மதுரை மாநகரில் நடமாடும் பசுக்களை மாநராட்சி ஊழியர்கள் பிடித்து அதனை இறைச்சிக்காக அனுப்பும் சம்பவம் நடைபெறுவதாக பாஜக தேசிய முன்னாள் செயலாளர் ஹெச்.ராஜா கூறியுள்ளார்.
இது குறித்து அவர் தனது முகநூல் பதிவில் கூறியிருப்பதாவது:
இன்று மதுரை வழியாக வடுகப்பட்டி செல்லும் வழியில் சில இளைஞர்கள் கன்றுக் குட்டி ஒன்றை மிகக் கொடூரமான முறையில் கீழே தள்ளி கயிற்றால் கட்டுவதைப் பார்த்து அதிர்ந்து போய் கீழே இறங்கிப் பார்த்தேன். அங்கு 4 மாடுகள் மட்டுமே ஏற்ற கூடிய டிரைலரில் 12 மாடுகள் ஏற்றப்பட்டிருந்தன. இது விதி மீறலாகும். உடனே மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன் அவர்களிடம் பேசினேன். அவரும் விதிமீறல் என்பதை ஒப்புக்கொண்டு இனி அவ்வாறு தவறு நடக்காது என்றார்.
இந்தப் பசுக்கள் எங்கே எடுத்துச் செல்லப் படுகின்றன என கேட்ட போது இவை 5 நாட்கள் தொண்டியில் வைத்திருப்போம் பிறகு கோசாலைக்கு அனுப்புவோம் என்றார். ஆனால் நான் அங்கிருந்த சில மணித்துளிகளில் பாதிக்கப்பட்ட சிலர் அங்கு வந்தனர். அவர்கள் கூறிய கள உண்மைகள் அதிர்ச்சி அளிக்கக் கூடியதாக உள்ளது.
ஆரோக்கியமாக வீதிகளில் உள்ள கன்று கமிஷனரின் பராமரிப்பில் எப்படி உள்ளது என்பதை கீழ்க்கண்ட வீடியோவில் பார்க்கவும். இவ்வாறு பிடிக்கப்படும் பசுக்கள் ஏலம் என்ற பெயரில் வெட்டுக்கு அனுப்பப் படுவதாக பாதிக்கப்பட்டவர்கள் கூறுகின்றனர்.
பசுக்களின் உரிமையாளர்கள் அபராதம் கட்டி தங்கள் பசுக்களை கேட்டாலும் தராமல் வெட்டுக்கு அனுப்புவதாக குற்றம் சாட்டப் படுகின்றன.இந்த செயலில் கமிஷனருக்கு உதவியாக இருப்பவர் ஜெயகிருஷ்ணன் எனும் கால்நடை மருத்துவர். வீதியில் திரியும் மாடுகளை பிடிக்கிறேன் என்கிற போர்வையில் மிகப்பெரிய ஊழல் நடப்பதை உணர முடிகிறது. பாஜக மற்றும் இந்து இயக்க நண்பர்கள் இது குறித்து கவனிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















