ஃபேஸ்புக்கில் இருப்பவர்களில் 5% கூட இதன் அர்த்தமும் தெரியாது அதன் இடைத்தரகர்கள் வலியும் தெரியாது என்பது எதார்த்தம். முதலில் அவர்கள் விவசாயிகளாகவே இருக்க மாட்டார்கள், அல்லது அவர்களுக்கு அந்த அனுபவம் இருந்திருக்காது. அதனால் மோடிக்கு ஒரு பின்னடைவு என்று தான் சார்ந்த கட்சி எனும் கண்ணாடி மாட்டிக்கொண்டு வெற்றியாக பார்ப்பவர்கள் ஒருபுறம். அதை அவர்கள் பெரும் வெற்றியாக கொண்டாடி, அதை வைத்துக்கொண்டு மோடி மீது இருந்த தீராத வெறுப்பை காட்டி பெரும் தோல்வி என்று ஒரு புறம் வர்ணிக்க, இது என் கௌரவ குறைச்சல், அவரைவிட அதை ஆதரித்த எனது நிலைக்கு ஏற்பட்ட மானபங்கம் என்ற நிலையில் மோடியின் மீது கோபம் கொண்டாலும் அதை வேறு வழியில் சமாளிக்க மறுபுறம் அவரின் ஆதரவாளர்கள் முயல்வதும் மனிதனின் இயல்பு.
ஏனெனில் நாம் எல்லாம் சாதாரண வறட்டு கௌரவத்திற்கு நம்மை அறியாமல் அடிமையானவர்களே! அதனால்தான் நம்மை காலம் காலமாக எமோஷனலாக பிரித்து, நம்மை எளிதாக அரசியல்வாதிகள் இன்றும் ஆள்கிறார்கள். இதை எப்படி பார்ப்பது? இதன் அர்த்தம் என்ன? ஒரு விவசாயியின் மகனாக என் அனுபவத்தில் நடந்ததை எழுதுகிறேன் !
இந்தியாவில் கிட்டத்தட்ட எல்லா மாநிலங்களிலும் இது ஏற்கனவே இடைத்தரகர்கள் ஒழிக்கப்பட்டு சற்றேறக்குறைய இது போன்ற சட்டம் நடைமுறையில் கொண்டு வந்து விட்டார்கள். அதை செய்த முன்னோடி மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. அதுவும் என் நினைவு சரியாக இருப்பின் இதை கொண்டுவந்தது திமுகதான். அப்படி இருக்க அதையே இன்று மோடி செய்ததால் எதிர்க்கிறார்கள் என்று சிரிப்பதா? அழுவதா? என்றால் இது என்ன பெரிய விஷயம் நாங்கள் முந்தைய ஆட்சியில் கையெழுத்து போட்டதையே இந்த ஆட்சியில் எதிர் கட்சியாக எதிர்த்து போராடும் அவர்களுக்கு இது ஒன்றும் புதிதல்ல! இதை எல்லாம் கட்சியின் ஆதரவாளர்கள் ஒரு போதும் பார்க்க போவதில்லை, அடிமைத்தனம் கண்களை மறைப்பதால்.
எங்கள் பள்ளி பருவத்தில், பருத்தி, புகையிலை போன்ற குறிப்பாக பணப்பயிரை விற்க வேண்டுமெனில் லைசென்ஸ் பெற்ற ஒரு சில இடைத்தரகர்களே பக்கத்தில் இருக்கும் தாராபுரத்தில் இருப்பார்கள். கம்பு, சோளம், நெல் போன்றவற்றிக்கும் பிரச்சினை உண்டு என்றாலும், அது எல்லாம் விவசாயிகளுக்குள் பண்ட மாற்று முறையில் கொடுத்து வாங்கி கொள்வதால் அதற்கு பெரும் பிரச்சினை எங்கள் ஊரில் இருந்தது இல்லை. இந்த இடைத்தரகர்களுக்கு எங்களுக்கும் தலை முறை தலைமுறையாக ஒரு வகையான புரிதல் (கடன்தான்) இருக்கும். அதனால் வேறு வழி இல்லாமல் அடிமாட்டு விலைக்கு அவர்களிடம் மட்டுமே கொடுக்க முடியும். அதுவும் விளைவிக்கும்போது அல்லது தேவைப்படும்போது எங்களுக்கு அரசு கொடுக்கும் விவசாய பயிர் கடன் எல்லாம் குறித்த காலத்தில் கிடைக்காது. அதனால் அந்த இடைத்தரகர்களிடம்தான் வட்டிக்கு கடன் வாங்குவோம். அதற்கு ₹100 க்கு ₹4 லிருந்து ₹2 வரை வட்டி காலத்திற்கு ஏற்ப கொடுக்க வேண்டும். அப்படி நாம் கடன் வாங்கி விட்டால் நாம் வேறு மண்டியில் அந்த பொருளை விற்க அனுமதிக்க மாட்டார்கள். ஏனெனில் அது அவர்களுக்குள் உள்ள புரிதல்.
