தமிழகத்தின் பெருநகரங்கள் தொடங்கி, கிராமப்புறங்கள் வரை எண்ணற்ற போதைப்பொருள்கள் புழக்கத்துக்கு வந்திருக்கின்றன தற்போது தமிழகத்தில் போதைப்பொருள் கடத்தல் விவகாரம் ஒட்டுமொத்தத் தமிழக அரசியல் வட்டாரத்தையும் பரபரப்பாக்கியிருக்கிறது. தி.மு.க-வில், அயலக அணியின் மாவட்டப் பொறுப்பிலிருந்த ஜாபர் சாதிக் என்பவன் தான் கடத்தல் சாம்ராஜ்யத்தின் தலைவனாக இருந்து வந்துள்ளான்.
ஜாபர் சாதிக்கின் நெட்வொர்க் ரொம்பவே பெரிதாக இருக்கிறது. நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, மலேசியா என சர்வதேச அளவில் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டு, போதைப்பொருள் கடத்தலில் கோலோச்சி வந்திருக்கிறார். திரைப்படத் தயாரிப்பாளராகவும், அரசியல் பிரமுகராகவும் அவதாரமெடுத்து போதை, சினிமா, அரசியல் என மூன்று தளங்களிலும் செல்வாக்காக வளைய வந்திருக்கிறார் ஜாபர் சாதிக்.
மேலும் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் சிக்கிய ஜாபர் சாதிக்கின் 8 வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. ஜாபர் சாதிக்கின் வீட்டு பூட்டை உடைத்து அங்கிருந்த ஆவணங்களை பறிமுதல் செய்த போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வீட்டுக்கு சீல் வைத்த நிலையில் தற்போது வங்கிக்கணக்குகளை முடக்கியுள்ளனர்.
இந்த நிலையில் ஜாபர் சாதிக் குறித்து அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியுள்ளதாவது:
தி.மு.க நிர்வாகி ஜாபர் சாதிக், ஒரு பிரபல குற்றவாளி என்பதும், சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரன் என்பதும் தற்போது அனைவரும் அறிந்த உண்மையாகியிருக்கிறது.கடந்த 2019 ஆம் ஆண்டு, 38.687 கிலோ கேட்டமின் (போதைப் பொருள் பயன்பாட்டுக்காக) மலேசியாவிற்கு கடத்தியதற்காக ஜாபர் சாதிக், அவரது சகோதரர் முகமது சலீம் மற்றும் சிலர், போதைப் பொருள்கள் மற்றும் மனநோய் மருந்துகள் சட்டத்தின் (NDPS சட்டம்) கீழ் கைது செய்யப்பட்டனர்.இந்த வழக்கில் இடம்பெற்ற ஜூகோ ஓவர்சீஸ் என்ற நிறுவனத்தின் பெயரில், கடந்த 2021 ஆம் ஆண்டு, ஜாபர் சாதிக் மற்றும் ஒரு பிரபல நபர், தமிழகத்தில் ஒரு நிறுவனத்தைத் தொடங்கியிருக்கிறார்கள்.
கடந்த 2021 ஆம் ஆண்டு மே மாதம் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, ஜாபர் சாதிக் தமிழகத்தை தங்கள் இருப்பிடமாக மாற்றி, தங்கள் போதை சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்த திமுக தலைவர்களுடன் கூட்டுச் சேர்ந்திருக்கிறார்.கடந்த 2013 ஆம் ஆண்டு ஜாபர் போதைப்பொருள் கடத்தலுக்காகக் கைது செய்யப்பட்டதையும், 2019 ஆண்டு, போதைப்பொருள் கடத்தி, கைது செய்யப்படுவதில் இருந்து தப்பித்ததையும் பற்றித் தெரியாத திமுக அறிவிலிகளைப் போல, தமிழக மக்கள் முட்டாள்கள் இல்லை என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன்.திரு.மு.கஸ்டாலின் அவர்கள் இவற்றிற்கு பதிலளிக்க வலியுறுத்துகிறேன். என அண்ணாமலை பதிவிட்டுள்ளார்.



