சேலம் மாநகரில், தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனைவரும் பங்கேற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில், பெரும் திரளென, ஆர்ப்பரிப்புடன் கலந்து கொண்ட பொதுமக்கள் மத்தியில், நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திரமோடி எழுச்சி உரையாற்றினார்.
அப்பொழுது அவர் பேசியதாவது கோட்டை மாரியம்மனை வணங்கித் தொடங்கிய தனது உரையில், தமிழகத்தில், தமக்கும், பாஜகவுக்கும் கிடைத்துக் கொண்டிருக்கும் பொதுமக்களின் அன்பையும் ஆதரவையும், நாடே இன்று கவனித்துக் கொண்டிருக்கிறது என்று பெருமையுடன் குறிப்பிட்ட நமது பிரதமர் அவர்கள், இதனால் திமுக தனது தூக்கத்தைத் தொலைத்திருக்கிறது என்றும் குறிப்பிட்டார்.
வரும் ஏப்ரல் 19 தேர்தல் அன்று, ஒவ்வொரு வாக்கும் பாஜகவுக்கும், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் என மக்கள் முடிவு செய்து விட்டார்கள் என்று கூறிய நமது பிரதமர் அவர்கள், தேசிய அளவில் 400 தொகுதிகளுக்கும் மேல் நிச்சயம் வெற்றி பெறப் போகிறோம் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
வளர்ச்சியடைந்த பாரதத்திற்கு, வளர்ச்சியடைந்த தமிழகத்துக்கு, நவீன உட்கட்டமைப்பு வளர்ச்சிக்கு, உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக உருவாக, பாரதம் தன்னிறைவு பெற, விவசாயிகள் பயனடைய, மீனவர்கள் பாதுகாப்புக்கு, என, இம்முறை 400 தொகுதிகளுக்கும் மேல் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைப்போம் என்று உறுதி தெரிவித்தார்.
தமிழகத்தில், தேசிய ஜனநாயகக் கூட்டணி மிகவும் வலுவான கூட்டணியாக உருவாகியிருக்கிறது என்று கூறிய நமது பிரதமர், பாமக நிறுவனர் ஐயா ராமதாஸ் அனுபவமும்,
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆற்றலும், தமிழகத்தை புதிய உயரத்துக்குக் கொண்டு செல்ல உதவும் என்றும் மகிழ்ச்சி தெரிவித்த நமது பிரதமர், பாட்டாளி மக்கள் கட்சியை, தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மகிழ்ச்சியுடன் வரவேற்றார்.
தாம் பல முறை சேலம் வந்திருப்பதாகக் குறிப்பிட்ட நமது பிரதமர் அவர்கள், இம்முறை சேலத்திற்கு வரும்போது, தம்முடைய கைலாஷ், மானசரோவர் பயணத்தின்போது உடன் வந்த,
சேலத்தைச் சேர்ந்த அமரர் திரு ரத்தினவேல் அவர்களை நினைவு கூர்ந்தார். சேலம் மாநகரின் சிறப்புக்களைக் குறித்து அமரர் திரு. ரத்தினவேல் அவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்ட பின், சேலம் மாநகரின் மீது பெரும் ஈர்ப்பு உருவானதாகத் தெரிவித்தார்.
சேலம் மாநகரத்தைச் சேர்ந்த, பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் அமரர் K.N.லட்சுமணன் அவர்களை நினைவுகூர்ந்த நமது பிரதமர் அவர்கள், நெருக்கடி நிலையின்போது கூட, தடைகளை மீறிப் போராட்டம் நடத்தியவர்,
தமிழகத்தில் பாஜக காலூன்றுவதற்காக, ஆரம்ப காலத்தில் பாடுபட்டவர், என்று புகழாரம் சூட்டினார். மேலும், பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட ஆடிட்டர் ரமேஷ் அவர்களை நினைவுகூர்ந்தபோது, கண்கலங்கிய நமது பிரதமர் அவர்கள், கட்சிக்காக தனது உயிரைத் தியாகம் செய்த ஆடிட்டர் ரமேஷ் அவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தினார்.
திமுக காங்கிரஸ் அமைத்துள்ள இந்தி கூட்டணியின் நோக்கம், இந்து மதத்தை அழிப்பது மட்டுமே என்பது, அவர்களின் முதல் கூட்டத்தில் இருந்தே தெளிவாகிவிட்டது என்று கூறிய நமது பிரதமர் அவர்கள், இந்து மதத்தில் சக்தி வழிபாடு எத்தனை முக்கியமானது என்பதைப் பற்றிப் பேசிய நமது பிரதமர், கோட்டை மாரியம்மன், காஞ்சி காமாட்சி அம்மன், மதுரை மீனாட்சி அம்மன், கன்னியாகுமரி பகவதி அம்மன், சமயபுரம் மாரியம்மன் என, நமது வழிபாடே பெண்களை முன்னிறுத்திய சக்தி வழிபாடாகத்தான் இருக்கிறது.
ஆனால், திமுக காங்கிரஸ் இந்தி கூட்டணியின் நோக்கம் சக்தி வழிபாட்டை அழிக்க முயற்சிப்பதே என்றும் குற்றம் சாட்டினார். வேண்டுமென்றே, இந்து மதத்தை அவமதிப்பதும், திட்டமிட்டு, இந்து மதத்துக்கு மட்டுமே எதிராகச் செயல்படுகிறார்கள் என்றும் குறிப்பிட்டார். மேலும், இந்திக் கூட்டணிக் கட்சிகள், தமிழர்களின் பாரம்பரியமான, இந்து மத அடையாளமான செங்கோலை, புதிய நாடாளுமன்ற மையக்கட்டிடத்தில் வைப்பதை தடுக்க முயற்சித்தார்கள் என்றும் குற்றம் சாட்டினார்.
கடவுளை பெண்வடிவில் சக்தியாக, பாரத அன்னையாக வழிபட்ட மகாகவி பாரதியார் வழியில், தாமும் ஒரு சக்தி உபாசகர் என்று குறிப்பிட்ட நமது பிரதமர் அவர்கள், சக்தி வழிபாட்டை அழிக்க நினைத்தவர்கள் அனைவரும் அழிந்து போனதுதான் வரலாறு என்று குறிப்பிட்டார். மேலும், இந்தி கூட்டணியின் அழிவு,
ஏப்ரல் 19 அன்று முதல் கட்டத் தேர்தல் நடக்கவிருக்கும் தமிழகத்தில் இருந்துதான் தொடங்கப்போகிறது என்று உறுதியுடன் தெரிவித்தார்.
சக்தியின் வடிவமான நமது சகோதரிகளுக்கு, புகையில்லா சமையல் செய்ய, இலவச சமையல் எரிவாயு இணைப்பு, இலவச மருத்துவ சிகிச்சைக்காக ஆயுஷ்மான் திட்டம், தமிழகத்தில், மூன்று கோடியே 65 லட்சம் பேருக்கு இலவச ரேஷன் பொருள்கள்,
வீடுதோறும் சுத்தமான குடி நீர் தரும் ஜல்ஜீவன் திட்டம், நாட்டிலேயே முத்ரா கடனுதவி அதிகம் வழங்கப்பட்ட தமிழகத்தில், பெண்கள்தான் அதிகம் பயனடைந்துள்ளனர் என்று குறிப்பிட்ட நமது பிரதமர், பெண்களுக்கான இந்த நலத்திட்டங்களால் பலனடைந்த நாடு முழுவதும் உள்ள பெண்கள்தான் தமக்கும், பாஜகவுக்கும் தற்போது பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்றும் பெருமையுடன் தெரிவித்தார்.