ஐ.ஏ.எஸ்., தேர்வில் தமிழகத்தில் முதலிடம் பிடித்து கோவை மாணவி சாதனை !
”விவசாய துறையில் உள்ள நவீன தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்கு கொண்டு செல்வதே குறிக்கோள்,” என, குடிமைப்பணித் தேர்வில் வெற்றி பெற்ற மாணவி ஸ்வாதி ஸ்ரீ தெரிவித்தார்.
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட சிவில் சர்வீஸ் பணிகளுக்கான தேர்வு கடந்த ஜன., யிலும், அதில் வெற்றி பெற்றவர்களுக்கான நேர்முக தேர்வு கடந்த ஏப்., மாதமும் நடந்தது. இறுதி தேர்வு முடிவுகள் இன்று(மே 30) வெளியிடப்பட்டது. அதில், 685 பேர் தேர்ச்சி பெற்றனர். கோவையை சேர்ந்த ஸ்வாதி ஸ்ரீ தேசிய அளவில், 42-வது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்
கோவை தொப்பம்பட்டியை சேர்ந்த தியாகராஜன் – லட்சுமி தம்பதியின் மூத்த மகள் ஸ்வாதிஸ்ரீ, 25. இளங்கலை வேளாண் பட்டதாரி. வேளாண் கல்வி மீது பள்ளி பருவத்திலிருந்தே நாட்டம் அதிகம். கோவை வேளாண் பல்கலையின் கீழ், தஞ்சாவூரில் உள்ள தனியார் வேளாண் கல்லுாரியில், இளங்கலை வேளாண் பட்டம் பெற்றவர். மூன்றாவது முறையாக தேர்வு எழுதி வெற்றி பெற்றுள்ளார்.
தேர்வில் வெற்றி பெற்றது குறித்து ஸ்வாதிஸ்ரீ கூறியதாவது: தேசிய அளவில், 42 வது இடம், தமிழகளவில் முதலிடம் பிடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. தாத்தா – பாட்டி வேளாண் தொழிலில் ஈடுபட்டதை பார்த்து ஆசைப்பட்டே வேளாண் படிப்பில் சேர்ந்தேன். பட்டம் பெற்ற பின் குடிமைப்பணித் தேர்வை எழுதினேன். சென்னை மனிதநேயம் அறக்கட்டளை, அறம் பயிற்சி மையத்தில் குடிமைப்பணி தேர்வுக்கான பயிற்சிகளை பெற்றேன்
முதல் முறை எழுதிய தேர்வில், எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கவில்லை. இரண்டாம் முறை தேசிய அளவில், 126 இடம் பிடித்து ஐ.ஆர்.எஸ்., பணிக்கு தேர்வானேன். ஐ.ஏ.எஸ்., ஆக வேண்டும் என்பதால் மூன்றாவது முறையாக தேர்வு எழுதினேன். இதில் தேசிய அளவில், 42 வது இடம், பெற்றுள்ளேன். பொதுமக்களின் சவால்களை, கஷ்டங்களை தீர்க்கும் விதமாக கொள்ளை ரீதியான முடிவெடுப்பேன்.
விவசாயிகளின் வாழ்வாதார பிரச்சனைகளை தீர்க்க முன்னுரிமை தருவேன். விவசாய துறையில் உள்ள நவீன தொழில்நுட்பங்களை கண்டறிந்து அதை விவசாயிகளுக்கு கொண்டு செல்வதே குறிக்கோள். அப்பா சுயதொழில் செய்து வருகிறார். அம்மா போஸ்ட் ஆபிஸில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். தங்கை உள்ளார். இது என் பெற்றோரின் கனவு. அதனால், அவர்களுக்கு இவ்வெற்றியால் மிக்க மகிழ்ச்சி. இவ்வாறு அவர் கூறினார்.