திருவண்ணாமலை மாவட்டம் திருவண்ணாமலை அடுத்த மங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் அஞ்சலை பள்ளியில் நேற்று இலவச சைக்கிள் வழங்கும் விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.காலை, 10:00 மணி முதல், பள்ளி மைதானத்தில் கடும் வெயிலில் மாணவ — மாணவியர் காத்திருந்தனர்.
தெள்ளானந்தல் கிராமத்தில் நடந்த அரசு விழாவை முடித்து, பகல், 12:30 மணிக்கு துணை சபாநாயகர் பிச்சாண்டி வந்தார். கலசப்பாக்கம் தொகுதி தி.மு.க. – எம்.எல்.ஏ., சரவணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். விழா மதியம், 1:15 மணி வரை நடந்தது.
இந்த நிலையில் பள்ளி மாணவிகள் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக வெயிலில் நிற்க வைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. நீண்ட நேரம் மாணவிகள் வெயிலில் நிற்கவைக்கப்பட்ட நிலையில், சிறுமி அஞ்சலை சோர்வு காரணமாக மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளார்.
இதய நோயால் பாதிக்கப்பட்ட ராந்தம் கிராமத்தைச் சேர்ந்த அப்பள்ளி மாணவி அஞ்சலை, 15, மைதானத்தில் வெயிலின் தாக்கத்தால் நிற்க முடியாமல் மயங்கி விழுந்தார். அவரை மீட்டு, மங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி அளித்து, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு துாக்கி செல்லும் வழியில், மாலை, 3:00 மணிக்கு இறந்தார்.
அவரது உடல், திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்ட நிலையில், நேற்று மாணவியின் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு, மாணவி இறப்பிற்கு நிவாரணம் கேட்டு போராட்டம் நடத்தினர்.
காவல்துறையினர் பேச்சு நடத்தியதை தொடர்ந்து, நேற்று மாலை, 4:00 மணிக்கு போராட்டத்தை கைவிட்டனர். உயிரிழந்த மாணவி குடும்பத்திற்கு, 3 லட்சம் ரூபாய் இழப்பீடு மற்றும் மாணவியின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை அளிப்பதாக, அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதனால், மாணவியின் உறவினர்கள் சமாதானமடைந்தனர். மங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.
இச்சம்பவம் அந்த கிராமமக்கள் மற்றும் அப்பள்ளி மாணவர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.