செங்கல்பட்டு மாவட்டம் செய்யூரில் உள்ள மிகப் பழமையான சிவன் கோவில் அமைந்த ஊர்.
இங்கு தானம் அளித்தவர்களுக்கு வாரிசு இல்லாததைப் பயன்படுத்தி தனிநபர் ஆக்கிரமிப்பு.
காசி-ராமேஸ்வரம் புனிதப் பயணம் செய்ய பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்ட பாதையில் இந்தக் கோவில் அமைந்துள்ளது
இந்து முன்னணியின் முயற்சியால் தானமாக வழங்கப்பட்ட கோவில் நிலத்தை ஆக்கிரமித்திருந்த தனியாரிடம் இருந்து கோவில் சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளன. செய்யூர் தாலுகா கடப்பாக்கம் கிராமத்தில் விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் கோவில் அமைந்துள்ளது.
காசி-ராமேஸ்வரம் புனிதப் பயணம் மேற்கொள்ள பயன்படுத்தப்பட்ட பழமையான வழிப் பாதையில் இந்தக் கோவில் அமைந்துள்ளது.
இந்தக் கோவில் கடந்த 1903ஆம் ஆண்டு நரசிம்மாச்சாரி என்பவரால் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. காசி-ராமேஸ்வரம் புனிதப் பயணம் மேற்கொள்பவர்களுக்கு அன்னதானம் அளிக்க சத்திரம் கட்டிய அவர், அதற்கு தேவையான உணவுப் பொருட்களை விளைவிக்க கோவிலைச் சுற்றியுள்ள 18.5 ஏக்கர் நிலத்தை தானமாக எழுதிக் கொடுத்துள்ளார்.
இதில் 14.90 ஏக்கர் புஞ்சை நிலம், 4.04 ஏக்கர் நஞ்சை நிலம். நரசிம்மாச்சாரி இறந்த பின்னர் அவரது மகன் கோவிந்தாச்சாரி, மகள் புஷ்பம்மாள் ஆகியோரும் வாரிசுகள் இல்லாமல் இறந்து விட்டதாகக் கூறப்படுகிறது.
காலப்போக்கில் வேறு இடங்களில் சாலைகள் அமைக்கப் பட்டதால் இந்த வழிப்பாதை பயனற்று போயிருக்கிறது.
இதனால் கோவில் பழைய பொலிவை இழந்த நிலையில், கோவிலுக்கு எழுதிக் கொடுத்த நிலத்தின் பட்டா 50 வருடத்திற்கும் மேல் ‘நரசிம்மாச்சாரி வாரிசுகள்’ என்ற பெயரில் தனி நபர்கள் சிலரால் அனுபவிக்கப்பட்டு வந்துள்ளது.
தனியார் நிர்வாகத்தில் கிராமக் கோவிலாக செயல்பட்டு வந்த இந்தக் கோவிலை 2008ஆம் ஆண்டு வாக்கில் இந்து சமய அறநிலையத் துறை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளது.
அதன் பின்னர் 2014ஆம் ஆண்டு வாரிசுகள் என்று இருந்த பட்டாவை ஆக்கிரமிப்பாளர்கள் தங்கள் பெயரில் மாற்றம் செய்துள்ளனர். மேலும் வேறு சிலருக்கு அந்த சொத்துக்களை 99 வருட குத்தகைக்கு விட்டுள்ளனர்.
இது குறித்து அரசு அதிகாரிகளிடம் புகார் அளித்த அப்பகுதியில் வசித்து வரும் பக்தர்கள் ஆலய நில மீட்பு குழு அமைத்து பல ஆண்டுகளாக நிலத்தை மீட்க போராடி வருகின்றனர்.
ஆலய நில மீட்பு குழுவினர் உரிய ஆதாரங்களுடன் நிலத்தை மீட்க முயற்சித்தும் எதிர்தரப்பினர் வராததால் தொடர்ந்து இழுபறியாக இருந்து வந்துள்ளது.
பின்னர் வட்டாட்சியர் நில உரிமையாளர் குறித்து ஆய்வு செய்தபோது கிராம கணக்கு பதிவேட்டில் எந்த மாற்றமும் செய்யப்படாமல் கணினியில் மட்டும் பட்டா மாற்றம் செய்திருந்ததை கண்டறிந்துள்ளார்.
கிராம கணக்கு சிட்டாவில் பதிவு செய்யாமல் கணினியில் மட்டும் சிட்டா மாற்றம் செய்து முறைகேடாக வாரிசுதாரர்கள் மாற்றப்பட்டிருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
முறைகேடாக பட்டா மாற்றம் செய்யப்பட்டதால் போலியாக பதியப்பட்ட பட்டாவை ரத்து செய்தும் கோவிலின் பெயரில் புதிதாக பட்டா பதிவு செய்தும் தரக்கோரி நில மீட்பு குழுவினர் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து பட்டா மாற்றத்தை ரத்து செய்து உத்தரவிட்ட வட்டாட்சியர் அதுகுறித்து கோவிலின் முன் அறிவிப்பு பலகையும் வைக்க ஏற்பாடு செய்துள்ளார்.
ஆனால் அதன் பின்னர் கோவில் பெயரில் பட்டா பதிவு செய்ய எந்த முயற்சியும் எடுக்கப்படாததால் தொடர்ந்து ஆக்கிரமிப்பாளர்கள் நிலத்தை முறைகேடாக பயன்படுத்தி வந்துள்ளனர்.
நிலத்தை மீட்க அறநிலையத்துறை அக்கறை காட்டாததால் பக்தர்கள் அதிருப்தி அடைந்த நிலையில், இந்து முன்னணி மற்றும் ஆலய மீட்பு குழுவின் தொடர் முயற்சியால் தற்போது நரசிம்மாச்சாரி கோவிலுக்கு என்று எழுதிக் கொடுத்த 18.5 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட நிலத்துக்கு கோவிலின் பெயரில் பட்டா பதிவு செய்த அதிகாரிகள் தற்போது இந்த நிலத்தின் மதிப்பு 60 கோடி என்று தெரிவித்துள்ளனர்…..