தர்மபுரி தொகுதி தி.மு.க., எம்.பி., செந்தில்குமாரின் பல செயல்பாடுகள் சர்ச்சையை ஏற்படுத்தின. தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த ஆலாபுரம் ஏரி புனரமைப்பு பணி கடந்தாண்டு ஜூலையில் துவங்கிய போது, ஹிந்து மத முறைப்படி பூஜை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்கு, தர்மபுரி தி.மு.க., – எம்.பி., செந்தில்குமார், கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
இதேபோன்று, நல்லம்பள்ளியில் நடந்த நிகழ்ச்சியிலும், தி.மு.க.,வினரை கண்டித்தார். இதனால் அவர் ஹிந்து மதத்துக்கு எதிராக செயல்படுவதாக மக்களிடையே அதிருப்தி ஏற்பட்டது.
இந்நிலையில், லோக்சபாவில், காஷ்மீர் மாநிலம் தொடர்பான மசோதாக்கள் மீது நடந்த விவாதத்தில் செந்தில்குமார், சமீபத்தில் 3 மாநில தேர்தல்களில் பா.ஜ., வெற்றி பெற்றது குறித்து பேசுகையில் குறிப்பிட்டதாவது: ஹிந்தி பேசும் கோமூத்ரா மாநிலங்கள். பா.ஜ.,வால் தென்னிந்தியாவில் வெல்ல முடியாது. கோமூத்ரா மாநிலங்கள் என நாங்கள் அழைக்கும் ஹிந்தி பேசும் மாநிலங்களில் மட்டும்தான் வெல்ல முடியும்.
தமிழகம், ஆந்திரா, கேரளா மற்றும் தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களை பா.ஜ., யூனியன் பிரதேசங்களாக மாற்றினால் ஆச்சர்யப்பட மாட்டேன். இதன் மூலம் நீங்கள் மறைமுகமாக அதிகாரத்திற்கு வரலாம். அங்கு தடம் பதிக்க முடியும் எனவும், தென் மாநிலங்களை தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடியும் என உங்களால் கற்பனைகூட செய்து பார்க்க முடியாது என பேசியுள்ளார்.