ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகளில், சொத்து வரி, மின்சாரக் கட்டணம், குடிநீர் கட்டணம், பால் விலை, பத்திரப் பதிவு கட்டணம், என அனைத்தையும் பல மடங்கு உயர்த்தி, கட்டண உயர்வைப் பொதுமக்கள் தலையில் சுமத்தியுள்ள திமுக அரசு, தற்போது, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவுகள் வெளிவந்ததும், மீண்டும் ஒரு முறை மின் கட்டணத்தை உயர்த்தி, பொதுமக்களுக்கு அதிர்ச்சி அளித்திருக்கிறது.
திமுக அரசு, கடந்த 2023 – 2024 ஒரு நிதி ஆண்டில் மட்டுமே, ரூ.65,000 கோடிக்கு, மின்சாரம் வாங்கியிருக்கிறது. ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகளில், மின் உற்பத்தியைப் பெருக்க எந்த நடவடிக்கைகளும் எடுக்காமல், இந்த மின்சாரம் வாங்கிய செலவை, பொதுமக்கள் தலையில் சுமத்தியுள்ளது. நாடு முழுவதும், சூரிய ஒளி மின்சார உற்பத்தியைப் பெருக்கப் பல மாநிலங்கள் நடவடிக்கைகள் மேற்கொண்டிருக்கையில், மாதம் சுமார் ரூ.5,400 கோடி நிதியை, மின்சாரம் வாங்கச் செலவு செய்திருக்கிறது திமுக. மின் உற்பத்தியைப் பெருக்காமல், விலைக்கு வாங்கும் மின்சாரத்தின் அளவை அதிகரித்துக் கொண்டே இருந்தால், மீண்டும் மீண்டும் மின் கட்டண உயர்வுக்குத் தான் வழிவகுக்கும். இந்த அடிப்படை நிர்வாக அறிவு கூட இல்லாத, முட்டாள்தனமான மாடலாக இருக்கிறது திமுகவின் திராவிட மாடல் அரசு.
எதிர்க்கட்சியாக இருந்தபோது, ஷாக் அடிக்கும் மின் கட்டணம் என்றெல்லாம் பேசி காணொளி வெளியிட்ட முதலமைச்சர் திரு. முக ஸ்டாலின் தற்போது பொதுமக்களுக்குத் தொடர்ந்து ஷாக் கொடுத்து வருகிறார். ஆட்சிக்கு வந்தால், மாதாமாதம் மின் கட்டணம் கணக்கெடுக்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதி கூறி ஆட்சிக்கு வந்து விட்டு, மூன்று ஆண்டுகள் கடந்தும், அதனை நடைமுறைப்படுத்தாமல் இருக்கிறார். மாதாமாதம் மின் கட்டணம் செலுத்தும் நடைமுறை இல்லாமல், பொதுமக்கள் ஏற்கனவே 50% அதிகமாக மின் கட்டணம் செலுத்தி வருகிறார்கள். வீடுகளில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தி, மாதாமாதம் மின் கட்டணத்தைக் கணக்கெடுப்போம் என்று சொல்லி, தற்போது ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தையே கிடப்பில் போட்டு வைத்திருக்கிறார்கள். இந்த நிலையில், திமுகவின் நிர்வாகத் தோல்விக்காக, பொதுமக்கள் மீது கட்டண உயர்வைச் சுமத்துவது எந்த விதத்தில் நியாயம்?
தங்கள் நிர்வாகத் திறனின்மைக்கு, பொதுமக்களைப் பலிகடாவாக்கும் திமுக, உடனடியாக இந்த மின் கட்டண உயர்வைத் திரும்பப் பெற வேண்டும் என்றும், தமிழகம் முழுவதும், சூரிய ஒளி மின்சார உற்பத்தி உள்ளிட்ட மின் உற்பத்தியை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, மாதாந்திர மின் கட்டண நடைமுறையை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்றும், @BJP4Tamilnadu சார்பாக வலியுறுத்துகிறேன். என கூறியுள்ளார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















