சுதந்திரத்திற்காக போராடியவர்களை இழிவுபடுத்திய தமிழக சட்டமன்றம் – இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது – மாநிலத் தலைவர் திரு.காடேஸ்வரா சுப்பிரமணியம் அவர்கள் அறிக்கை #ஜெய்ஹிந்த் தேசத்தின் அடிமை விலங்கை தகர்த்தெறிய முழங்கிய வார்த்தை ஜெய்ஹிந்த். ஜெய்ஹிந்த் என்ற வார்த்தையை கேட்ட மாத்திரத்திலேயே நாடி நரம்பு ரத்தம் சதை எல்லாம் சிலிர்த்து எழுகின்றது.
லட்சக்கணக்கான சுதந்திர போராட்ட வீரர்களை தட்டி எழுப்பிய மந்திரச்சொல் ஜெய்ஹிந்த்.ஆயிரக்கணக்கான தேசபக்தர்கள் சிறை சென்றதும் தடியடிகளை தாங்கியதும் சுதந்திரம் பெற்றதும் ஜெய்ஹிந்த் என்று சொல்லால். ஜெய் ஹிந்த் என்ற மந்திரச் சொல்லை இந்த உலகிற்கு வழங்கியதே நம் தமிழகத்து செண்பகராமன்பிள்ளை.
இன்று சென்னையில் இருக்கும் செயிண்ட் ஜார்ஜ் கோட்டையை ஜெர்மனியிலிருந்து செண்பகராமன் பிள்ளை புறப்பட்டு எம்டன் கப்பல் மூலமாக சென்னைக்கு வந்து இந்தக் கோட்டையை குண்டு வைத்து தகர்த்தார் என்பது வரலாறு .அந்த கோட்டைக்கு இன்றும் செயின்ட் ஜார்ஜ் கோட்டை என்ற பெயரில் இருக்கிறது. அந்த கோட்டைக்கு எப்போதோ” செண்பகராமன் கோட்டை”என்று பெயர் சூட்டி இருக்க வேண்டும் . இந்திய சுதந்திர போராட்டத்தில் மூன்று மாநிலங்கள் மிகப் பெரிய சக்தியாக திகழ்ந்தன.
தமிழகம், மகாராஷ்டிரம், வங்களாம் ஆகியன. அதிலும் பெருமைக்கு உரியது நமது தமிழ்நாடு.
சுதந்திரத்திற்காக உயிரை துச்சமாக மதித்து தடியடியும், தூக்குமேடையும், கொடுஞ்சிறையும் ஒரு பக்கம் தமிழர்கள் அனுபவித்த அதே காலக்கட்டத்தில் தான் நீதிக்கட்சி, திராவிட கழகம் போன்றவை வெள்ளைக்கார கொடுங்கோலன் ஆட்சியின் அடிவருடிகளாக இருந்து, சுதந்திர போராட்டத்தை நீர்த்துப்போக செயல்பட்டன என்பதும் வரலாறு.
திராவிட கழக தலைவராக இருந்த ஈ.வெ.ராமசாமி நாயக்கர், சுதந்திர தினத்தை கருப்பு தினமாக அறிவித்தார் என்பதை தமிழர்கள் மறக்க வேண்டாம்.ஜெய்ஹிந்த் எனக் குறிப்பிட்டாமல் தமிழக கவர்னர் உரை முடித்ததற்கு கொங்கு வேளாளர் கட்சி தலைவர் ஈஸ்வரன் பாராட்டுத் தெரிவித்து, ஜெய் ஹிந்த் என்பதை கேவலமாக சித்தரித்து, தமிழக முதல்வர் முன்னிலையில் பேசியுள்ளார்.
