கலைநயமும் அருளும் பழைமையும் மிக்க ஆலயங்கள் மட்டும் இந்நாட்டின் அடையாளம் அல்ல, தனிபெரும் அதிசயமாய் கடவுளின் குழந்தைகளாய் விளங்கும் யோகிகளும் சித்தர்களும் இந்நாட்டின் மாபெரும் அதிசயங்கள்
இந்நாட்டின் செல்வத்துக்கு ஆசைபட்டு வந்த அலெக்ஸாண்டர் தான் கண்டதில் பெரும் செல்வம் இவரென ஒரு சித்தரை அழைத்துகொண்டு தாயகம் திரும்பினான்..
இப்பூமி எத்தனையோ சிவனடியார்களை கொடுத்தது, அதுவும் தென்னகம் சிவனை கொண்டாடியது
பட்டினத்தார் முதல் எத்தனையோ சிவனடியார்கள் வந்தார்கள், எவ்வளவோ புலவர்கள் வந்தார்கள்
அட சோழ மன்னன் முதல் பாண்டிய மன்னன் வரை சிவனடியார்களாகவே வாழ்ந்தார்கள்
இம்மண்ணின் நெல் முதல் மாடுகள் வரை சிவனுக்காகவே வளர்ந்தன, கல்முதல் கனி வரை அவருக்காகவே படைகபட்டன
அப்படிபட்ட சிவனின் மண் இது, அப்பூமி அகத்தியர் தொடங்கி பட்டினத்தார் என எத்தனையோ சிவ யோகிகளை கொடுத்தது
அதிலும் திருவண்ணாமலை அள்ளி அள்ளி கொடுத்து கொண்டே இருந்தது, அது பட்டினத்தாரை கண்டது நம் கண்முன்னால் ரமணரை கண்டது
அவருக்கு பின் அப்படி ஒரு சிவபக்தனை ஞானியினை தமிழகம் இவர் உருவில்தான் கண்டது, கையில் விசிறியும் ஒரு கொட்டங்கச்சியுமாக ஒருவர் திருவண்ணாமலை பக்கம் உலாவியபொழுது யாரும் கண்டுகொள்ளவில்லை
ஆனால் கொஞ்சநாளில் அவரின் அருமை தெரிந்து அவரை பெரும் ஞானி என ஏற்றுகொண்ட கூட்டம் பெருகிற்று, பெரும் ஞானமார்க்கத்தை காட்டிவிட்டு இன்றும் அவரின் பக்தர்களுக்கு அரூபியாய் ஜொலிக்கின்றார் அம்மகன்
யோகிராம் சுரத்குமார் எனும் விசிறி சாமியார்
அவர் வடக்கத்திய பிறப்பு, பெரும் படிப்பு படித்தவரும் கூட, ஆனால் ஏதோ ஒரு சக்தி அவரை சாமியாராக்கி திருவண்ணாமலைக்கு அழைத்து வந்தது.
ஸ்ரீஅரவிந்தரிடம் ஞானமும் ரமணமகரிஷிரிட யோக தவமும் கற்றார் சுரத்குமார்
உண்மையில் இருவரின் வாரிசாக அவர் இருந்தார், ரமணர் எனும் ஞானமுனி அவருக்கு கொடுத்த ஞானமும் தவமும் மகத்தானது.
