திருப்பரங்குன்றம் நிகழ்வில் மதநல்லிணக்கத்தை உயர்த்திப்பிடிக்கும் வகையில், திமுக-திராவிடர் கழகம்- காங்கிரஸ்-மதிமுக-விசிக-சிபிஎம்-சிபிஐ-ஐயூஎம்எல்-மநீம-மமக-கொமதேக-தவாக உள்ளிட்ட கட்சிகள் கூட்டறிக்கை வெளியிட்டிருந்தன இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவியும் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் அவர்கள் காட்டமான அறிக்கையை வெளியிட்டுள்ளார் அதில் அவர் கூறியுள்ளதாவது:
தமிழ்நாட்டிலும் இந்துக்கள் விழித்தெழுந்து விட்டார்களே என்ற கோபமும், ஆத்திரமும், பதற்றமும் ‘இண்டி’ கூட்டணி கட்சிகளின் கூட்டறிக்கையில் தெரிகிறது. தமிழ்க் கடவுள் முருகனுக்கு சொந்தமான, திருப்பரங்குன்றம் கந்தர் மலையில், ஆக்கிரமிப்பாளர்களால் கட்டப்பட்ட சிக்கந்தர் தர்காவில், ஆடு, கோழிகளை பலியிட சில இஸ்லாமிய அமைப்புகள் திடீரென முயற்சி மேற்கொண்டது தான் பிரச்னையின் ஆரம்பப் புள்ளி. அதை தடுத்த தமிழக காவல்துறையும், அரசு அதிகாரிகளும், சிக்கந்தர் தர்காவில் பலியிடும் வழக்கம் இருந்ததற்கான ஆதாரம் இல்லை என்று கூறியுள்ளனர்.
சிக்கந்தர் தர்காவில் ஆடு, கோழிகளை பலியிடும் வழக்கத்தை புகுத்த நினைத்தது யார்? தமிழ்க் கடவுள் முருகனுக்கு சொந்தமான கந்தர் மலையை, சிக்கந்தர் மலை என்று அழைத்தது யார்? இது தமிழ்க் கடவுள் முருகனுக்கு சொந்தமான இடத்தை அபகரிக்கும் முயற்சியா? இல்லையா?
இந்துக்கள் தங்கள் உரிமைக்காக போராடும் போதெல்லாம் மதச்சார்பின்மை பாடம் எடுக்க திமுக கூட்டணி கட்சிகள் வந்துவிடுகிறார்கள். மதம் இல்லை என்று சொல்லி, இந்து மதத்தை மட்டும் அழித்தொழிக்க திராவிடர் கழகம் தொடங்கப்பட்டது. அந்த திராவிடர் கழகம் என்ற இந்து விரோத சக்தியில் இருந்து கிளர்ந்து எழுந்தது தான் திமுக. அதனால்தான் அவர்கள், ஆட்சிக்கு வந்து முதலமைச்சரான பிறகும், பிற மத பண்டிகைகளுக்கு வாழ்த்து கூறுகிறார்கள். இந்து மத பண்டிகைகளுக்கு மட்டும் வாழ்த்து கூறுவதில்லை.
இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்கள். அவர்களை எப்படி வேண்டுமானாலும் ஏமாற்றி விடலாம் என்று திமுக கருதுகிறது. அதனால் தான், தேர்தல் வந்துவிட்டால் திமுகவில் இருப்பவர்களில் 90 சதவீதம் பேர் இந்துக்கள் தான் என்பார்கள். குடும்பத்தினர் கோயில்களுக்கு செல்லும் படங்களை வெளியிடுவார்கள். இப்போது, ‘இண்டி’ கூட்டணி கட்சிகளின் கூட்டறிக்கையில், இந்து விரோத திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணியும் கையெழுத்துட்டுள்ளார். ஆனால் தேர்தல் நேரத்தில் அவருடன் இணைந்து திமுகவினர் பிரசாரம் செய்ய மாட்டார்கள். இந்துக்களை ஏமாற்ற இப்படியொரு நாடகத்தை நடத்தி வருகிறார்கள்.
மதச்சார்பற்ற திமுக அரசு இந்து கோயில்களை மட்டுமே நிர்வகிக்கிறது. ஆனால், இந்து கோயில்களுக்கு ஏதாவது ஆபத்து வந்தால், கோயில்களுக்கு எதிரானவர்கள் பக்கம் நிற்கிறது. சென்னையில் மெட்ரோ ரயில் நிலையத்திற்காக பழமையான இந்து கோயில் ஒன்று இடிக்கப்படும் சூழல் எழுந்தார் போது, அதனை தடுத்து நிறுத்த கோயிலை நிர்வாகிக்கும், இந்து சமய அறநிலைத்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், பக்தர்கள் நீதிமன்றம் சென்று தான் தங்களுக்கான நீதியை பெற வேண்டி இருந்தது இப்படிப்பட்ட அக்கிரமம், அராஜகம் தமிழ்நாட்டில் நடந்து வருகிறது.
திருப்பரங்குன்றத்தில் தமிழ்க் கடவுள் முருகனுக்குச் சொந்தமான கந்தர் மலையை அபகரிக்க சில அடிப்படை வாதிகள் முயற்சித்தனர். அதனை தடுத்து நிறுத்த இந்து முன்னணி எதிர்வினையாற்றியது. அதில் பாஜகவும் பங்கெடுத்தது. பிரச்னையை துவங்கிய இஸ்லாமிய அமைப்புகளோடு கரம் கோர்த்துக் கொண்டு, இந்துக்கள் தங்களை தற்காத்துக் கொள்ள எடுத்த போராட்டத்தை கண்டு மிரண்டு போய், இந்துக்களுக்கு மதச்சார்பனை பாடம் எடுத்து வருகிறார்கள்.
இந்து மதம் என்பது அமைப்பு ரீதியானது அல்ல. கட்டற்ற சுதந்திரம் கொண்டது. ஆனால், மற்ற மதங்களுக்கு வலுவான கட்டமைப்பு உள்ளது. அவர்கள் அமைப்பு ரீதியாக இயங்குகிறார்கள். அவர்களின் வாக்குகள் மொத்தமாக இந்து விரோத ‘இண்டி’ கூட்டணி கட்சிகளுக்கு கிடைக்கிறது. அதனால், திமுக உள்ளிட்ட இந்து விரோத ‘இண்டி’ கூட்டணி கட்சிகள், எப்போதுமே இந்துக்களுக்கு விரோதமாகவே செயல்படுகின்றன. ‘ இண்டி’கூட்டணி கட்சிகளின் கூட்டறிக்கையின் ஒவ்வொரு வரியிலும், ஒவ்வொரு எழுத்திலும், இந்து விரோதம் அப்பட்டமாக வெளிப்படுகிறது. “தமிழகத்திலும் இந்துக்கள் விழித்தெழுந்து விட்டார்களே..”, என்ற கோபமும் ஆத்திரமும் பதற்றமும், தெரிகிறது. இனி அடிக்கடி ‘இண்டி’ கூட்டணி கட்சிகள் இப்படி பதற வேண்டியிருக்கும். என அந்த அறிக்கையில் இண்டி கூட்டணியை விளாசி தள்ளியுள்ளார்.