இந்தியா சீன எல்லையில் பதற்றம் அதிகரித்து வந்த நிலையில் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றது. மேலும் சீன இராணுவ வீரர்கள் எல்லை பகுதியில் இருந்து சற்று பின்வாங்குவதாக உடன்படிக்கை ஏற்பட்டுள்ளது என இராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து இந்தியா-சீனா ராணுவ படைப் பிரிவு தளபதிகள் நிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், கிழக்கு லடாக் எல்லையில் மோதல் போக்கை விலக்கிக் கொள்ள உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கிழக்கு லடாக் எல்லையில், கால்வன் பள்ளதாக்கு, பாங்கோங்சோ ஏரி உள்ளிட்ட 5 இடங்களில் இந்திய-சீன வீரர்கள் இடையே மோதல் போக்கு ஏற்பட்டது. கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டு பகுதியில், சீன வீரர்களின் அத்துமீறலால், மே மாதம் 5ஆம் தேதி இருதரப்புக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டு, கற்களை வீசிக் கொண்டதில் வீரர்கள் காயமடைந்தனர்.
இதைத் தொடர்ந்து ராணுவ அதிகாரிகள் நிலையில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. கடந்த 6ஆம் தேதி, இரு நாட்டு ராணுவ படைப் பிரிவு தளபதிகளின் நிலையில் நடத்தப்பட்ட பேச்சில், மோதல் போக்கை விலக்கிக் கொள்ள உடன்பாடு ஏற்பட்டது. ஆனால், இந்த உடன்பாட்டில் முறிவு ஏற்பட்டுத்தான், ஜூன் 15ஆம் தேதி மோதல் நிகழ்ந்து, இரு தரப்பிலும் உயிர் பலிகள் நேரிட்டன. உடன்பாட்டின்படி பின்வாங்கிச் செல்லாத சீன வீரர்களுடன் ஏற்பட்ட மோதலில், இந்திய தரப்பில் 20 வீரர்கள் உயிர்த்தியாகம் செய்தனர். சீனா தரப்பில் 43 வீரர்கள் இறந்துள்ளார்கள் ஆனால் அதை சீனா மறைத்து வருகிறது.
இதன் பின் இருநாட்டு அரசும் படைகள் தொடர்ந்து குவித்து வந்தன . இந்நிலையில், இரு நாட்டு ராணுவ படைப் பிரிவுகளின் தளபதிகள் மட்டத்தில் நேற்று மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. சீனப் பகுதியில் மோல்டோ என்ற இடத்தில் நடைபெற்ற பேச்சில், இந்திய தரப்பில் லெப்டினென்ட் ஜெனரல் ஹரீந்தர் சிங் பங்கேற்றார். சீன தரப்பில் மேஜர் ஜெனரல் லியு-லின் பங்கேற்றார். முற்பகல் 11.30 மணிக்கு தொடங்கி, இரவு 11.45 மணி வரை 12 மணி நேரத்திற்கும் மேல் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து, ராணுவ தலைமைத் தளபதி ஜெனரல் மனோஜ் நரவானே, இன்று லடாக் சென்று கள நிலவரத்தை ஆய்வு செய்த பிறகு, அங்கு ராணுவ அதிகாரிகளோடு ஆலோசனை நடத்துவதோடு, வீரர்களோடும் உரையாட உள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில்தான், லெப்டினென்ட் ஜெனரல் நிலையில் 12 மணி நேரம் நேற்று நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை, சுமூகமாகவும், ஆக்கபூர்வமாகவும் நடைபெற்று உடன்பாடு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இரு தரப்பும் கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டில் மோதல் போக்கை விலக்கிக் கொள்வது என உடன்பாடு ஏற்பட்டிருப்பதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. உரசல் ஏற்பட்ட பகுதிகளில், மோதல் போக்கை எப்படி முடிவுக்கு கொண்டுவருவது என்பது குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டுள்ளது.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















