கோவா சட்டசபைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி (பாஜக) ஆட்சியைத் தக்க வைக்கும் என்று Polstrat-NewsX கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜகவுக்கு 20 முதல் 22 இடங்களும் ஆம் ஆத்மிக்கு 5 முதல் 7 இடங்களும் காங்கிரஸுக்கு 4 முதல் 6 இடங்களும் கிடைக்கும் என்கிறது இக்கருத்து கணிப்பு.கோவா சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. கோவாவில் ஆளும் பாஜக ஆட்சியைத் தக்க வைக்க முயற்சித்து வருகிறது
பிரதான எதிர்க்கட்சியாக இருந்த காங்கிரஸ் கட்சியின் பல தலைவர்கள் பாஜகவுக்கும் திரிணாமுல் காங்கிரஸுக்கும் தாவிவிட்டனர். கோவா தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளும் போட்டியிடுகின்றன. இந்த நிலையில் Polstrat-NewsX 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என கருத்து கணிப்பை வெளியிட்டுள்ளது. இதில் கோவா மாநிலத்தில் ஆளும் பாஜக ஆட்சியைத் தக்க வைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காங்கிரஸ் கட்சிக்கு சிங்கிள் டிஜிட் இடங்கள்தான் கிடைக்கும் என்கிறது இக்கருத்து கணிப்பு
Polstrat-NewsX கருத்து கணிப்பு விவரம்: பாஜகவுக்கு 20 முதல் 22 இடங்கள் கிடைக்கக் கூடும். பாஜக 32.80% வாக்குகள் பெற வாய்ப்புள்ளது. பாஜகவுக்கு அடுத்ததாக ஆம் ஆத்மி கட்சிக்கு 5 முதல் 7 இடங்கள் கிடைக்கலாம். ஆம் ஆத்மி கட்சியானது 22.10% வாக்குகளைப் பெற வாய்ப்புள்ளது. காங்கிரஸ் கூட்டணிக்கு 4 முதல் 6 இடங்கள் கிடைக்குமாம். காங்கிரஸ் அணி 18.80% வாக்குகளைப் பெறுமாம்.
முதல்வர்- யாருக்கு ஆதரவு?
மேலும் முதல்வர் பதவிக்கு பாஜகவின் பிரமோத் சாமந்துக்கு அதிக ஆதரவு இருக்கிறது என்கிறது இந்த கருத்து கணிப்பு. அதாவது பிரமோத் சாமந்துக்கு 31.40% பேரும் காங்கிரஸின் திகம்பர் காமத்துக்கு 23.60% பேரும் ஆதரவை தெரிவித்துள்ளனர். கோவா தேர்தல் களத்தில் கனிம சுரங்கங்கள் விவகாரம் முக்கிய இடம்பிடிக்கும் என 19% பேர் தெரிவித்துள்ளனர். அடுத்ததாக சுற்றுலா தொழில் இடம்பெறும் என 14.30% பேரும் உட்கட்டமைப்பு என 13.80% பேரும் கொரோனா தடுப்பூசிகள் என 12.20% பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
Polstrat-NewsX கருத்து கணிப்பானது, உள்ளூர் எம்.எல்.ஏக்கள் யார் என்பதை வைத்து 22.20% பேரும் மதத்தின் அடிப்படையில் 19% பேரும் கட்சிகளின் தேசிய தலைவர்களை முன்வைத்து 18.50% பேரும் மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே கட்சி ஆட்சி இருக்க வேண்டும் என்பதற்காக 14.90% ஜாதி அடிப்படையில் 6.90% பேரும் வாக்களிப்போம் என கூறியிருப்பதாக தெரிவித்திருக்கிறது.