மேட்டூர் தனுஷ் மரணம்! ஸ்டாலின், உதயநிதி பொறுப்பேற்பார்களா? என கேள்வி எழுப்பியுள்ளார் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் கிருஷ்ணசாமி மேலும் திமுக அரசிற்கு பல கேள்விகளை எழுப்பியுள்ளார்.
நீட் தேர்வை இரத்து செய்ய தீர்மானமாம்!! நேற்று இந்தியாவெங்கும் நடைபெற்ற நீட் தேர்வை எழுதவிருந்த நிலையில், சேலம் மாவட்டம், மேட்டூரைச் சேர்ந்த மாணவன் தனுஷ் தற்கொலை செய்து கொண்ட செய்தி மிகுந்த வருத்தத்தை அளிக்கின்றது.
மாணவனை இழந்து வாடும் பெற்றோர்களுக்கும், உற்றார் – உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மருத்துவக் கல்விப் பாடத்திட்டத்தை வரையறை செய்யும் தேசிய மருத்துவக் கழகம் மற்றும் உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் பேரில், அகில இந்திய அளவில் இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் சேரக்கூடிய அனைத்து மாணவர்களும் நுழைவுத் தேர்வு மூலமாகவே சேர முடியும் என்று மத்திய அரசால் நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டு, கடந்த நான்கு ஆண்டுகளாக அமலில் இருந்து வருகிறது.
பல மாநிலங்கள் நீட் தேர்வை ஏற்றுக் கொண்டு அந்தந்த மாநில மாணவர்கள் அதிகமான வாய்ப்புகளைப் பெற உரிய பயிற்சிகளைக் கொடுக்கிறார்கள். தமிழகத்தில் கடந்த அரைநூற்றாண்டு காலமாக மொழி மற்றும் கல்வியை வைத்து ஒரு சில அரசியல் கட்சிகள் அரசியல் செய்கிறார்கள்.
உலகத்தில் பல நாடுகளில் ஒவ்வொரு மாணவரும் தங்களது தாய்மொழியுடன் மூன்று முதல் நான்கு மொழிகளைக் கூடுதலாகக் கற்றுக் கொள்கிறார்கள்.
ஆனால் தமிழகத்தில், இந்தியை அமல்படுத்தக் கூடாது என்று 70 ஆண்டுகளாகப் போராட்டம் நடத்தியால், இப்பொழுது தமிழக மாணவர்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தைத் தவிர, கூடுதலாக ஒரு மொழியைக் கூடக் கற்றுக் கொள்ள முடியாத அவலநிலையில் இருக்கிறார்கள்.
மருத்துவர்களுடைய எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டுமென்ற நோக்கத்தில், தனியார் மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய, மாநில அரசுகள் ஊக்கமளித்து வருகின்றன.
இதைப் பயன்படுத்திக் கொண்டு போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாமல், புற்றீசல் போல மருத்துவக் கல்லூரிகள் தோன்றிவிட்டன. இந்திய அளவிலும் தமிழகத்திலும் மருத்துவப் படிப்பின் மீதான தமிழக மக்களின் ஆர்வத்தைப் பயன்படுத்திக் கொண்டு, இதுபோன்ற எந்தவிதமான குறைந்தபட்ச தகுதிகளும் இல்லாமல், மாணவர் சேர்க்கைகள் நடைபெற்று வந்தன.
எனவே மருத்துவ மாணவர் சேர்க்கையை ஒழுங்குபடுத்துவதற்காகவே நீட் தேர்வு சட்டமியற்றப்பட்டது. அதன்படியே 2017-ஆம் ஆண்டு முதல் தமிழகத்திலும் நீட்தேர்வு அறிமுகமாயிற்று.
ஒப்பீட்டளவில் தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு இணையாக, தனியார் மருத்துவக் கல்லூரிகளும் அதிகம். நீட் தேர்வு வருவதற்கு முன்பு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 30 இலட்சங்கள் முதல் 1 கோடி வரையிலும் Capitation Fees வசூல் செய்யப்பட்டன.
அதனால் மருத்துவப் படிப்பு என்பது ஏழை, எளிய மாணவர்களுக்கு எட்டாக் கனியாக இருந்தது. தமிழகத்தில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் தமிழக மாணவர்களைக் காட்டிலும், வசதி படைத்த பிற மாநிலங்களைச் சார்ந்தவர்களே அதிகமாக ஆக்கிரமித்திருந்தார்கள்.
