ழங்குடியின மக்களைப் பின்தங்கிய மக்கள் என்று நினைக்கக்கூடாது என்றும், இவர்கள்தான் இந்தியப் பாரம்பரிய கலாச்சாரத்தின் அடையாளம் என்றும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் சென்னை மத்திய மக்கள் தொடர்பகத்தின் சார்பில், திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலையில் உள்ள விளாங்குப்பம் கிராமத்தில் பிரதமரின் பழங்குடியினர் மேம்பாட்டுத் திட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராக பங்கேற்ற ஆளுநர் ஆர்.என்.ரவி,செல்வ மகள் சேமிப்பு கணக்குப் புத்தகங்களையும்,நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
பின்னர் அங்கு திரண்டிருந்தோரிடையே உரையாற்றிய அவர், நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளாகியும் 75 பழங்குடி குழுக்களைச் சேர்ந்தவர்கள் பின்தங்கியுள்ளனர் என்றும், இவர்களின் நிலையை மாற்றி அமைக்கும் முயற்சியாக பிரதமர் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் என்றும் கூறினார். இத்திட்டங்களின் பயன்களை பழங்குடியின மக்கள் பெற்றால்தான் அரசு திட்டங்கள் முழுமை பெறும் என்று அவர் தெரிவித்தார்.
தமிழகத்தில் முத்ரா வங்கி கடன் திட்டத்தில் 1 கோடியே 20 லட்சம் பேர் பயனடைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
முன்னதாக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு உற்சாக வரவேற்பு அளித்த பழங்குடியின மகளிர்,மலைப்பகுதியில் விளைகின்ற சாமை,தினை,வரகு போன்ற சிறுதானியங்களையும், கொய்யா, சப்போட்டா போன்ற பழ வகைகளையும் பரிசளித்தனர். பழங்குடியின மக்களுடன் ஆளுநர் உணவருந்தினார்.மத்திய மக்கள் தொடர்பகத்தின் சார்பில் மரக்கன்றுகளையும் ஆளுநர் நட்டு வைத்தார்.
விழாவின் ஒருபகுதியாக, மத்திய அரசின் திட்டங்கள் குறித்த மத்திய மக்கள் தொடர்பகத்தின் கண்காட்சி,இந்தியன் வங்கியின் சுயதொழில் பயிற்சி மையத்தால் உற்பத்தி செய்யப்பட்ட பொருள்கள் கண்காட்சி, ஒருங்கினைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் போஷன் அபியான் கண்காட்சி, அஞ்சல் துறையின் ஆதார் பதிவு முகாம் ஆகியவை நடைபெற்றன.
இவ்விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் பாஸ்கர பாண்டியன், முன்னோடி வங்கியான இந்தியன் வங்கியின் மாவட்ட மேலாளர் கெளரி, சென்னை பத்திரிகை தகவல் அலுவலகத்தின் துணை இயக்குநர் விஜயலட்சுமி, ஊரக மக்கள் முன்னேற்ற சங்கத்தின் தலைவர் டாக்டர்.அர்ச்சுனன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.