உலகெல்லாம் இருந்து ஏராளமானோர் ஞானம்பெறும் அந்த ஞானபூமியான திருவண்ணாமலை அவரையும் ஏற்றுகொண்டது, கையில் ஒரு விசிரியும், கொட்டாங்கச்சியும் கிழிந்த ஆடையுமே அவரின் சொத்தாயின
பட்டினத்தார் கையில் இருந்த கரும்புக்கு வாழ்வின் தொடக்கம் இனிமை, முடிவு கடுமை என தத்துவம் சொன்னார், இவர் கையில் இருந்த விசிறி , அவர்மக்களின் மனதில் இருக்கும் புழுக்கத்தை விரட்ட வந்தவர் என்பதை குறிப்பதாக அவரே சொன்னார், கொட்டங்கச்சி துறவு கோலம்
அந்த மகான் ஆங்கிலத்தில் பேசியிருக்கின்றார், ஆனால் அழுக்கு உடையும் பரதேசி கோலமுமாக அலைந்திருக்கின்றார், அவர் அங்கு செய்யா அற்புதமில்லை அவரிடம் வந்து ஏமாந்து சென்றவர் யாருமில்லை
தன்னை அண்டி வந்தவர்கெல்லாம் அவ்வளவு அற்புதங்களை செய்திருக்கின்றார், செய்துவிட்டு “என் தந்தையின் விருப்பம்” என அவர் சொன்னதுதான் உருக்கமான இடம்
ஆம் இயேசு பைபிளில் சொன்ன அதே வார்த்தை
கண்ணதாசன் கடைசி காலங்களில் காஞ்சிபெரியவரை எப்படி அணுகினாரோ அப்படி ஆன்மீக எழுத்தாளர் பாலகுமாரன் அவரை அணுகினார், பாலகுமாரனின் அந்த தாயுமானவன் எனும் அற்புதநூல் அதனாலே பிறந்தது
உண்மையில் அந்த விசிறி சாமியாரிடம் ஒரு விஷேஷித்த சக்தி இருந்திருக்கின்றது, மகா உண்மையான தூய துறவியாய் அவர் இருந்தார் அல்லது நல்ல துறவி எப்படி இருக்க வேண்டுமோ அதில் கொஞ்சமும் பிசறாகமல் இருந்தார்
அழுக்கு உடை, கையில் கொட்டாங்கச்சி, மரத்தடி தூக்கம், பிச்சைக்கார கோலம், பசியெடுத்தால் அவர் சிரட்டையினை ஏந்தினால் யாரோ காபி பால் ஊற்றுவார்கள் அதை உறிஞ்சிவிட்டு அவர்போக்கில் இருக்கும் அந்த தியானம் அல்லது வெறித்த பார்வை
ஆனால் யாருக்கு என்ன உதவி வேண்டுமோ அல்லது யார்மேல் கடவுளின் கருணை இருக்கின்றதோ அவர்களை மட்டும் தேர்ந்தெடுத்து இரண்டொருவார்த்தை சொல்லி அவர்களின் வாழ்வினையே உயர்த்திவிட்டு அவர்போக்கில் செல்லும் அந்த வாழ்வு
அவரால் வாழ்வுபெற்றோர் பொன்னும் பொருளும் கோடியும் கொண்டு அவர் காலடியில் கொட்டினாலும் அதை எல்லாம் குப்பையாக பார்த்துவிட்டு நகர்ந்து சென்ற அந்த மனம்
எங்கோ பிறந்தேன், பகவான் என்னை தேர்ந்தெடுத்து திருவண்ணாமலைக்கு அனுப்பினார், அங்கே பரதேசி கோலத்தில் வாழ்த்து கடவுளுக்கு உகந்தவர்களுக்கு அவரின் கருணையினை பெற்றுகொடுத்தேன் எல்லாம் என் தந்தையின் விருப்பம் என சொன்ன அந்த மகோன்னதம்
அதுதான் துறவறம், அதுதான் சத்தியமான உயர்ந்த கோலம், அதுதான் உண்மையான சந்நியாசம்
அவர்களிடம் விளம்பரம் இருக்காது, வெற்று கோஷம் இருக்காது, யாருக்கும் சவால் விட மாட்டார்கள், தான் இதை மாற்ற வந்தவன் அதை திருத்தவந்தவன் என ஆணவத்தில் ஆடமாட்டார்கள்
தன்னால் முடியாதது எதுவுமில்லை என்ற சவாலோ பெரும் ஆணவ உறுமலோ அவர்களிடம் இருக்காது
எங்கு யாருக்கு என்ன தேவையோ? அது நியாயமாக இருக்கும் பட்சத்தில் தன்னை வெளிகாட்டிவிட்டு விளக்கில் மறையும் பூதம் போல் மறைந்துவிடுவார்கள் அத்துறவிகள்
அமைதியான நதிபோல் இருபபர்கள், அதில் அலை இருக்காது ஆவேசமிருக்காது ஆனால் ஆழம் யாரும் காணமுடியா அளவு இருக்கும்
நம்பிக்கை வைத்து நம்பினால் அவர்களின் விஸ்வரூபத்தை காணலாம் , ராமாயணம் அதை தெளிவாக சொல்கின்றது
குரு எக்கோலத்திலும் இருப்பார், நம்பிக்கை வைத்தபொழுது அவர் விஸ்வரூபமெடுப்பார் என சொல்வது ராமாயணமே
ராமாயணத்தில் மாபெரும் வீரனும் பெரும் அரசனுமான ராமன் விஸ்வாமித்திரரின் சீடரான ராமன் ஒரு குரங்கை அப்படி நம்பினான்
அட இக்குரங்குக்கு சக்தி இருந்தால் அது வாலியினை ஒழித்திருக்காதா? இந்த சுக்ரீவனிடம் அடைந்து கிடக்குமா? என ராமன் சந்தேகித்தால் ராமாயணமே இல்லை
ஆம் நமக்கான குரு எந்தவடிவிலும் இருக்கலாம், நாம அவர்மேல் வைக்கும் நம்பிக்கையினை பொறுத்தே பலன் கிடைக்கும்
மிக சரியான பலம்வாய்ந்த குருவினை கண்டடையும் பொழுதுதான் ஆச்சரியங்கள் நிகழும், ராமனுக்கு பெரும் ஆச்சரியத்தை கொடுத்த அனுமான் அதுவரை அடங்கித்தான் இருந்தான்
ராமனுக்காக அவன் விஸ்வரூமெடுத்தான் தன் பலத்தை காட்டினான் மறுபடி அடங்கி சாதுபோல் இருந்தான்
ராமனின் அவதாரத்துக்கு பக்கதுணையாய் இருப்பதே தன் பணி என அவன் உணர்ந்திருந்தான்
பாரதத்தில் இக்காட்சி வேறுமாதிரி வரும் பாண்டவர் கண்ணனை ஞான வழிகாட்டியாக ஏற்றனர் வென்றனர், துரியோதன் குலபெருமைக்காக வீம்புபிடிக்கும் பீஷ்மரை ஏற்றனர் அழிந்தனர்
ஞானமிக்கவன் தேடலுக்கும் ஆணவக்காரனின் தேடலுக்கும் உள்ள வித்தியாசம் இதுதான்..