நீட் தேர்வு அமலாக்கப்பட்ட முதல் ஆண்டு தமிழக மாணவர்கள் சற்று சிரமப்பட்டார்கள் என்பது உண்மை தான். ஆனால் அடுத்தடுத்த ஆண்டுகளில் மாணவர்கள் தங்களை அதற்கேற்பத் தகவமைத்துக் கொண்டார்கள்.
நீட் தேர்வு வருவதற்கு முன்பு மதிப்பெண் மட்டுமே அடிப்படையாக இருந்த காலகட்டத்தில் 0.1, 0.05 வித்தியாசங்களில் பலரும் மருத்துவ இடங்களை இழந்தனர்.
ஒருமுறை தேர்வு பெறவில்லையென்றால் அவர்களுடைய மருத்துவக் கனவு தகர்ந்துவிடும். ஆனால் நீட் தேர்வில் அப்படியல்ல. ஒரு மாணவன் இரண்டு, மூன்று முறை கூட முயற்சி செய்து அதிக மதிப்பெண் பெற்று நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று, தன்னுடைய மருத்துவக் கனவை பூர்த்தி செய்து கொள்ள முடியும்.
பெற்றோர்களுக்கும் எந்தவிதமான பொருட்செலவுகளும் இல்லாமல், வீட்டிலேயே இருந்து அல்லது சில மையங்களில் இணைந்து முதல் முறையில் தவற விட்டாலும், இரண்டாவது, மூன்றாவது முறைகளில் அதிக மதிப்பெண் பெற்று பலரும் நம்முடைய சொந்த மாநிலத்திலேயே அரசுக் கல்லூரிகளிலே இடம் பெற்றிருக்கிறார்கள்
இளநிலை மருத்துவப் படிப்புக் காலமான 5 1/2 ஆண்டுகளுக்கும் சேர்த்து சில ஆயிரங்கள் மட்டுமே கட்டினால் போதும். பிற தனியார் கல்லூரிகளில் இடம்பெற்றாலும் வரையறை செய்யப்பட்டக் கல்விக் கட்டணம் மட்டுமே செலுத்தி எளிதாக அவர்கள் மருத்துவராக முடியும்.
தமிழக மாணவர்களுக்குப் பொதுவாக கற்கும் திறன் அதிகம். முறையான வழிகாட்டுதலும், தன்னம்பிக்கையும் மட்டுமே ஊட்டப்பட வேண்டும்.
அதுபோல பெற்றோர்களிடத்திலும் ஆசிரியர்களிடத்திலும் நண்பர்களிடத்திலும் இருந்து ஆக்கமும் ஊக்கமும் பெற்ற மாணவர்கள், தமிழகத்திலுள்ள 6000 இடங்களைத் தாண்டி, அகில இந்திய அளவிலும் இடம் பிடித்து, தமிழக மாணவர்களுடைய சேர்க்கை விகிதத்தை மிகவும் அதிகரித்து வருகிறார்கள்.
ஆனால் இத்தனை வாய்ப்புகள் இருப்பதையெல்லாம் மாணவர்களிடத்திலும் பெற்றோரிடத்திலும் எடுத்துச் செல்லாமல், மத்திய அரசுக்கு எதிரான ஓர் அரசியல் முழக்கமாக நீட்டை பயன்படுத்திக் கொண்டு, 1965-களிலே இந்தி எதிர்ப்புப் பிரச்சாரத்தில் ஈடுபட்டதைப் போல, 2017-ல் தமிழகத்தைச் சேர்ந்த திமுகவும் அதோடு சேர்ந்து சில அரசியல் கட்சிகளும் நீட் எதிர்ப்புப் பிரச்சாரத்தில் ஈடுபட்டன.
ஆனால் அன்றைய காலகட்டங்கள் போல, இன்று மாணவர்கள் ஏமாறவுமில்லை; அவர்கள் பின்னால் அணிதிரளவுமில்லை. இந்த நிலையில், 2018-ஆம் ஆண்டு +2 வில் அதிக மதிப்பெண் பெற்றும் நீட் தேர்வின் முதல் முயற்சியில், அதிகமான மதிப்பெண்களைப் பெறாததால் அரியலூரைச் சேர்ந்த அனிதா என்ற மாணவி உயிரிழந்தார்.
