வேளாண் சட்ட விவகாரத்தில் காங்கிரஸ் செய்ய முடியாததை பா.ஜ., செய்துள்ளதாக பாஜ.,வில் உள்ள நடிகை குஷ்பு கருத்து தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியில் செய்தித்தொடர்பாளராக இருந்து சமீபத்தில் பா.ஜ.,வில் சேர்ந்த நடிகை குஷ்பு, மதுரையில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.2,500 வழங்குவது தவறல்ல. எல்லா செயல்பாடுகளுக்கும் மாற்று கருத்துகள் இருக்கும். நல்லது நடந்தாலும் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். இல்லத்தரசிகளுக்கு ஊதியம் வழங்கப்படும் என கமல்ஹாசன் கூறியது வரவேற்கத்தக்கது.
தமிழகத்தில் யார் முதல்வர் வேட்பாளர் என்பதை பா.ஜ., தலைமை மட்டுமே முடிவு செய்யும். இது தொடர்பாக பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, முதல்வர் பழனிசாமி இணைந்து பேசுவார்கள். எதிர்க்கட்சிகளால் தூண்டிவிடப்பட்ட போராட்டம் தான் விவசாயிகள் போராட்டம். விவசாயிகள் வாழ்வில் விளையாட வேண்டாம். வேளாண் சட்டத்தை அனைவரும் படித்து பார்க்க வேண்டும். வேளாண் சட்ட விவகாரத்தில் காங்கிரஸ் செய்ய முடியாததை பா.ஜ., செய்துள்ளது. விவசாயிகளை பாதுகாக்கவே சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.