இந்திய தேசத்தின் உள்ளும், எல்லைக்கு அப்பாலும் உலகெங்கும் வாழக்கூடிய இந்துக்கள் அனைவராலும் கொண்டாடப்படக்கூடிய மிக முக்கியமான விழா ’விநாயகர் சதுர்த்தி’ ஆகும்.
மண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை பத்து தினங்கள் தங்களுடைய வீடுகளிலும், பொது இடங்களிலும் அலங்கரித்து, அவற்றை ஆடல் பாடலுடன் எடுத்துச் சென்று அருகாமையில் உள்ள நீர்நிலைகளில் கரைப்பதே ‘விநாயகர் சதுர்த்தி’யின் சிறப்பம்சமாகும்.
இந்துக்களின் ஒவ்வொரு விழாவிற்குள்ளும் ஏதாவது ஒரு நல்ல அடிப்படை அம்சம் அல்லது காரணம் ஒளிந்திருக்கும். இறை நம்பிக்கையைத் தாண்டி இந்துக்களின் ஒற்றுமையையும், தேச ஒற்றுமையையும் வலியுறுத்துவதே விநாயகர் சதுர்த்தியின் சிறப்பு அம்சமாகும்.
இந்த உண்மை வரலாற்றைத் தெரிந்து கொள்ளாததால், இது குறிப்பிட்ட ஒரு தேசிய கட்சி அல்லது ஒரு முன்னணி அல்லது ஒரு சங்கத்தின் விழாவாக மட்டுமே சிலர் குறுக்கிப் பார்க்கிறார்கள். அது தவறு.
கரோனாவை காரணம் காட்டி ஆண்டுதோறும் கோடான கோடி இந்துக்களால் அனுசரிக்கப்படக் கூடிய விநாயகர் சதுர்த்தி விழாவை தமிழகத்தில் அடியோடு ரத்து செய்வது என்பது முறையானது அல்ல.
கரோனா கட்டுப்பாடுகள் இன்னும் முழுமை பெறாத நிலையில், சில கூடுதல் கட்டுப்பாடுகளுடன் விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு அனுமதி அளிப்பதே சரியானதாக இருக்க முடியும்.
அதை விடுத்து விநாயகர் சதுர்த்தியை வீட்டிற்குள் வைத்துத் தான் கொண்டாட வேண்டும்; வெளியில் சிலை வைக்கவோ, ஊர்வலமாக எடுத்துச் செல்லவோ, நீர்நிலைகளில் கரைக்கவோ அனுமதி இல்லை என மாநில அரசு தெரிவிப்பதை உள்நோக்கம் கொண்டதாகவே கருத முடியும்.
நாங்கள் ’திராவிட அரசு’; ’விநாயகர் சதுர்த்தி’ என்பது ’ஆரிய விழா’ என்றெல்லாம் ’இன வேறுபாடு’ காட்டி அதற்குத் தடை விதிக்கப்படுமேயானால் அது அபத்தமாகிவிடும்.
விநாயகர் சதுர்த்தி நாடெங்கும் கொண்டாடப்படுவதற்கான அடிப்படை அம்சங்களையும்; சுதந்திரத்திற்கு முன்பு நிலவிய அரசியல் சூழ்நிலைகளையும் கொஞ்சம் திரும்பிப் பார்க்க வேண்டும்.
இந்தியாவில் ஆயிரமாயிரம் சாதிகள்; சாதிக்கொரு வீதி; வீதிக்கொரு சாமி-கோவில் என்றும்; பிராமண கடவுள், தமிழ் கடவுள், கன்னட கடவுள், தெலுங்கு கடவுள், ஆரியக் கடவுள், காரியக் கடவுள் என்றும் பிரிந்து கிடந்த இந்திய மக்களையெல்லாம் வேறுபாடுகளும், ஏற்றத்தாழ்வுகளும் இல்லாமல் ’இந்து’ என்ற ஒற்றை அடையாளத்திற்குள் கொண்டு வர கிராமம் முதல் நகரங்கள் வரை அனைத்து இந்துக்களாலும் கொண்டாடப்பட்டதே ’விநாயகர் சதுர்த்தி விழா’ ஆகும்.
விநாயகர் சதுர்த்தியால் இந்துக்களும்; இந்துக்களால் விநாயகர் சதுர்த்தியும் அடையாளப்படுத்தப்படுகிறது. சிலர் விவரம் தெரியாமல் இவ்விழா ’வடக்கிலிருந்து வந்தது, கிழக்கிலிருந்து வந்தது’ என எக்காளம் பேசுகிறார்கள்.
விநாயகர் சதுர்த்தி வெறும் கடவுள் பக்தியை மட்டும் உருவாக்க வந்ததல்ல. இந்தியத் தேசத்தின் மீதான பக்தியை உருவாக்கவும்; கிழக்கிந்திய கம்பெனி வழியாக இந்தியத் தேசத்தைக் கபளீகரம் செய்து கொண்டிருந்த பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பதற்கான ஒரு போர்த் தந்திரமாகவுமே ’விநாயகர் சதுர்த்தி விழா’ நாடெங்கும் பிரபல்யப்படுத்தப்பட்டது.
யார் யாரோ செய்த தியாகங்களாலும், அர்ப்பணிப்புகளாலும் பெற்ற சுதந்திரத்தால் சொகுசாக ஆட்சியில் அமர்ந்து கொண்டவர்களுக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நிலவிய இந்திய அரசியல் சூழல் தெரிய வாய்ப்பில்லை.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