ஜெய் ஹிந்த் என்பது தமிழகத்தின் வீரத்தியாகி செண்பகராம பிள்ளையின் லட்சிய கோஷம். இதனை மூத்த எழுத்தாளர் திரு. ரகமி ஆதாரத்துடன் அவரது சரித்திரத்தை எழுதியுள்ளார். பிரிட்டிஷாரை நாட்டை விட்டு விரட்ட ஜப்பான் நாட்டின் எம்டன் என்ற நீர்முழ்கிக் கப்பல் சென்னை கடற்கரையில் வந்து குண்டு போட்டதும் மாவீரன் செண்பகராமனின் வீர வரலாறு கூறுகிறது. அதனாலேயே நீ என்ன பெரிய எம்டனா? என போலி வீரம் காட்டுபவர்களை இன்றும் கேட்கும் பேச்சு வழக்கு இருக்கிறது.
செண்பக ராமனால் பிரபலமான ஜெய் ஹிந்த் கோஷம் பிறகு நேதாஜியின் கோஷமாக உலக புகழ் பெற்றது. நேதாஜியின் இந்திய தேசிய இராணுவப் படையை ஆதரித்த தமிழர்களின் அன்பிற்கு உரிய ஐயா பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் ஒவ்வொரு சொற்பொழிவிலும் ஜெய்ஹிந்த் வீர கர்ஜனையோடு முடிப்பார்.ஆயிரம் ஆயிரம் இந்தியர்களை ஜெய் ஹிந்த் என்ற கோஷம் உயிர் தியாகம் செய்யவும் துணிவு பிறக்க வைத்தது.
ஜெய் ஹிந்த் என்பது ஹிந்துஸ்தானம் வெல்லட்டும், அதாவது இந்தியா வெல்க! என்பது பொருள்.
இதனாலேயே நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பாரதத்தை சுதந்திர நாடாக பிரகடனப் படுத்தியபோது ஆசாத் ஹிந்த் என்று அதாவது சுதந்திர ஹிந்துஸ்தானம் என ஜப்பான் உள்பட பல நாடுகளின் ஆதரவோடு அறிவித்தார். ஆசாத் ஹிந்த் 75வது ஆண்டு விழா இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. நேதாஜி நிறுவிய அரசு எத்தகை தொலைநோக்கு பார்வையோடு இருந்தது என்பது இந்த அரசியல்வாதிகள் படித்தாவது அறிந்திருப்பார்களா?
அதன் பிறகே பிரிட்டிஷார் இனி இந்தியாவை அடிமைப்படுத்தி வைப்பது ஆபத்தாக முடியும் என இந்தியாவைவிட்டு வெளியேற முடிவு செய்தானர்.தமது நிர்வாக குளறுபடியை மக்களிடையே மறைக்க இதுபோன்ற கேவலமான கருத்துக்களைக்கூறி திசைத்திருப்ப முனைகிறதா திமுக அரசு என்பது மக்களின் ஐயம்.இந்திய சுதந்திரப்போராட்ட சரித்திரம் கூட தெரியாத கூட்டம், ஜெய் ஹிந்த் என்பதை கேவலமாக பேசி, ஏளனப்படுத்தியது, தமிழர்களின் வீர வரலாற்றை களங்கப்படுத்தும் செயல். இதனை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.
உடனடியாக தமிழக முதல்வர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்கள், ஈஸ்வரன் பேசிய தேசவிரோத பேச்சுக்களுக்கு சட்டசபையில் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்கவும், அவரது பேச்சை சபை குறிப்பிலிருந்து நீக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து முன்னணி சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
இந்த வரலாற்று பிழையை தமிழக அரசு சரிசெய்யாமல் அலட்சியப் படுத்தினால், சட்டமன்ற உறுப்பினர் திரு. ஈஸ்வரன் அவர்களைக் கண்டித்து இந்து முன்னணி போராடும், மேலும் தேசத்தை அவமானப்படுத்தியதற்காக சட்ட ரீதியான போராட்டத்தையும் துவக்கும் எனவும் எச்சரிக்கிறோம்.