டெல்லியில் கடந்த சில நாட்களுக்கு முன் போதைப்பொருள் கும்பல்களை கைது செய்யும் நடவடிக்கையும் அது தொடர்பான சோதனைகளும் தீவிரமாக நடைபெற்று வந்தது கடந்த வாரம் தெற்கு டெல்லியில் இரண்டு போதைப் பொருள் குடோனை சோதனை நடத்தியதில் சுமார் 1700 கிலோ போதைப் பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.இதன் மதிப்பு 2000 கோடி ஆகும்.
இது தொடர்பாக தமிழகத்தை சேர்ந்த மூன்று பேரை கைது செய்து விசாரித்ததில் படத்தயாரிப்பாளரும், முன்னாள் திமுக நிர்வாகியுமான சார்ந்த ஜாபர் சாதிக் தான் கடந்த மூன்று ஆண்டுகளாக போதைப்பொருள் சாம்ராஜ்யத்தின் தலைவனாகசெயல்பட்டு வந்துள்ளார் தனது சகோதரர்கள் மைதீன் மற்றும் சலீம் ஆகியோருடன் இணைந்து இந்த போதை பொருள் கடத்தலில் அவர் ஈடுபட்டது விசாரணையில் அம்பலமாகி உள்ளது.
இந்த நிலையில் மதுரையில் ரூ.100 கோடி மதிப்புள்ள ‘மெத்தம் பெட்டமைன்’ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில் இருவர் தலைமறைவாக உள்ளனர். மதுரையில் இருந்து நைஜீரியா உள்ளிட்ட சர்வதேச கடத்தல் கும்பலுடன் தொடர்பில் இருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
மதுரை கே.கே.நகர் வித்யா காலனியைச் சேர்ந்தவர் தமீம் அன்சாரி 57. இவரது வீட்டில் ரூ.100 கோடி மதிப்புள்ள 20 கிலோ ‘மெத்தம் பெட்டமைன்’ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. மத்திய நுண்ணறிவு போதைப்பொருள் தடுப்புப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து தமீம் அன்சாரியை கைது செய்தனர். இவரது வீட்டை போதைப்பொருள் பாதுகாக்கும் இடமாக சென்னை அன்பு, திருச்சி அருண் ஆகியோர் பயன்படுத்தி வந்துள்ளனர். இருவரும் அவ்வப்போது மதுரை வந்து போதைப்பொருளை வைத்துவிட்டு செல்வதும், சில நாட்களுக்கு பிறகு எடுத்துச்செல்வதுமாக இருந்துள்ளனர்.
இதை காவல்துறை சில வாரங்களாக நோட்டமிட்டு சோதனை செய்தபோதுதான் போதைப்பொருள் கடத்தல் வெளிச்சத்துக்கு வந்தது இது குறித்து காவல்துறை கூறியதாவது: சென்னையை சேர்ந்த அன்பு, திருச்சியை சேர்ந்த அருண் இருவரும் நைஜீரியா நபர்களிடம் போதைப்பொருட்களுக்கான மூலப்பொருட்களை வாங்கி தமீம் அன்சாரி வீட்டில் பதுக்கி வைத்து வந்துள்ளனர்.
வாடிக்கையாளர்கள் தேவைக்கு ஏற்ப மதுரை வந்து தேவையான அளவு தயாரித்து எடுத்துச்சென்றுள்ளனர். தமீம் அன்சாரி வீட்டில் விதவிதமான ‘மெத்தா’ வகை போதைப்பொருட்களுக்கான மூலப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஒரு கிராமை ரூ.5 ஆயிரம் வரை விற்றுள்ளனர்.
சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பில் இருந்தால் மட்டுமே ‘மெத்தா’ வகை போதைப்பொருள் எளிதாக கிடைக்கும் என்பதால், அக்கும்பலுடன் அன்பு, அருணுக்கு நேரடி தொடர்பு இருப்பது உறுதியாகிறது. இருவரையும் கைது செய்ய தனிப்படை சென்றுள்ளது. புழல் சிறையில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் உள்ள நைஜீரியர்களிடமும் இதுகுறித்து விசாரிக்க திட்டமிட்டுள்ளோம் என்றனர்.
இந்த நிலையில் இருநாட்களுக்கு முன்னர் சென்னையில் ரூ.180 கோடி மதிப்புள்ள போதை பொருட்கள் பறிமுதல் செய்தனர். பொதிகை ரயிலில் 30 கிலோ மெத்தபெட்டமைன் போதை பொருளை பறிறிமுதல் செய்தனர் காவல்துறை. தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற போது போதைப்பொருள் சிக்கி பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. சென்னை மண்டல வருவாய் புலனாய்வு இயக்குநரக (டிஆர்ஐ) அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையின் போது மதுரை ரயில் நிலையம் மற்றும் சென்னை கொண்டங்கையூர் குப்பை கிடங்கில் சுமார் ரூ. 180 கோடி மதிப்புள்ள 36 கிலோ மெத்தாம்ஃபேட்டமைன் போதைப் பறிமுதல் செய்யப்பட்டது.
29.02.2024 அன்று சென்னையிலிருந்து மதுரைக்கு பொதிகை விரைவு ரயில் சென்றது. இதில் போதைப் பொருள் கொண்டு செல்லப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் வருவாய் புலனாய்வுத் துறையினர் 01.03.2024 அன்று காலை ரயில் மதுரையை அடைந்ததும் சோதனை மேற்கொண்டனர்.சம்பந்தப்பட்ட பயணி அடையாளம் காணப்பட்டு அவரது உடமைகளை பரிசோதித்ததில், மொத்தம் 30 கிலோ எடையுள்ள 15 பாக்கெட்டுகளில் வெள்ளை நிற பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது மெத்தாம்ஃபேட்டமைன் என்று கண்டறியப்பட்டு அது பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக அந்த பயணி மற்றும் அவரது மனைவி இருவரும் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.