குஜராத்தில் 182 இடங்களை கொண்டுள்ள சட்ட சபைக்கு டிசம்பர் 1, 5ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இந்த தேர்தல் மூலம் கால் நூற்றாண்டாக அங்கு நடக்கிற தனது ஆட்சியைத் தொடர்வதற்கு பா.ஜ.க. மும்முரம் காட்டி வருகிறது.
குஜராத்தில் இழந்த ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் முழு முனைப்புடன் களம் இறங்கியுள்ளது.இவ்விரு கட்சிகளுக்கும் இடையே டெல்லி மற்றும் பஞ்சாபை ஆளும் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியும் களம் புகுந்து அங்கு மும்முனை போட்டி நிலவுகிறது.
முதல் கட்டமாக தெற்கு குஜராத், கட்ச்-சவுராஷ்டிரா பகுதிகளில் 19 மாவட்டங்களில் அமைந்துள்ள 89 தொகுதிகளில் முதல் கட்ட தேர்தல் இன்று துவங்கியது.
இந்த தேர்தலில் மொத்தம் 788 வேட்பாளர்களின் அரசியல் எதிர்காலம் தீர்மானிக்கப்படுகிறது.இவர்களில், 339 பேர் சுயேச்சை வேட்பாளர்கள் 70 பேர் பெண் வேட்பாளர்கள் ஆவார்கள்.
இன்று முதல் கட்ட தேர்தல் நடக்கிற தொகுதிகளில் 14 ஆயிரத்து 382 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.இவற்றில் 3,311 நகர்ப்புறங்களிலும், 11 ஆயிரத்து 71 கிராமப்புறங்களிலும் உள்ளன.89 மாதிரி வாக்குச்சாவடிகளும், முற்றிலும் பெண் ஊழியர்கள் பணியாற்றும் 611 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த வாக்குச்சாவடிகளில் 2 கோடியே 39 லட்சத்து 76 ஆயிரத்து 670 வாக்காளர்கள் வாக்கு அளிக்க உள்ளனர்.இன்று காலை 8 மணிக்கு துவங்கிய வாக்குப்பதிவு இடைவெளியின்றி 5 மணி வரை வாக்குப்பதிவு நடக்கிறது.