‘ஒரே தேசம், ஒரே ரேஷன்’ கார்டு திட்டத்தில் உத்திரப்பிரதேசம், பீகார், பஞ்சாப், ஹிமாச்சலப்பிரதேசம் ஆகிய மாநிலங்களும், டையூ மற்றும் டாமனில் இன்று இணைந்துள்ளன.
நெருக்கடியான தற்போதைய சூழ்நிலையில் இந்த வெளிமாநிலங்களில் உள்ளோருக்கு இந்த திட்டம் மிக பெரிய உதவியாக இருக்கும். தமிழகத்திலும் இந்த திட்டத்தை அமல்படுத்தியிருந்தால் பெரும்பாலான வெளிமாநில தொழிலாளர்களுக்கு பேருதவியாக இருந்திருக்கும் என்பதோடு அவை தமிழகத்தின் கட்டமைப்புகளை தொடர்வதற்கு, தொழில் வளத்தை மேம்படுத்துவதற்கு மிக பெரிய பங்கினையாற்றியிருக்கும். கட்டுமான தொழில், வர்த்தக நிறுவனங்கள்,தனியார் தொழிற்சாலைகள், உணவு விடுதிகள், எரிவாயு நிலையங்கள், சிறு கடைகள் என்று எங்கு திரும்பினாலும் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் வெளிமாநிலத்தவரே அதிக அளவில் உள்ளனர் என்பதை யாராலும் மறுக்க முடியாது.
தொற்றுக்கான எதிர்ப்பு மருந்தை கண்டுபிடிக்க இன்னும் பல மாதங்களோ அல்லது ஒரு சில வருடங்களோ ஆகும் என்ற நிலையில், உணவு மற்றும் சுகாதாரத்திற்காக அவர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்புகின்ற அவர்களின் தேவைகளை நாம் உணர மறுக்கிறோம். மாநில அரசோ, தொண்டு நிறுவனங்களோ, மற்ற அமைப்புகளோ சில நாட்களுக்கு வேண்டுமானால் அவர்களுக்கு உணவு வழங்குவதில் உதவி புரியலாம். ஆனால் இது நீண்ட நாட்களுக்கு சாத்தியமல்ல. உடனடியாக ‘ஒரே தேசம், ஒரே ரேஷன்’ திட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்துவதோடு, சிகிச்சைக்கான சுகாதார காப்பீட்டையும் இங்கே எளிதில் பெறுவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்.
இல்லையேல்,மனித ஆற்றல் குறைவால், அன்றாட நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டு பல்வேறு துறைகளில் மிக பெரிய இழப்பை தமிழகம் சந்திக்கும். மாநில உரிமை என்பது போன்ற வறட்டு பிடிவாத வாதங்களை செய்யாமல்,அரசியலுக்காக மக்களை தூண்டிவிடாமல், தமிழகத்தின் பொருளாதார மேம்பாட்டை கருத்தில் கொண்டு, அனைத்து அரசியல் கட்சிகளும் இந்த விவகாரத்தில் ஒத்துழைக்க வேண்டியது மிக அவசியம்.தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கும் என உறுதியாக நம்புகிறேன்.
இல்லையேல் திடகாத்திரமான தமிழகம் திண்டாடும்.
கட்டுரை :- நாராயணன் திருப்பதி பாஜக செய்தி தொடர்பாளர்.