பெரும்பாலும் அந்த மண்டிகள ஒரு உறவை சேர்ந்தவர்களானதாகவே இருக்கும் உதாரணமாக பருத்தி விற்க வேண்டுமெனில் அவர்களிடம் போய் முதலில் சொல்லி விட வேண்டும். அவர்களிடம் இருந்து பஞ்சு போட சாக்கு பைகளை முதலில் வாங்கவேண்டும். ஆனால் அதைக்கூட கேட்கும் நேரத்தில் கொடுக்க மாட்டார்கள். அதனால் களத்தில் கிடக்கும் பருத்தி காய்ந்து எடை ஒவ்வொரு நாளும் குறைந்து கொண்டே போகும். எடை குறையத்தான் சாக்கை வைத்துக்கொண்டே இல்லை என்று சொல்கிறான் என்று அவர்கள் சூட்சுமம் பற்றி என் தாத்தா சொல்வார்.
அப்படி மண்டிக்கு நடையாய நடந்து சென்று கெஞ்சாத குறையாக கேட்க வேண்டும், ஏனெனில் அப்போது போன் எல்லாம் இல்லை. சில நேரங்களில் அதற்கு சிறு விவசாயிகளுக்கு ரெகமெண்டெஷன் வேறு தேவைப்படுவதுண்டு. இது எல்லாம் முடிந்து சாக்கு கிடைத்து வண்டியில் பஞ்சை ஏற்றிக்கொண்டு சென்று அவர்கள் குடோனில் சேர்க்க வேண்டும். அப்போது எடை பார்க்க ராத்தல் மெஷின் என்று சொல்வார்கள், அதில் நாம் ஏற்கனவே களத்தில் போட்டு பார்த்த எடையை விட குறைவாக வரும். சண்டை போட்டுத்தான் வித்தியாசத்தை குறைக்க வேண்டும். பல சிறு விவசாயிகளிடம் அந்த ராத்தல் கூட இல்லை என்றால் அவர்கள் ஏமாற்றி சொல்லுவதே முடிவான எடையாகிவிடும்.
இது எல்லாம் முடிந்து கடைசியில் கணக்கு பார்த்தால் அவர் கொடுத்த கடனுக்கு வட்டி குட்டி போட்டு வாங்கிய கடன் கட்ட கூட முடியாமல் போகும். பிறகு என்ன, அதை வைத்துத்தான் பெரிய பிளான் போட்டிருப்போம், எனவே வேறு வழியில்லாமல் மீண்டும் கெஞ்சி கடன் வாங்க வேண்டும். ஏனெனில் நமக்கு வேறு வழியே இல்லை, அவர்களைத்தவிர வேறு யாரிடமும் விற்க முடியாது. இப்படியே கடன் கொடுத்து வட்டி என்ற கணக்கில் அட்டையாக விவசாயியின் ரத்தத்தை அந்த காலத்திலேயே உறிஞ்சினார்கள் என்றால் அரசியல் வியாதிகளால் இந்த மண்டிக்காரர்களுடன் கூட்டணி வைத்து ஆளப்படும் இன்று எப்படி இருக்கும்?இப்படி அந்த இடைத்தரகர்கள் செய்த அட்டூழியங்கள் மிக மோசமானவை. அவற்றை தமிழக அரசு நீக்கி, அரசு சார்ந்த விற்பனை சாவடிகளை கொண்டுவந்தபின் அட்டூழியங்கள் பெருமளவில் குறைந்து போய் விட்டது.