நல்ல ஞான குருக்களும், சித்தர்களும் , துறவிகளும் எக்கோலத்திலும் இருக்கலாம், அவர்களை கண்டடைந்து ஏற்றுகொள்வதில்தான் விஷயமும் வாழ்வும் உண்டு
அவர்கள் நமக்காக காத்தே இருக்கின்றார்கள், மனிதனே அவர்களை கண்டடைய சிரமபடுகின்றான், மாயை அவன் மனதை அப்படி மறைகின்றது, ஞானம் எனும் ஒளிவராமல் மாயை மேகம் மறையாது
ஞானம் கொண்டோரே தகுந்த குருவினை அடைய முடியும்..
யோகி ராம்சுரத்குமாரை அப்படித்தான் ஏற்றுகொண்டனர் அவரின் பக்தர்கள், அவர்கள் மிக சரியான பாதைக்கு சென்றிருக்கின்றார்கள், கடவுளின் கருணை அவர்களுக்கு இருந்திருக்கின்றது
நல்ல குருவினை கண்ட மகா திறமையானவர்கள் அழியா காவியங்களையும் ஆன்மீக படைப்புகளையும் கொடுத்திருக்கின்றார்கள்
அல்லது யாரால் எது முடியுமோ அவன் எந்நிலையில் இருந்தாலும் அவனை அடையாளம் கண்டு மாற்றும் சக்தி குருவுக்கு மட்டுமே உண்டு
ராமாயணம் எழுதிய வால்மிகி அப்படித்தான் ஒரு குருவால் மாற்றபட்டான்
விளையாட்டு பிள்ளையாக இருந்த நரேந்திரனை விவேகானந்தராக்கினார் ராமகிருஷ்ணர் எனும் குரு
தமிழ்நாட்டு நாத்திக கும்பலில் சேர்ந்து ஆடாத ஆட்டம் ஆடிய கண்ணதாசனை ஆன்மீக எழுத்தாளராக்கி அழியா புகழ்பெற வைத்தார் காஞ்சி பெரியவர்
சினிமா வசனங்களிலும் , நாவல்களிலும் தன் வாழ்வினை கடத்திகொண்டிருந்த பாலகுமாரனை மிக சரியாக அணுகி அவரை மாபெரும் ஆன்மீக எழுத்தாளனாக்கினார் யோகிராம் சுரத்குமார்
பின்னாளில் பாலகுமாரன் அவரின் பேனாவாக இருந்தார், அதில் கரம்பிடித்து ஆன்மீகம் எழுதியதெல்லாம் யோகியே. இதை பாலகுமாரனே சொல்லியிருகின்றார்
இன்று அந்த யோகி சிவனின் பாதங்களில் இரண்டற கலந்த நாள், அரூபியான நாள். அந்த மகானுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்
சிவநாமம் சொல்லும் இடங்களில் மட்டுமல்ல, திருவண்ணாமலை காற்றில் மட்டுமல்ல, பாலகுமாரனின் ஞானமும் தெய்வாம்சமும் நிறைந்த எழுத்துக்கள் இருக்கும் இடமெல்லாம் அவர் வாழ்வார்,
எக்காலமும் அரூபியாய் தன்னை அழைப்போருக்கு வளம் அருளிகொண்டே இருப்பார்.
கட்டுரை :- எழுத்தாளர் ஸ்டான்லி ராஜன்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.













