-ஆம் தேதி தொடங்கி வைக்கப்பட்ட ’Dravidian Stock’ முழக்கம் வலுவாகி, அது ’ஒன்றியமாக’ வளர்ந்து, நீட் தேர்வையே ’தேசியம்-திராவிடம்’ அல்லது ’Central vs State’ என்ற அரசியல் மேடையாக்கி மெல்ல மெல்ல இந்தியாவிலிருந்து தமிழகத்தைத் துண்டாடிக் கொண்டு போக வேண்டும் என்ற அவர்களின் நீண்ட கால கனவின் ஒரு பகுதியாகவே ராஜன் கமிட்டி அறிக்கையைப் பார்க்க முடிகிறது.
இக்கமிட்டியின் அறிக்கை நீட்டுக்கு எதிரானது என்று மட்டும் எண்ணி விடக்கூடாது; நாட்டுக்கும் எதிரானது. எனவே, விரிவாக விளக்க வேண்டிய கடமை நமக்கு உள்ளது. நாளை முதல் தொடர் பதில்கள் வெளிவரும்.ஏ.கே. ராஜன் கமிட்டியின் அறிக்கைநீட் தேர்வின் தாக்கம் குறித்த ஆய்வறிக்கை அல்ல!தேசியத்திற்கு எதிரான திராவிடத்தின் குற்றப்பத்திரிக்கையே!!மாணவர்கள் தமிழால் தாழ்ந்தார்களா?அல்லதுதிராவிடத்தால் வீழ்ந்தார்களா? என தொடர்ந்து பார்ப்போம்!டாக்டர் க. கிருஷ்ணசாமி MD,நிறுவனர்& தலைவர்,புதிய தமிழகம் கட்சி.