இன்று கூட இது போன்ற இடைத்தரகர்கள் இங்கு உண்டு, ஆனால் கூட்டுறவு மண்டிகள் இருப்பதால் அவர்கள் கட்டுப்பாடு வெகுவாக குறைந்துள்ளது.இந்த இடைத்தரகர்கள் மூலம் மட்டும் விற்கும் அடிமைத்தனம் இன்றும் பஞ்சாப், ஹரியானா, மஹாராஷ்டிரா போன்று வெகு சில மாநிலங்களில் மட்டுமே உள்ளது. இவர்கள் மூலம் கோடிக்கணக்கான கமிஷன் அரசியல் வாதிகளுக்கு போவதால் இதை அவர்களும் சேர்ந்து கடுமையாக எதிர்க்கிறார்கள். அப்படி இருக்க விவசாயி இதற்கு எதிராக ஏன் போராடவில்லை?விவசாயிகள்தான் ஏற்கனவே கடன் வாங்கி அவர்களிட அடிமையாக உள்ளார்களே, அதை மீறி அரசுக்கு ஆதரவாக போராட போனால் அவர்களிடம் உள்ள குண்டர்கள் மூலம் கடனை உடனே கொடுக்கச்சொல்லி கட்டாயப்படுத்துவார்கள். அப்போது ஒரு விவசாயிக்கு உதவ இன்னொரு விவசாயி வர முடியாது.
அப்படியே வரும் விவசாயிகள் இப்படி மாசக்கணக்கில் எல்லாம் போராட முடியாது. ஏனெனில் கால்நடைகளை பார்க்க வேண்டும், பயிருக்கு நீர் பாய்ச்ச, பால் கறக்க என்று நேரம் தவறாமல் செய்தே ஆக வேண்டியது அவன் விதி. அது மட்டுமல்ல விவசாயிகளிடம் ஒற்றுமை என்பதெல்லால் ஒரு காசுக்கு கூட கிடையாது. அரசாங்கமும் கமிஷன் கொடுக்கும் மண்டிகள் கைவசம் இருப்பதால், அவர் மீறி போலீஸில் புகார் கொடுத்தால், நம் மீதே நாலு வழக்கில போட்டு உள்ளே வைத்துவிடுவார்கள், அவ்வளவு செல்வாக்கு அவர்களுக்கு. இது எல்லாம் விவசாயிக்கே புரியாத புதிராக இருக்கும்போது விவசாய தினத்தன்று ஃபேஸ்புக்கில் அல்லது வாட்சப்பில் வாழ்த்தும் நமக்கா புரியப்போகிறது ?
இந்த அவலங்கள் எல்லாம் தன் மகனோ, மகளோ படக்கூடாது என்பதற்குத்தான் ஆடு மாடுகளை, தோட்டத்தை விற்று எங்களை எல்லாம் படிக்க வைத்து வேலைக்கு அனுப்பினார்கள் எங்கள் பெற்றோர்கள். அந்த கஷ்டம் இப்போது என் குழந்தைகளுக்கே தெரியாதபோது விவசாயத்திற்கு தொடர்பே இல்லாதவர்களுக்கா புரியப்போகிறது?!எனவே இது மோடியின் தோல்வி என்பதை அரசியல் கட்சிகள் கூறலாம், ஆனால் மேற்சொன்ன மாநில விவசாயிகளின் மிக மோசமான தோல்வி என்பதை விட விதி என்பதே சாலப்பொருந்தும். இதில் மோடி அரசியல் செய்ய வில்லையா? ஆம் இன்று பஞ்சாபில் கூட்டணிக்காக அம்ரீந்தர் சிங்கின் அழுத்தத்திற்கு கிடைத்த வெற்றி என்று அரசியல் இருப்பதை மறைக்க முடியாது.
ஆனால் இது மோடியால் மாற்ற முடியாதது அல்ல, சமயம் சாதகமாக இல்லாததால் தள்ளிப்போகிறது என்பதே என் நம்பிக்கை!விவசாயிகளுக்கு இருக்கும் ஒரே வழி சரியானவர்களை தேர்தலில் தேர்ந்தெடுப்பதே! அது முடியாமல் போனால் விடியாத விடியலை நோக்கி காத்திருக்கும் விவசாயிகளுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்!குறிப்பு: அனுபவம் கொண்ட விவசாயிகள் உங்கள் அனுபவங்களை பகிருங்கள். அது மற்றவர்களுக்கு புரிய வைக்க உதவும்!
கட்டுரை :-முரு.தெய்வசிகாமணி