அது ஒரு வருந்தத்தக்க துயரமான சம்பவம். அனிதாவுக்கு முறையாக ஆலோசனைகள் வழங்கப்பட்டிருந்தால் அவர் அடுத்த முறை நிச்சயமாக நீட்தேர்வில் வெற்றி பெற்றிருப்பார்.
ஆனால், ஒரு தனியார் மருத்துவக் கல்லூரி நடத்தும் ஓர் ஊடகம், தனியார் மருத்துவக் கல்லூரிகள் கூட்டமைப்புடன் சேர்ந்து அந்த மாணவியை வைத்து உச்சக்கட்டமாக நீட் தேர்வு அரசியல் எதிர்ப்புப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்கள்.
அனிதாவின் மரணத்தை அரசியலாக்கி, “நீட்டை ஒழித்தே தீருவோம், ஓட்டுப்போடுங்கள்” என்று கேட்டு, 2019 – நாடாளுமன்றத் தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் தமிழக மக்களின் ஓட்டுக்களை அள்ளினார்கள். 38 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெற்றும் அவர்களால் நீட் தேர்வை இரத்து செய்ய முடியவில்லை.
ஸ்டாலினும் உதயநிதியும் நீட் தேர்வுக்கு எதிராக உரைவீச்சு நடத்தினார்கள். ‘சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றவுடன் முதல் தொடரிலேயே தீர்மானம் நிறைவேற்றி நீட்டை ஒழிப்போம்’ என பிரச்சாரம் செய்தார்கள்.
முதல் சட்டமன்றக் கூட்டத் தொடர் முடிந்து இரண்டாவது சட்டமன்றக் கூட்டத் தொடரும் முடிவுறக் கூடிய தருவாயில், நீட்டை ஒழிக்க சட்டம் கொண்டு வருகிறார்களாம். மத்திய அரசின் சட்டம் அமலிலிருக்கின்றபொழுது, மாநில அரசு ஒரு சட்டம் கொண்டு வந்து அதை எப்படி தடுத்து நிறுத்த முடியும்?
எப்படி இரத்து செய்ய முடியும்?
தமிழக சட்டமன்ற வளாகத்தைச் சுற்றியே தங்களுடைய வாழ்க்கையை அமைத்திருக்கும் Lutyens என்று சொல்லக்கூடிய ஊடகங்கள், அதைப்பற்றி ஒரு கேள்வி கூட ஆளுங்கட்சியையோ முதல்வரையோ கேட்கவில்லை.
திமுக கொடுத்த வாக்குறுதியின் அடிப்படையில், ஸ்டாலினும் உதயநிதியும் நீட் தேர்வை இரத்து செய்து விடுவார்கள் என்று எண்ணிக் கொண்டிருந்த அந்த மாணவனுக்கு, தேர்வு உறுதியாக நடக்குமென்று தெரிந்ததால், அவன் மிகுந்த அதிர்ச்சியளிக்குள்ளாகி, நம்பிக்கையிழந்து, தன் உயிரை மாய்த்துக் கொண்டிருக்கிறான் என்பது தானே உண்மை!
எனவே இந்த மாணவனுடைய மரணத்திற்கு திமுக தானே பொறுப்பேற்க வேண்டும்? செப்டம்பர் 12-ஆம் தேதி தேர்வு என்ற நிலையில், 12-ஆம் தேதிக்கு முன்பாகவே சட்டம் போட்டு நீக்கியிருக்க வேண்டுமா இல்லையா? ஆனால் நேற்று நீட் தேர்வு நடைபெற்று முடிந்த பின்பு இன்று நீட் தேர்வை இரத்து செய்ய தீர்மானம் போடுகிறார்களாம். 2019-லும் ஏமாற்றினார்கள்; 2021-லும் ஏமாற்றினார்கள்; இன்றும் ஏமாற்றுகிறார்கள். தமிழக மக்கள் என்றும் ஏமாறுகிறார்களா? என்று பார்ப்போம்.
திராவிட ஸ்டாக்கிஸ்ட்டுகளே! குழந்தைகளின் வாழ்க்கையோடு விளையாடாதீர்கள்!!
மேட்டூர் தனுஷ் மரணத்திற்கு திமுகவே பொறுப்பேற்க வேண்டும்!!
டாக்டர்.க.கிருஷ்ணசாமி, MD,
நிறுவனர்&தலைவர்.புதிய தமிழகம் கட்சி
13.09.2021