சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொண்ட தொலைக்காட்சி நிகழ்ச்சி டிஸ்கவரி சேனலில் பியர் க்ரில்ஸின் ‘இன் டு தி வைல்ட்’ நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சி அடர்ந்த வனப்பகுதியில் நடக்கும் சாகச நிகழ்ச்சி. அப்போது பியர் க்ரில்ஸுடன் சேர்ந்து வனப்பகுதிகளில் ஆபத்தான பயணத்தை மேற்கொண்டார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இந்த நிகழ்ச்சி (மார்ச் 23) இரவு டிஸ்கவரி தமிழ் சேனலில் ஒளிபரப்பப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் பியர் க்ரில்ஸ் உடனான பயணத்தின்போது, அவர் எழுப்பிய பல கேள்விகளுக்கு உற்சாகமாய் பதிலளித்தார் ரஜினி. அதில், “இந்தியாவில் நீங்கள் நடக்க வேண்டும் என்று நினைக்கும் விஷயங்கள் என்ன?” என்று ரஜினியிடம் பியர் க்ரில்ஸ் கேள்வி எழுப்பினார்.
அதற்கு ரஜினி, “ஏழ்மையைப் போக்க வேண்டும். வேலையில்லா திண்டாட்டத்தைப் போக்க வேண்டும். இந்தியா கலாச்சார ரீதியாக, மத ரீதியாக மிகவும் வளமான நாடு. பொருளாதார ரீதியாகவும் வளமாக மாற வேண்டும். அதுதான் என் கனவு. இந்தியாவைப் பற்றி ஒரு விஷயத்தைச் சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். இந்த நாட்டில் நான்கு முக்கிய மதங்கள் இருக்கின்றன. இஸ்லாம், கிறிஸ்துவம், பவுத்தம், இந்து.
இஸ்லாம், பவுத்தம், கிறிஸ்துவத்துக்கென நிறைய நாடுகள் உள்ளன. ஆனால் இந்துக்களுக்கு ஒரு நாடுதான் உள்ளது. அதுதான் இந்தியா. நேபாளம் என்ற சிறிய ராஜ்ஜியம் இருக்கிறது. ஆனால் அதையும் மீறி நாம் இங்கு வாழ்கிறோம். எல்லா மதங்களையும் ஏற்றுக்கொண்டு வாழ்கிறோம். எல்லா மதத்தைச் சேர்ந்தவர்களும் சகோதரர்களாக வாழும் நாடு இந்தியா மட்டுமே.
இதுதான் இந்த தேசத்தின் மிகப்பெரிய நற்குணம். இந்த நாட்டின் சகிப்புத்தன்மை, மற்றவர்களுக்கான மரியாதையை நினைத்து நான் பெருமைப்படுகிறேன். வேற்றுமையில் ஒற்றுமை.பஞ்சபூதம் என்று சொல்கிறோமே, நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் என இந்த பஞ்சபூதங்களையும் இந்துக்கள் இந்தியாவில் கடவுளாக வணங்குகிறார்கள். மரம், பாறைகள், நதிகள் என அனைத்தையும் கடவுளாகப் பார்க்கிறார்கள். இது ஒரு சிறந்த கலாச்சாரம்” என்று பதிலளித்தார் ரஜினி.
அதனைத் தொடர்ந்து பியர் க்ரில்ஸ், “நீங்கள் நிறைய யோகா செய்வீர்கள் என்று கேள்விப்பட்டேனே?” என்று கேள்வி எழுப்பினார். அதற்கு ரஜினி, “ஆம். நிறைய அல்ல. 4-5 ஆசனங்கள் செய்வேன். முக்கியமாகப் பிராணாயாமம் என்கிற மூச்சுப் பயிற்சியைச் செய்வேன். அது மிகவும் உதவிகரமாக இருக்கிறது. நம்மை அமைதிப்படுத்தும். மனதை இலகுவாக்கும். அதுவே அற்புதமான ஒரு மருந்தைப் போலச் செயல்படுகிறது” என்று தெரிவித்தார் ரஜினி.
தொகுப்பு : இந்துத் தமிழ் திசை