சென்னை: கூட்டுறவு ரேஷன் கடைகளுக்கு, ஊழியர்களை தேர்வு செய்வதற்கான, நேர்முகத்தேர்வு, வரும், 25ல் துவங்குகிறது.
தமிழகத்தில் கூட்டுறவு துறையின் கீழ், 33,500 ரேஷன் கடைகள் நடத்தப்படுகின்றன. அவற்றில் விற்பனையாளர், எடையாளர் பணியில், அதிக காலியிடங்கள் உள்ளதால், ஒருவரே இரண்டு மூன்று கடைகளை சேர்த்து கவனிக்கின்றனர். இதனால், ஊழியர்களுக்கு பணிச்சுமை அதிகம் உள்ளது.
எனவே, ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள ரேஷன் கடைகளில், காலியிடங்களுக்கு ஊழியர்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை, கூட்டுறவு துறையின் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையங்கள், இம்மாத துவக்கத்தில் வெளியிட்டன. அதன்படி, 2,000க்கும் மேற்பட்ட காலியிடங்களுக்கு ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்து உள்ளனர்.
அவர்களுக்கான நேர்முக தேர்வு வரும், 25ம் தேதி முதல் துவங்குகிறது. முதலில் விற்பனையாளர், அடுத்து எடையாளர் பணிக்கு, நேர்முகத்தேர்வு நடத்தப்பட உள்ளது. இதற்கான, ‘ஹால் டிக்கெட்டை’ விண்ணப்பதாரர்கள் வரும் நாட்களில், தாங்கள் விண்ணப்பித்த மாவட்ட ஆள் சேர்ப்பு நிலையங்களின் இணையதளத்தில், பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
நேர்முகத் தேர்வுக்கு வரும் போது, புகைப்படம், அனைத்து சான்றுகளின் அசல் மற்றும் சுயசான்று கையெழுத்திட்ட நகல்களை கொண்டு வர வேண்டும் என, ஆள் சேர்ப்பு நிலையங்கள் அறிவுறுத்தி உள்ளன.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















