மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரணம் (HADR) வழங்குவதற்கு உடனடி நடவடிக்கைகள் எடுப்பதற்காக அம்பான் புயலின்போது நாட்டின் கிழக்குப் பகுதிகளில், நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக இந்திய விமானப்படை மிக ஆயத்தமான நிலையில் உள்ளது. இப்பணிகளுக்காக நிலையான இறக்கைகள் (fixed wings) கொண்ட 25 விமானங்கள் மற்றும் 31 ஹெலிகாப்டர்களும் உட்பட 56 கனரக மற்றும் நடுத்தர ரக லிப்ட் அசெட்டுகள் (assets) இந்திய விமானப் படையால் ஒதுக்கப்பட்டுள்ளது.
நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்குத் தேவையான கருவிகள் பொருத்தப்பட்டு இந்த விமானங்கள்/ ஹெலிகாப்டர்கள் சற்று திருத்தி அமைக்கப்பட்டன. பல்வேறு இந்திய விமானப்படைத் தளங்களில் போதுமான அளவு விமானப் படைக் குழுவினருடன், இவை தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. சிவில் நிர்வாகம் மற்றும் தேசியப் பேரிடர் நிவாரணப் படைக்குழுவினருடன் விமானப்படைத் தலைமையகத்தில் உள்ள நெருக்கடி நிர்வாகப் பிரிவு தொடர்ந்து ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறது.
தேசிய பேரிடர் நிவாரணப் படையைச் சேர்ந்த 4 குழுவினர், இரண்டு சி-130 விமானங்கள் மூலம் ஏற்றிச் செல்லப்பட்டனர். இரு குழுக்கள் பூனேயிலிருந்தும், இரு குழுக்கள் அரக்கோணத்திலிருந்தும் 21 மே 2020 அன்று கொல்கத்தா சென்றடைந்தன. இந்த குழுக்களுடன், தேசிய பேரிடர் நிவாரணப் படைக் குழுவினால் மேற்கொள்ளப்படும் நிவாரண நடவடிக்கைகளுக்குத் தேவையான 8.6 டன் எடைகொண்ட கனரக கருவிகளும். இயந்திரங்களும் ஏற்றிச் செல்லப்பட்டன.