சார்வரி ஆண்டு தொடங்கி, முதல் பிரதோஷம் நாளைய தினம் (20.04.2020 திங்கட்கிழமை) வருகிறது.
சிவ வழிபாட்டில், பிரதோஷ வழிபாட்டுக்கு மிக மிக முக்கியத்துவம் உண்டு. இந்தநாளில், சிவ தரிசனம் செய்வது ரொம்பவே விசேஷம். சிவ துதிகளைப் பாராயணம் செய்தும் ருத்ரம் ஜபித்தும் சிவபெருமானை வணங்குவது பக்தர்கள் வழக்கம்.
இன்னும் சிலர், பிரதோஷ நாளன்று விரதம் மேற்கொண்டு, சிவ தரிசனம் செய்வார்கள்.
சிவாலயங்களில், மாலையில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். மாலை 4.30 முதல் 6 மணி வரையிலான நேரம் பிரதோஷ காலம் என்கிறது புராணம். அப்போது, சிவனாருக்கும் நந்திதேவருக்கும் விசேஷ அபிஷேகங்கள் நடைபெறும். இன்னும் சொல்லப்போனால், 16 வகையான அபிஷேகங்கள் நடைபெறும்.
சிறப்பு அலங்காரங்களும் நடைபெறும். ஆனால் இப்போது கரோனா வைரஸ் எதிரொலியால், ஊரடங்கு வீடடங்கு என்று முடங்கிப் போயிருக்கிறோம். ஆலயங்களின் நடையும் சார்த்தப்பட்டுள்ளது. எனவே பிரதோஷ வழிபாட்டை வீட்டிலிருந்தே செயல்படுத்துவோம்.
20.4.2020 திங்கட்கிழமை பிரதோஷம். திங்கட்கிழமையை சோமவாரம் என்பார்கள். அதேபோல, திங்களன்று வரும் பிரதோஷத்தை சோம வாரப் பிரதோஷம் என்று கொண்டாடுகிறார்கள் சிவாச்சார்யர்கள். ஆகவே, நாளைய தினமான, சோம வாரப் பிரதோஷ நாளில், வீட்டிலிருந்தபடியே சிவ வழிபாடு செய்யுங்கள். சிவ துதிகளைப் பாராயணம் செய்யுங்கள்.
முடிந்தால், பசுவுக்கு அகத்திக்கீரையோ உணவோ வழங்குங்கள். அதேபோல், ஐந்துபேருக்கேனும் தயிர்சாதமோ புளிசாதமோ உணவுப் பொட்டலம் வழங்குங்கள். சிவனாரின் அருளைப் பெற்று, சகல துக்கங்களில் இருந்தும் விடுபடுவீர்கள். கடன் தொல்லையில் இருந்து மீள்வீர்கள். எல்லா சந்தோஷங்களும் கிடைத்து இனிதே வாழ்வீர்கள்.
பிரதோஷம் சோமவாரப்பிரதோஷம் சிவவழிபாடு முதல்பிரதோஷம்