சென்னை அண்ணா சர்வதேச விமான முனையத்தில், விமான நிலைய சுங்கத்துறையினர் 2024, அக்டோபர் 8 அன்று நடத்திய சோதனையில், ரூ.1.02 கோடி மதிப்புள்ள கடத்தல் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களில், 700 கிராம் எடையுள்ள 24 கேரட் தங்கச் சங்கிலிகள், 3,220 மின்னணு சிகரெட்டுகள் மற்றும் 4 ஐஃபோன்கள் அடங்கும்.
மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த ரகசியத் தகவலின் பேரில், கோலாலம்பூரிலிருந்து சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த 4 பயணிகளை விமான நிலைய சுங்கத்துறையினர் இடைமறித்து சோதனை செய்தனர். இந்த சோதனையின் போது 700 கிராம் எடையுள்ள 24 கேரட் தூய்மையான 2 தங்கச் சங்கிலிகளை அவர்களது உள்ளாடையில் மறைத்து கடத்தி வந்தது கண்டறியப்பட்டது.
இதே போன்று 3,220 மின்னணு சிகரெட்டுகள் மற்றும் 256 ஜிபி திறனுள்ள ஐஃபோன் 16 ப்ரோ 4-ம் அவர்களது உடமைகளில் மறைத்து கடத்தி வந்தது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மொத்தம் மதிப்பு ரூ.1.02 கோடியாகும். இது தொடர்பாக ஒரு பயணி கைது செய்யப்பட்டு மேல் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.